உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 85 · 87 / 102

கன்னற் சுவையாகக் கனியின் சாறாகக் காந்தப் பிணைப்பாக என்னதான் காதலன் இதயத்தைக் கவர்ந்திழுத்தாலும்; சின்னஞ்சிறு சிசுவாக மடியிற்கிடந்த கால முதல் - பெற்றோர் பொன்னடி நிழலில் வளர்ந்த காலம் வரை மறந்து போமோ? மறக்காத காரணத்தால்தான் மணவிழா அலங்காரம் நடக்கும்போதும் மனங்கலங்கி வாடுகிறாள்; பிரிய வேண்டுமே பெற்றோரை என்று! அந்தப் “புறஞ்செயச் சிதைதலை” யொட்டிப் “புலம்பித் தோன்ற” லில் கூட திறமிகு காதலன் எங்குற்றான்; இங்கில்லாமல் என்ற ஏக்கம் உண்டு அவளுக்கு!

உற்றார் உறவினர் ஒரு கூட்டமே சூழ்ந்திருந்தும் - அவள் ஒருத்தி மட்டும் தனியே இருப்பதாக உணர்ந்தாள்! காதலனைக் கண நேரம் காணாத குறையால் கவலையுற்று “கலங்கி மொழி”ந்தாள் தோழியிடம் எங்குற்றான் அவன் என்று? களிப்பும் கவலையும் ஊமை வெயிலாய்க் காய்ந்ததினாலே “கையறவு” எனும் செயலற்ற நிலை பெற்றாள். இன்ப மாயினும் துன்பமாயினும் எல்லை கடந்து விட்டால் என்ன செய்வதென்று தெரியாத நிலை பிறக்கும்! இது அவளுக்கு மட்டுமில்லை; இயல்பான ஒன்று எல்லோருக்குமே!

“புறஞ்செயச் சிதைதல், புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல், கையறவு உரைத்தலொடு புலம்பிய நான்கே ஆறென மொழிப.” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 18) புறஞ்செய = புறத்தே அணி செய்தல் கையறவு = செயலற்ற நிலை