உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 90 · 92 / 102

“உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்” (பொருளதிகாரம் - உவமையியல் - நூற்பா : 8) உவமையும் பொருளும் படிப்போர் அல்லது கேட்போர் மகிழ்ந்து ஏற்குமளவுக்கு ஒத்தனவென்று அமைந்திட வேண்டும். உதாரணமாக ‘துடியிடை’ என்கிற போது ‘துடி’ என்பதற்கு ‘உடுக்கு’ எனப் பொருள் கொள்கிறோம். அடி வயிறுப் பகுதியும், மார்புப் பகுதியும் அகன்று விரிந்த தோற்றத்துடனும் - இடைப்பகுதி சுருங்கிய தோற்றத்துடனும் - அதாவது மேல் பகுதியும் கீழ்ப் பகுதியும் விரிந்து இடையே குறுகியிருப்பதால் ‘துடியிடை’ என உவமை கூறப்படுகிறது.

மேலும் கீழும் விரிந்திருந்து, இடையே குறுகியிருந்தால் போதும் என்பதற்காக இடைக்கு உவமையாக உரலைக் காட்ட முடியுமா? முடியாது! காட்டப்படுவதில்லை! அதனால்தான் உவமையானாலும் பொருளானாலும் ஒத்தனவாகவும் ஏற்கத்தக்க வகையிலும் இருக்க வேண்டுமென இந்நூற்பா குறிப்பிடுகிறது. இதுபற்றிக் கூறும் பேராசிரியம்; ‘மயில் தோகை போலும் கூந்தல்’ என்று சொல்லாமல், ‘காக்கைச் சிறகன்ன கருமயிர்’ என்று சொன்னால் அது ஒத்ததெனப் படாது என்கிறது.

அதனால் ‘காக்கைச் சிறகே’ வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகி விடாது. தேசியக் கவி பாரதியார் “காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா” என இயற்றியுள்ள பாடலில் கரிய நிறமோ, காக்கைச் சிறகோ உவமையாகப் பயன்படுத்தப்படவில்லை யெனினும் - பாராட்டுக்குரிய பொருள்களாகவே குறிப்பிடப்படுகின்றன. ‘அருவியன்ன கூந்தல்’ என்கிற போது; அப்படியென்றால் நரைத்த கூந்தலா எனக் கேட்கக் கூடாது.

அவ்வளவு அடர்த்தியாகவும், நீளமாகவும் அமைந்த கூந்தல் என்று மட்டுமே அந்த உவமையை எடுத்துக் கொள்ள வேண்டும். ‘கருவண்டுகள் போன்ற கண்கள்’ எனும் உவமை கூறப்படும் போது, கண்கள் வண்டு போல கால்கள் பெற்றிருப்பதில்லையே; பறப்பதில்லையே என்றெல்லாம் ஐய வினா தொடுத்து உவமையின் சிறப்பைக் குலைத்து விடவும் கூடாது. “தமக்குத் தோன்றியவற்றையெல்லாம் உவமையாகக் கூறாது, எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடையன என உலகத்தார் ஒத்துக் கொள்ளத் தக்கவற்றையே உவமையாகக் கூறுதல் வேண்டும்” என்று பெரும்புலவர் வெள்ளைவாரணனார் இந்நூற்பா பற்றி விளக்கமளித்திருப்பது கருதத் தக்கது.