உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 91 · 93 / 102

“பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பினஃ துவம மாகும்” (பொருளதிகாரம் - உவமையியல் - நூற்பா : 9) உவமிக்கப்படும் பொருளை உவமையாகக் கூறினாலும் குழப்பமற்ற (மயக்கமற்ற) சிறப்புத் தன்மையினால்; ஒன்றோடொன்றை ஒப்பிடும் உவமையாகவே நின்று பொருள் தெளிவதற்குப் பயன்படுமென்கிறது இந்த நூற்பா! நூற்பாவில் ‘பொருள்’ என்பதும், ‘அஃது’ என்பதும் உவமேயத்தையே குறிப்பிடுவதாகும். இதற்குப் பேராசிரியம்; பின்வருமாறு விளக்கம் தருகிறது.

“வருமுலை யன்ன வன்முகை யுடைந்து திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை” எனும் சிறுபாணாற்றுப்படை செய்யுளை நினைவுபடுத்தி அந்த நிலையில் வருமுலையும் திருமுகமும் இங்கே உவமையாகி, முகையும் பூவும் பொருளாயின; அங்கே முலையும் முகமும் உயர்ந்தவாகச் செய்தமையின் அவையே உவமை ஆயின என்கிறது பேராசிரியம். மேலும், இவை உவமைத்தொகை யாங்கால் முலைக் கோங்கம் முகத் தாமரை எனப்படும். முகமொக்கும் தாமரை யென்றால் முகத்திற்கும் தாமரைக்கும் சிறப்புடைமை மயங்கி வராது.

முகத்திற்கே சிறப்பாம் என்றும் பேராசிரியம் விளக்குகிறது. ‘தாமரை முகம்’ என்பதை ‘முகத் தாமரை’ என மாற்றி உவமை கூறுமிடத்துவரும் உவம வேறுபாட்டினைப் பிற்கால அணி இலக்கண நூலார் ‘உருவகம்’ எனப் பிரித்தோர் அணியாகக் கொள்வர். இங்கனம் வருவதனை ‘உருவகம்’ என வேறோர் அணி ஆக்காது, உவமையின் வகையாகக் கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்து என்பது இளம்பூரணமும், பேராசிரியமும் தந்துள்ள உரை விளக்கங்களால் புலனாகும் என்கிறார் வெள்ளைவாரணனார்.

உவமம் = உவமை உபமானம் = ஒரு பொருளுக்கு ஒப்பாக உரைக்கத்தக்க உயர்பொருள் உவமேயம் = உவமிக்கப்படும் பொருள் கோங்கம் = ஒரு மலர் மருள் = மயக்கம்