தொல்காப்பியப் பூங்கா
பகுதி 100 · 102 / 102
மரபியலின் முந்தைய நூற்பாவில் தவிர்க்கப்பட வேண்டிய குற்றங் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. இந்த நூற்பா, நூலுக்கு ஒத்து வரக் கூடிய உத்திவகைகள் முப்பத்திரண்டு எனக் குறிப்பிட்டு; பிறவும் கூட என்று கூறுகிறது. கூறியதைக் கூர்மையாக அறிதல், அதிகாரங்களை ஒழுங்குற வரிசைப்படுத்தல், இறுதியாகச் செம்மையாகத் தொகுத்துக் கூறுதல், முறைப்படுத்தி உண்மையை உறுதிப்படுத்துதல், சொன்னதைக் கொண்டு சொல்லாததை நிறைவு செய்தல், வாராது கூறுங்கால் எனைய வரும் என முடித்தல், வந்ததை வைத்து வாராததை உணர்த்தல், முதலில் கூறிய முறையை பிறகு சிறிதளவு மாற்றிக் கூறுதல், அதனைப் பொருந்தும் வண்ணம் வாய்மையுடன் கூறுதல், ஒன்றே சொல்லுதல், இரண்டும்கெட்டான் நிலை என்றில்லாமல் தன் கொள்கையை வெளிப்படுத்தல், நூலில் கடைப்பிடிக்கப்படும் முறை பிறழாதிருத்தல், பிறர் உடம்பட்டதைத் தானும் ஏற்றுக் கொள்ளல், முதலில் கூறியதை இறுதிவரை பாதுகாத்தல், விதிமுறை போற்றுதல், தெளிவுபடுத்துவோம் எனல், கூறினோம் எனல், புதிதாகக் குறியிடுதல், ஒரு சார்பு இல்லாதிருத்தல், முன்னோரின் முடிவை நினைவூட்டுதல், அமைத்துக் கொள்க எனக் கூறல், பல பொருட்கள் இருப்பினும் அவற்றுள் நல்ல பொருள் கொள்ளுதல், வகுத்தும் தொகுத்தும் வரையறுத்தல், எதிர்க் கருத்தை மறுத்து தன் கருத்தின் வலிமையை நிலைநாட்டுதல், பிறர் கருத்தை சான்றாகப் பொருத்திக் கொள்ளுதல், பெரியோர் கருத்தையேற்று அதையே, தானும் கூறுதல், கருத்து விளக்கத்திற்கு வேறு பொருள்களையும் பயன்படுத்தல், மாற்றுப் பொருளையும் உணர்த்துதல், சொன்ன சொல்லில் உள்ள குறையை திருத்தி நிறைவு செய்தல், தேவைக்கு அதிகமாக தன் கருத்தை வலியுறுத்தாதிருத்தல், எதையும் நன்றாக நினைவுபடுத்திக் கூறுதல், கூறும் கருத்தைக் கேட்போர் உய்த்து உணரும்படி கூறல் என முப்பத்திரண்டு உத்திகளுடன் பிற உத்திகளையும் கருவிகளாகக் கொண்டு நீக்கப்பட வேண்டிய தவறுகளை நீக்கம் செய்து நூல் படைக்கப்பட வேண்டும்.
இதற்கான நூற்பாதான் இந்தத் தொல்காப்பியப் பூங்காவின் நூறாவது மலராக மலர்ந்து உங்கள் கரங்களில் நூறு மலர்களும் தொகுக்கப் பெற்று வழங்கப்பட்டுள்ளது. “ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் நுதலியது அறிதல், அதிகார முறையே, தொகுத்துக் கூறல், வகுத்து மெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல், வாராததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது உணர்த்தல் முந்து மொழிந்ததன் தலை தடுமாற்றே ஒப்பக் கூறல், ஒருதலை மொழியே தன் கோள் கூறல், முறை பிறழாமை, பிறன் உடம்பட்டதுதான் உடம்படுதல் இறந்தது காத்தல், எதிரது போற்றல் மொழிவாம் என்றல், கூறிற்று என்றல் தான்குறியிடுதல், ஒரு தலை அன்மை முடிந்தது காட்டல், ஆணை கூறல் பல்பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன்துணிபு உரைத்தல் பிறன் கோட் கூறல், அறியாது உடம்படல் பொருள் இடையிடுதல், எதிர்பொருள் உணர்த்தல் சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல் தந்துபுணர்ந்து உரைத்தல், ஞாபகம் கூறல் உய்த்துக் கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்ல பிற அவண் வரினும் சொல்லிய வகையால் சுருங்க நாடி மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்து கொண்டு இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 111) காலத்தால் பாணினிக்கும், கெளடில்யருக்கும் முற்பட்ட தொல்காப்பியரின் இலக்கிய இலக்கண இன்பத்தில் நானும் மூழ்கித் திளைத்து உங்களையும் பூங்கா புக அழைத்தேன்.
