உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 88 · 90 / 102

“சிறப்பே நலனே காதல் வலியோடு அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப” (உவமையியல் - நூற்பா : 4) உவமை என்பது அதைவிட உயர்ந்தவைகளுடன் உவமிக்கப்பட்டாலும் அவை ‘சிறப்பு’ - ‘நலன்’ - ‘காதல்’ - ‘வலிமை’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரும் என்பது இந்த நூற்பாவின் கருத்தாகும். இந்த நூற்பாவையொட்டி; நான் எழுதிய “ரோமாபுரிப் பாண்டியன்” எனும் வரலாற்றுப் புதினத்திலிருந்து சில மேற்கோள்களை இந்த உவமையியல் இலக்கணத்திற்கேற்ப எடுத்தியம்ப விரும்புகிறேன்.

கி.மு. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு நாள் - சோழப் பெரு மன்னன் கரிகாலனின் திருநகரம் பூம்புகார்ப்பட்டினம் புதிய பொலிவு பெற்றுத் திகழ்ந்தது. சோழர் கொடியும், பாண்டியர் கொடியும் பூம்புகாரின் மருவூர்ப்பாக்கக் கடற்கரையையொட்டிய மாளிகைகளில் இணைந்து பறந்தன. பாண்டியன் பெருவழுதியும் சோழன் கரிகாலனும் அன்றைய தினம் புகார் நகரில் சந்தித்துத் தமது நட்புறவை நிலைநாட்டுகின்றனர். அப்போது புலவர் காரிக்கண்ணனார் இரு வேந்தர்களையும் பற்றிய பாராட்டு வாழ்த்துப் பாடுகிறார்.

“நீயே, தண்புனல் காவிரிக் கிழவனை; யிவனே.....” என்று தொடங்கி, “நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென வரைய சாந்தமும் திரைய முத்தமும் இமிழ்குரல் முரசும் மூன்றுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே” என்று அந்த ஒற்றுமைக்கும் உயர்ந்த நட்புக்கும் புகழ்மாலை சூட்டுகிறார்.

இரு மன்னர்களும் ஒன்றாக அவைக் களத்தில் வீற்றிருப்பது போலவே அந்த அவையில் மட்டுமல்ல; நகர் முழுவதும் இசையும் கூத்தும் ஒன்றிக் கலந்தன எனும்படியாக எங்குநோக்கினும் ஆடலும் பாடலுமாக ஒத்து நிகழ்ந்தன. இந்த உவமை; சிறப்பினை அடிப்படை நிலைக்களமாகக் கொண்டு தோன்றியதாகும். சிறப்பு என்பது இயல்பு வகையாலன்றிச் செயற்கை வகையாற் பெறுவதாகும். நூற்பாவில் குறிக்கப் பெறும் ‘நலன்’ என்பது ஒரு பொருட்கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை.

அதாவது கிணறு தோண்டும் போது ஊற்று இயல்பாகத் தோன்றுவது போல! ‘சிறப்பு’ என்பதோ, குளம் அமைத்து அதற்கு ஆற்றிலிருந்து வாய்க்கால் வெட்டி அதன் மூலம் குளத்தில் தண்ணீர் நிரப்புவது போல! அந்தச் சிறப்புதான் சோழன் கரிகாலனும், பாண்டியன் பெருவழுதியும் ஒன்றாக ஓரவையில் அமர்ந்து இணைந்து நட்பு பாராட்டுவது இசையும் கூத்தும் ஒன்றிக் கலந்தது எனும் உவமைக்கு நிலைக்களமாயிற்று. மருவூர்ப்பாக்கத்தில் வாழும் வணிகர், யவனர், பட்டாடை பருத்தி ஆடை கம்பளி ஆடை நெய்வோர், பொற்கொல்லர், பூ கட்டுவோர், ஓவியர், சிற்பிகள், மாலுமிகள் மற்றும் பட்டினப்பாக்கத்தில் மருத்துவர், மறையோர், அரண்மனை அலுவலர், பாணர், இசைவாணர் அனைவரும் நகரை மேலும் அழகுபடுத்தினர்.

ஏற்கனவே கரிகால் சோழனுக்கு மகத நாட்டு மன்னன் வழங்கிய பட்டி மண்டபமும், வச்சிர நாட்டு அரசன் அளித்த கொற்றப் பந்தரும், அவந்தி நாட்டு வேந்தன் தந்த தோரணவாயிலும்; என எல்லாமே சேர்ந்து ஒளி உமிழ்ந்து புகார் நகரை ஓர் ஓவியப் பொழில் போலவும், சிற்பக் களஞ்சியம் போலவும் ஆக்கியிருந்தன. நகரின் நலன் விளங்கக் கூறப்பட்டுள்ள உவமையானபடியினால் இந்த உவமை ‘நலன்’ என்பதை நிலைக்களமாகக் கொண்டு பிறந்த தாகும். அதே வரலாற்றுப் புதினத்தில் பிறிதோர் அத்தியாயத்தில் ரோமாபுரியில் ஜூனோ என்ற அழகியைச் சந்தித்தபோது செழியன் என்பான் எண்ணிக் கொள்கிறான்.

“அடடே; இந்த ஜூனோவைப் பார்க்கும்போது என் தாமரைதான் ஆண்டவனிடம் வரம் பெற்று தேவதைகளைப் போல இறக்கைகளைக் கட்டிக் கொண்டு இப்படி உரோமாபுரி மண்ணிலே திடீரென்று குதித்திருப்பாளோ?” இவ்வாறு செழியன் நினைப்பது அவன் தாமரை என்ற தன் தமிழ்நாட்டுக் காதலியிடம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதால்; இந்த உவமைக்கு நிலைக்களமாக ‘காதல்’ அமைகிறது. அதே புதினத்தில்; முக்கிய பாத்திரங்களில் ஒருவரான கரிகால் சோழனைப் பற்றி கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பாடல் ஒன்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.

“திருமாவளவன் தெவ்வர்க் கோச்சிய வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் தோளே” காதலியின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு காதலன் காட்டு வழி செல்கிறான். அப்போது அவன் அந்தக் காட்டுக்கு உவமை தேடுகிறான். “கரிகால் திருமாவளவன், தனது பகைவர் மீது வீசிய வேலைக் காட்டிலும் கடியதாம் அந்தக் காடு! காதலியின் தோள்; கரிகாலனின் செங்கோலைப் போல குளிர்ச்சியானதாம்!”

இவற்றில் கரிகாலனின் வேல் வலிமைக்கு; கடிய காடு உவமையாக்கப்படுவது காணும்பொழுது; இந்த உவமைக்கு ‘வலிமை’ நிலைக்களமாகிறது. எனவே, சிறப்பு - நலன் - காதல் - வலிமை இந்த நான்கையும் உவமையின் நிலைக்களம் எனக் கூறும்பொழுது; இவற்றை அடிப்படையாகக் கொண்டில்லாமல் எத்தகைய உவமையும் பிறக்காது.