உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 83 · 85 / 102

தனிமையில் நிகழ்ந்த சந்திப்பு காலத்தில் இனிமையாய்த் திகழ்ந்த மெய்ப்பாடுகள் கடந்து பிரிந்து சென்றோர் காதல் செறிந்த நெஞ்சுடன்; பிறிதொருநாள் பட்டனர், சுற்றத்தார் கண்களில்! மனந்திறந்து தலைவியைப் பாராட்டினான் தலைவன்; மணப்பதென முடிவுகட்டி விட்டேன் அவளை என்றான். எல்லாமே முடிந்தபிறகு எங்களுக்குத் தகவலா என்று ஏசிப் பேசினர் ஊரார், எகத்தாளம் செய்தனர்! மதம் பிடித்தோர் போல உற்றார் ஆனது கண்டு மடம் விலக்கி மங்கைநல்லாள் வீரவுரை ஆற்றினாள்.

இவர் எனக்கு; நான் அவர்க்கு என ஆன பிறகு, இடையில் சுவர் எதற்கு சுக்கு நூறாய்ப் போகட்டும் என்றாள்! ஊரார் உறுமினர் களவொழுக்கம் கண்டவளுக்கு வெட்கமின்றிப் பேச்சு வேறா என வெகுண்டனர்! சிந்தை மிக நொந்து போன சேயிழையாள், முந்தையோர் முறைப்படி தலைவன் தந்த பரிசு ஏற்றுக் கொண்டாள் எஞ்சியுள்ள வேலை மணவிழா நாள் குறிப்பது தானென்று, வஞ்சியவள் சொல்லிவிட்டு வைதோரை வாழ்த்திவிட்டுச் சென்றாள். “பாராட்டு எடுத்தல், மடம் தப உரைத்தல் ஈரமில் கூற்றம் ஏற்று அலர் நாணல், கொடுப்பவை கோடல், உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப.”

(பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 16) பாராட்டு எடுத்தல் = காதலர்கள் ஒருவர் மற்றவரைப் பாராட்டுதல் மடம் தப உரைத்தல் = பேதைமை ஒழிந்து பேசுதல் ஈரமில் கூற்றம் = பழி தூற்றும் கடுஞ்சொல் கொடுப்பவை கோடல் = காதலன் தரும் பரிசைப் பெற்றுக் கொள்ளல் குறிப்பு :- மணம் நிச்சயித்துக் காதலன் தருகின்ற பரிசுக்குக் கையுறை என்று பெயராகும்.