தொல்காப்பியப் பூங்கா
பகுதி 89 · 91 / 102
“கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்” (பொருளதிகாரம் - உவமையியல் - நூற்பா : 5) இதற்கு முதல் கூறப்பட்டவாறு உவமை தோன்றிட சிறப்பு, நலன், காதல், வலிவு எனும் நான்கு நிலைக்களங்களையல்லாமல் ஐந்தாவதாக ஒரு நிலைக்களமும் உண்டாம். அது தாழ்ந்த பொருளோடும் உவமை பொருந்துமிடத்து உவமிக்கப்படும். கிழக்கிடு பொருள் என்றால் கீழ்ப்படுத்தப்படும் பொருள் அல்லது இழிவான - தாழ்வான பொருள் எனப்படுவதாகும். “பேரூர் ஒன்றில் ஐந்து கழுதைகளை வைத்துக் கொண்டு சலவைத் தொழில் நடத்திக் கொண்டிருந்தான் ஒருவன்.
ஒரு நாள் இரவு அவற்றில் ஒரு கழுதை காணாமற் போய் விட்டது. அதைத் தேடியலைந்தான் இரவு முழுதும். கடைசியாக விடியற்காலை நேரம் ஒரு வீட்டில் கழுதை கத்துகிற குரல் கேட்டது. “ஆகா! கண்டேன் என் கழுதையை!” என்று சப்தமிட்டுக் கொண்டு அவன் அந்த வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டுக் கூடத்தில் - அந்த விடியற்காலை நேரத்தில் - அந்த வீட்டுப் பாகவதர் சங்கீத சாதகம் பண்ணிக் கொண்டிருந்தார். ஓடி வந்தவனைப் பார்த்து வியப்புடன் “என்ன விஷயம்?”
என்று கேட்டார் பாகவதர். “என் கழுதை காணாமல் போய் விட்டது. தேடியலைகிறேன். உன் சங்கீதம் என் கழுதையின் குரல் போலவே இருந்ததால் இங்கு வந்தேன்” என்றான். “சரிதான் போடா! நாய் மாதிரி குரைக்காமல் வெளியே போடா!” என்று ஆத்திரமாகக் கத்தினார். இருவருக்கும் வாய்த் தகராறு முற்றிப் போய் பெரிய அமளியே ஏற்பட்டது. அப்போது எதிர் வீட்டுக்காரர் எழுந்து வந்து “என்னய்யா; நரிகள் மாதிரி ஊளையிடுகிறீர்கள்?”
எனக் கேட்டார். இருவரும் சேர்ந்து அவரிடம் சண்டைக்குச் சென்றார்கள். அப்போது அவ்வழியாக வந்த இலக்கணப் பண்டிதர் ஒருவர்; அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டுச் சொன்னார்; “கழுதையை உவமையாக்கியதும் நாய், நரிகளை உவமையாக்கியதும் உவமை இயலில் வரும் ஐந்தாவது உவமை நிலைக்களமாகும். அதாவது ஒரு பொருளின் இழிவைப் புலப்படுத்தி வருதாம். உவமையினால் அதன் இயல்பு தோன்றக் கூறுவது இயல்பு ஆதலால் கிழக்கிடு பொருள் எனப்படும்.”
அவர் சொன்னதைப் புரிந்து கொள்ள முடியாததால்; ஏதோ நல்ல வார்த்தை சொல்லி சமாதானப்படுத்துகிறார் என அவர்கள் நினைத்து; சப்தம் போடுவதை நிறுத்திக் கொண்டார்கள். சண்டை ஓய்ந்தது. இந்தக் கதையின் மூலம் உவமையின் நிலைக்களங்கள் கிழக்கிடு பொருளையும் சேர்த்து ஐந்தாகிறது.
