உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 87 · 89 / 102

உவமையின் சிறப்பால், உவமிக்கப்படும் பொருள் சிறப்படைகிறது என்பதை, “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை” (பொருளதிகாரம் - உவமையியல் - நூற்பா : 3) எனும் உவமையியலின் 3வது நூற்பா சுட்டிக் காட்டுகிறது. செந்தாமரையன்ன முகம் என்கிறபோது உவமிக்கப்படும் பொருளான முகம்; செந்தாமரையுடன் ஒப்பிடும்போது சிறப்படைகிறது. உவமிக்கப்படும் பொருளை விட உவமை சிறப்பானதாக இருக்க வேண்டும். “சிங்கமென நின்றான்” என்கிறபோது மனிதன் உயர்ந்தவனா?

சிங்கம் உயர்ந்ததா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டால் “உவமை”யின் மாற்றுக் குறையும். ஆனால் இங்கே நாம் ஒப்பிட்டு உவமை காண்பது; சிங்கத்தின் வலிமையையும் அதன் கம்பீரத் தோற்றத்தையும் என்கிறபோது உவமைக்கு எடுத்துக் கொண்ட பொருள், உவமிக்கப்படும் பொருளைவிட சிறப்பானதாகவே அமைந்தது எனலாம். பாராட்டுகிற முறையில்; “பாயும் புலி” போன்றவன் பண்டாரக வன்னியன் என்கிற போது உவமை, சிறப்புற அமைகிறது. அதே போலப் பாராட்டுகிற வகையிலே “மலை எலி” போன்றவன் மாவீரன் சிவாஜி என்கிற போது, உவமையின் சிறப்பில் மாற்றுக் குறைகிறது.

உவமிக்கப்படும் பொருள் சிறப்புக்குரியது என்பதால்; இதனை விதிவிலக்காகவே கொள்ள வேண்டியுள்ளது.