வந்தோரை வெறுங்கையுடன் அனுப்புவது தமிழர் பண்பாடல்ல என்ற முறையில் நூறு மலர்களை அள்ளித் தந்திருக்கிறேன் உங்கள் அமுதக் கரங்களில்! ‘பூங்கா புகுமுன்’ எனத் தலைப்பிட்டு - சில பூக்கள் கொய்து தருகின்றேன் வாரீர் என்றேன். “புது முயற்சி செய்யப் போகின்றான்; இந்தப் பூங்காவில் இவன் நுழைந்து என்ன மலர் பறிப்பான்” என்று சின்னவர் முதல் பெரியவர் வரை எல்லாரும் அவர்களுளே பேசியது மட்டுமன்றி, அதையும் என்னிடமே கேட்கலானார்!
“குறளுக்கு ஓவியம் தீட்டினீர் - எமக்குக் குளிர்ந்தது இதயம்; உண்மை! சங்கத் தமிழ் இலக்கியம் கண்டீர்; தங்கத் தமிழ் அதுவென ஒப்புக் கொண்டோம்! குறள் முழுமைக்கும் உரையே யாத்தபோது திறன் போற்றி வாழ்த்துச் சொன்னோம். இலக்கியப் பசி உமக்கு நிரம்ப உண்டெனினும் - புலவர் ஆக்கி வைத்தால் அள்ளி உண்பீர் என எண்ணியிருந்த எம்கணக்கெல்லாம் பொய்யாகிப் போனது போல் பசியாற மட்டுமல்ல இலக்கியத்தைப் படைப்பதற்கும் தெரியுமெனக் காட்டி - இதோ பரிமாறியும் இருக்கின்றீர்!
தொல்காப்பியத்தைத் தொடுவதற்கே தனித் துணிவு வேண்டுமெனத் தமிழ்ப் புலவர் பேசும்வேளை; கல் குத்தும் காலில், முள் குத்தும் தோளில் எனத் தெரிந்தும் காட்டு வழிக் கடும் பயணம் எப்படி மேற்கொண்டீர்” என்றார்! “அறிவாளிகள் நுழைய அஞ்சும் இடத்தில் அஞ்சாமல் ஒருவன் நுழைவான்” எனும் ஆன்றோர் மொழி மெய்ப்பிக்கும் வண்ணம் அடியேன் நுழைந்தது காடல்ல பூங்கா என்று; அழகு மலர் அறிவு மலர் அன்பு மலர் ஆதி காலத் தமிழ்ப் பண்பு மலர் பல பறித்து வந்து உம் பாத மலர்களில் பாசமுடன் காணிக்கை வைத்துள்ளேன் இலக்கண இலக்கியச் சுரங்கம் அது; இப்போதுதான் புரிகிறது தொட்ட இடமெல்லாம் பொன்னும் மணியும் வட்ட நிலாப் பூவாய் மலர்ந்து வாசம் கமழும் புதுமை!
எழுத்து சொல் பொருள் எனும் எழிலார் பூங்கொத்து கண்டும்; வெட்சி வஞ்சி உழிஞை தும்பை காஞ்சி எனும் திணைப் பூக்களின் தேன் மணம் நுகர்ந்தும்; களவியல் கற்பியல் பொருளியல் மெய்ப்பாட்டியல் மரபியல் எனும் இயல்களிலே பழமை புதுமை எலாம் இணைந்தும் - இனிய மலர் நூறாக வழங்கியுள்ளேன் - இதை ஒரு நூலாக வழங்கியுள்ளேன்! “தொல்காப்பியப் பூங்கா” அமைத்துத் தேர்ந்தெடுத்த தேன் மலர்களை வழங்கிட ஓய்வின்றி நான் உழைத்த போது உடனிருந்து; நான் எழுதிக் குவித்ததை உடனுக்குடன் தட்டச்சு செய்து கொடுத்தும், இஃதோர் நூலாக வடிவெடுத்திட தொய்வில்லா உழைப்பை வழங்கித் துணை நின்ற அன்புத் தம்பி சண்முகநாதனுக்கும், இந்நூலை வெளியிடும் தமிழ்க்கனி பதிப்பகத்தாருக்கும், அணிந்துரை வழங்கிய அருந்தமிழ்ப் பேராசிரியர் அன்பழகனார் அன்புப் புலவர் நன்னன் ஆகியோர்க்கும் அழகுற அச்சியற்றி அளித்துள்ள அச்சகத்தார்க்கும் ஓவியர்கள் ஜெயராஜ், மணியம் செல்வன், ஷியாம், பிரேம்குமார், கரோ ஆகியோருக்கும் நன்றியும், வாழ்த்தும்!
அன்புள்ள [கையொப்பம்]
