தொல்காப்பியப் பூங்கா
பகுதி 86 · 88 / 102
“வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகை பெற வந்த உவமைத் தோற்றம்” (பொருளதிகாரம் - உவமையியல் - நூற்பா : 1) ஒரு பொருளொடு ஒரு பொருளை ஒப்புமை கூறி விளக்குவது “உவமை” என்று அழைக்கப்படும். “முத்தாரம்” போலப் பல்வரிசை என்கிறபோது, பல்வரிசை பொருளாகிறது. முத்தாரம் என்பது உவமையாகிறது. வடமொழி நூலார் பொருளை “உவமேயம்” என்றும், அதற்கு ஒப்புமையாகக் கூறப்படும் பிற பொருளை “உபமானம்” என்றும் கூறுவர், எனக் குறிப்பிடுகிறார் வெள்ளைவாரணனார்.
வடநூலார் வழக்கில் பல்வரிசை என்பது உவமேயம். முத்தாரம் என்பது உபமானம். இவ்வாறே பயிற்றுவிக்கப்படும் நிலையும் கூட உளது! உவமையும் பொருளும் ஆகிய இரண்டின் கண்ணும் - நிறம், வடிவு, செயல், பயன் பற்றி அமைந்த ஒப்புத் தன்மை ‘பொதுத் தன்மை’ எனப்படும். அத்தன்மையை விளக்குவதற்கு அவற்றைச் சார்ந்துவரும் அன்ன, ஆங்க, போல முதலிய இடைச்சொற்களை ‘உவம உருபு’ என்பார்கள். உம் :- மயிலன்ன சாயல் மான் போலத் துள்ளினாள் தொடக்கத்தில் ● குறியிடப்பட்ட நூற்பாவுக்கு விளக்கமாகப் பொருள் காணும்போது, ‘வினை’ என்றால் செயல் - ‘பயன்’ என்றால் விளைவு - ‘மெய்’ என்றால் வடிவம் - ‘உரு’ என்றால் நிறம் எனக் கொள்ளப்படும்.
மேலும் நூற்பாவில் “வகை பெற வந்த உவமைத் தோற்றம்” என்பதற்குப் “பாகுபட வந்த உவமைக்கண்” என்று பொருள்! இவற்றில் பார்வைக்குப் புலனாகும் பொருள்களும் ஒப்புவமைகளும் என்று ஒரு வகையும்; அவ்வாறு அல்லாமல், அந்த உவமைகள் செவியினாலும், நாவினாலும், மூக்கினாலும், மெய்யினாலும், மனத்தினாலும் அறியக் கூடியவை என்று ஒரு வகையும் உண்டு. மொத்தத்தில் பாகுபட வருதல் என்பதாவது கண் முதலிய பொறிகளுக்குப் புலப்படுபவையும், பொறிகளுக்குப் புலனாகாது மனத்திற்குப் புலனாவனவும் என இருவகையாகும்.
எடுத்துக்காட்டி விளக்க வேண்டுமானால்; “சிட்டுப் போலப் பறந்துவிட்டாள்” என்கிற போது அவள் பறந்துவிட்ட செயல் சிட்டுக் குருவி பறப்பதோடு ஒப்பிடப்பட்டுக் கூறியமையால் பறப்பது என்ற வினை அல்லது செயல் அடிப்படையில் “வினை உவமை” ஆகிறது! “மழை நிகர் வள்ளல்” என்றால் மழையைப் போல் பயன்தரக் கூடிய வள்ளல் என்றாகி, “மழை” என்பது “பயனுவமை” ஆகிறது! “சங்கனைய கழுத்து” என்றால்; “வடிவு உவமை” ஆகிறது! “பொன்னார் மேனியள்” என்றால் பொன் போன்ற நிறமுடையவள்.
எனவே “உரு உவமை” எனப்படுகிறது. இவற்றேயன்னியில்; “குழல் போன்ற மொழி” என்பது செவியால் அறிந்து கூறப்படுவது. “தேன் போல் இனிக்கும்” என்பது நாவினால் அறிந்து கூறப்படுவது. “கோடை வெயிலாய் தகிக்கும்” என்பது மெய்யினால் அறிந்து கூறப்படுவது. “மணக்கும் தென்றல்” என்பது மூக்கால் அறிந்து கூறப்படுவது. “...... பசித்த மக்கள் சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின் நிலவே உனைக் காணும் இன்பம் தானோ” - (பாவேந்தர்) என்பது மனத்தால் அறிந்து கூறப்படுவது.
உவமை இயலின் முதல் நூற்பா இவ்வாறு விரித்துரைப்பதுடன், மேற்கூறிய உவமைகள் ஒரேயொரு பொருளில் மட்டும் வருவதின்றி இரண்டும் பலவும் கலந்து வரும் என்பதை “விரவியும் வரூஉம் மரபின என்ப” (உவமையியல் - நூற்பா : 2) (விரவி = கலந்து) எனும் இரண்டாவது நூற்பா குறிப்பிடுகின்றது.
