தொல்காப்பியப் பூங்கா
பகுதி 92 · 94 / 102
“மரபு என்பது என்னவெனின் - கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும் செய்யுளியலில் மரபென்று ஓதப்பட்டனவும் அன்றி, இரு திணைப் பொருட்குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறையையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணையுடன் புல்லும் மரமும் பற்றிய மரபும், அவை பற்றி வரும் உலகியல் மரபும், நூல் மரபும் இவையெல்லாம் மரபெனப்படும்” என்கிறது வெள்ளைவாரணனாரின் ஆய்வுரை. அந்த ஆய்வுரையில் “உயர்திணை நான்கு சாதி பற்றிய மரபு” பற்றி அவர் கருத்தை இக்கட்டுரையின் பிற்பகுதியில் குறிப்பிடுகிறேன்.
இப்பொழுது முதலில் இருதிணைப் பொருட்களின் இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிக் கருதிப் பார்க்கும்போது உலக வழக்கில் அவை எத்தனையோ மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. “மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு ஆங்கு அவை நான்கும் குட்டிக்குரிய” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 6) மூங்கா = கீரி வெருகு = பூனை மூவரி அணில் = முதுகில் மூன்று கோடுள்ள அணில் கீரி, பூனை, எலி, அணில் ஆகிய இவை இளமையில் குட்டி என அழைக்கப்படுவதாகக் கூறுகிறது இந்த நூற்பா.
ஆனால் வழக்கத்தில் ‘கீரிக்குட்டி’ என்றும், எலிக்குட்டி என்றும், அணில்குட்டி என்றும் அழைப்பதில்லை. கீரிப்பிள்ளை, எலிக்குஞ்சு, அணில் குஞ்சு என்றுதான் குறிப்பிடுகிறோம். பூனைக்குட்டி யொன்றைத்தான் ‘குட்டி’ யென அழைக்கும் வழக்கம் உள்ளது. இவ்வாறு மரபியலில் குறிப்பிடப்படும் பலவற்றைப் பல்லாண்டு கால வழக்கியல் மாற்றியுள்ளது. நரிப்பிள்ளை, பன்றிப்பிள்ளை என்றெல்லாம் கூட மரபியல் குறிப்பிடுவதை; இன்றைய வழக்கியல் மாற்றி விட்டதை உரையாசிரியர்களும் சுட்டிக் காட்டித் தவறவில்லை.
“உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும் அஃறிணையுடன் புல்லும் மரமும் பற்றிய மரபும், அவை பற்றி வரும் உலகியல் மரபும், நூல் மரபும் இவையெல்லாம் மரபெனப்படும்” என்று விளக்கியுள்ள வெள்ளைவாரணனார் “உயர்திணை நான்கு சாதி” என்பதை, சமயம் வாய்க்கும் போதெல்லாம் மறுத்துள்ளார்.
“உயர்திணை, நான்கு சாதியையும் குறித்து வழங்குதல் தொல்காப்பியர் காலத்துக்கு மிக மிகப் பிற்பட்ட கால வழக்காகும்” என்று அவர் கருத்தறிவித்திருப்பதுடன் விரிவான மறுப்பு விளக்கமொன்றையும் காய்தல் உவத்தலுக்கிடமின்றி எழுதியுள்ளார். “தொல்காப்பியத் தமிழ் இலக்கிய வரலாறு” எனும் பெரும் நூலில் அது இடம் பெற்றுள்ளது. பெரும் புலவர் வெள்ளைவாரணனார் நடுநிலை நோக்குடைய நல்ல தமிழறிஞர். இறையன்பர். எச்சார்பும் இல்லாதவர்.
ஒரே சார்பு தமிழ்ச் சார்புதான் அவருக்கு! இதோ; அவர் எழுதுகிறார். “உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபுகளைக் கூறுவனவாக 71 முதல் 85 முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும் பிற்காலத்தாரால் இவ்வியலிற் புகுத்தப்பட்ட இடைச் செருகல் ஆகும். மக்களை நிலவகையாற் பகுத்துரைப்பதன்றி நிறவகையாகிய வருணத்தாற் பகுத்துரைக்கும் நெறியினை ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களது ஒழுகலாறுகளை விரித்துரைக்கும் முன்னைய இயல்களில் யாண்டும் குறிப்பிடவேயில்லை.
இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாகத் தம் காலத்திற் பயின்று வழங்கிய மரபுப் பெயர்களைத் தொகுத்துணர்த்தும் முறையிலேயே ஆசிரியர் இம்மரபியலை அமைத்துள்ளார். இதன்கண் 1 முதல் 70 வரையுள்ள சூத்திரங்களும், 86 முதல் 90 வரையுள்ள சூத்திரங்களும் இம்மரபினையே தொடர்ந்து விரித்துரைப்பனவாக அமைந்துள்ளன. இயல்பாக அமைந்த இத்தொடர்பு இடையறுபட்டுச் சிதையும் நிலையில் உயர்திணை நான்கு சாதிகளையும் பற்றிய பதினைந்து சூத்திரங்கள் 71 முதல் 85 வரையுள்ள எண்ணுடையனவாக இதன்கண் இடையே புகுத்தப்பட்டுள்ளன.
முன், அகத்திணை யொழுகலாற்றுக்குரிய மக்களை வகைப்படுத்திக் கூறிய நிலையிலும் புறத்திணை யொழுகலாற்றில் வாகைத் திணைப்பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை அவர்கள் வாழும் நிலத்தாலும் அவரவர்கள் மேற்கொண்ட தொழில் வகையாலும் பகுத்துரைத்ததன்றி அவர்களை வேளாண் மாந்தரென்றோ வைசியரென்றோ இவ்வாறு வருணம் பற்றி ஆசிரியர் யாண்டும் குறிப்பிடவேயில்லை. வைசிகன் என்ற சொல், சங்கச் செய்யுட்களில் யாண்டும் வழங்கப் பெறவில்லை.
வருணம் நான்கு என்ற தொகையினை ஆசிரியர் முன் தெளிவாகச் சொல்லாத நிலையில் அரசர் வணிகர் என்ற இருதிறத்தாரையும் ‘இடையிரு வகையோர்’ என இங்கு குறிப்பிட்டார் எனல் பொருந்தாது. அன்றியும் அவ்விருதிறத்தோரல்லாத பிறர்க்குப் படைப்பகுதி கூறுதல் இல்லையெனக் கூறும் இவ்வியல் 77 ஆம் சூத்திர விதி, பின்னுள்ள 82 ஆம் சூத்திர விதிக்கும் சங்க நூல்களிற் காணப்படும் பழந்தமிழ் வழக்குக்கும் முற்றிலும் முரண்பட்டதாகும்.
வேளாண் மாந்தர் என்றதொரு குலப்பிரிவு தொல்காப்பியனாரால் முன்னர்க் குறிக்கப் பெறவில்லை. உரிப் பொருளாகிய ஒழுகலாறு பற்றிய இச்செய்திகள் முதல், கரு, உரி என்னும் பொருட்பகுதிகளை விளக்க அகத்திணையியல், புறத்திணையியல் முதலாக முன்னுள்ள இயல்களிற் கூறத் தக்கனவேயன்றி, மரபுச் சொற்களின் வழக்குப் பயிற்சியைக் கூறத்தகமைந்த இம்மரபியலில் இடம் பெறத் தக்கன அல்ல. ஆகவே, 71 முதல் 85 வரையுள்ள இச்சூத்திரங்கள் பதினைந்தும் நால்வகை வருணப் பாகுபாடு இத் தமிழ் நாட்டில் உலக வழக்கில் வேரூன்றத் தொடங்கிய மிகப் பிற்காலத்திலேதான் இம்மரபியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டுமென்பதும், பிற்றை நாளில் களப்பிரர் போன்ற அயல் மன்னரது ஆட்சிக்குட்பட்டுத் தமிழ்நாடு அல்லற்பட்ட நிலையிலே தமிழரது உரிமை யுணர்வினைச் சிதைத்தற்குரிய இத்தகைய அடிமைக் கருத்துக்கள் சில தமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியத்திலும் அயலாரால் மெல்ல மெல்ல நுழைக்கப்பட்டமை வியப்பிற்குரிய தன்றென்பதும், மனு முதலிய வட மொழி நூல்களால் வளர்க்கப்பட்ட நால்வகை வருணத்தைப் பற்றிய நம்பிக்கை தமிழ் மக்கள் உள்ளத்தில் வேரூன்றி நிலைபெற்று விட்ட பிற்காலத்திலே வாழ்ந்த உரையாசிரியர்கள் இளம்பூரணர், பேராசிரியர் முதலிய பெரு மக்களாதலின் அன்னோர் தொல்காப்பியத்திற்கு உரை காணும் நிலையில் தம் காலச் சூழ்நிலையில் அகப்பட்டு இடைச் செருகலாகிய இச்சூத்திரங்களைத் தொல்காப்பியனார் வாக்கெனவே உண்மையாக நம்பி உரையெழுத நேர்ந்ததென்பதும் ஆழ்ந்துணரத் தக்கனவாகும்.
வெள்ளைவாரணனார் “தொல்காப்பியத் தமிழ் இலக்கிய வரலாறு” - மரபியல் விளக்கப் பகுதி
