உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 84 · 86 / 102

“தெரிந்துடம்படுதல்” எனும் மெய்ப்பாடு தொடங்கவும், “கொடுப்பவை கோடல்” எனும் மரபுக்கு இணங்கவும் கனிவுடன் காதலன் தந்த பரிசினைப் பெற்றுப் பணிவுடன் பெற்றோர் கைகளில் வழங்கி திருமண ஒப்புதல் பெற்றிடத் திருமகள் வந்தாள். “தெரு சிரிக்கத் திசையெட்டும் சிரிக்கப் பெயர்கெடுக்கப் பிறந்தவளே! இருமனம் ஒன்று கலந்ததென ஊர் கூட்டிச் சொன்னவளே!! திருமணம் இனிமேல்தான் என்று தெரிவிக்க வந்தவளே!”

உற்றார் உறவினர் ஊரார் அனைவருக்கும் தெரிந்த செய்தி பெற்றோர் எமக்குக் காலந்தாழ்த்தித் தருவதென்ன நியதி?” “தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது தாயே! தயை செய்து தடை சொல்ல வேண்டாம் நீயே! குலப்பெருமை கெடாமல் வாழ்ந்திடுவாள் குமரி; உம் நல உரிமை நலியாமல் காத்திடுவாள் குமரி” - என்று தலைவியின் தோழி தொடர்ந்து கெஞ்சினாள் - அந்தத் தாய், மெளனமாய்த் தந்தையை நோக்கினாள் “தாயைப் போல்தானே மகள் இருப்பாள்; தடையின்றி ஆட்டிவிடு தலையை” என்றார் தந்தை!

“தலை எனக்கு ஆடிக் கொண்டுதானே இருக்கிறது” என தாய் முத்துதிர்த்தாள்! பல்லாண்டுக்கு முன்பே பல் முத்துதிர்த்த பழம்பெருங்கிழவி அவள்! - தாய் ஒத்துக் கொண்டவுடனே; தந்தையும் ஒப்புக் கொண்டார். “தடையென்ன இனித் தழுவிக் கிடக்கலாம் வா” என்றான் தலைவன் “நடையில் வேகம் காட்டு; நடக்காது இப்போ” என்றாள் தலைவி! “ஒளிந்திருந்த நாணம் மடமெல்லாம் இன்று ஓடிவந்தது எப்படியோ?”

என வியந்தான். “திளைப்பு வினை மறுத்தல்” இது; எனக்குத் தித்திப்பாக இருக்குமென்றாள்; இணைப்பு தடுக்கும் திரைகளாக எங்கிருந்தோ வந்தன அச்சமும் நாணமும்! உடலுறவு மறுத்தாள் எனினும்; ஓர் உருவப் பட மறைவில் நின்று கொண்டு சுவைத்தாள் அவனழகை! மறைந்திருந்து மகிழ்வு கொள்பவளை அவனும் மறைந்து வந்து ஓடித் தழுவிக் கொண்டான். “கரந்திடத் தொழிதல்” எனும் மெய்ப்பாடு காட்டி “கண்டவழி உவத்தல்” எனும் மெய்ப்பாடும் கண்டார்!

“தெரிந்துடம் படுதல், திளைப்பு வினைமறுத்தல் கரந்திடத் தொழிதல், கண்டவழி உவத்தலொடு பொருந்திய நான்கே ஐந்தென மொழிப.” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 17) திளைப்பு வினை = தொடர்ச்சியாக அனுபவித்தல் கரந்திடம் = ஒளிந்து மறையும் இடம்