உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 81 · 83 / 102

முதல் நிலை மெய்ப்பாடுகளில் யார் முந்தி என்றிருந்து நுதலில் வியர்வை துடைத்தவாறு, உடலழகைக் கூட்டுகின்ற கூந்தல் அவிழ்த்து உடனதனை ஒழுங்குறவே கட்டிக் கொண்டாள். காதல் வேட்கையால் அக்கணமே மெலிந்து மேனி; காதில் உள்ள கம்மலொன்று கழன்றுளதோ என்று நோக்கி, தெரியாதவள் போலத் திண்டாடி தெருவில் சோலையில் எல்லாம் தேடி நடித்தாள்! கணையாழி வளையல் எல்லாம் முறையே கைவிரலில், கணுக்கைக்கு மேலே இருக்கின்றனவா என்று; அவை இருக்கும்போதே தடவிப் பார்த்தாள்!

அடங்காத நாணமுடன் காமம் போட்டியிட்டு ஆடிக்காற்றாய் வீசியதால்; ஆடை நெகிழ்ந்ததோ வென்று அவிழ்த்து உடுத்தப் பார்த்தாள்! இப்படி இரண்டாம் நிலை மெய்ப்பாடுகள் நான்காம்; அவை இன்ப லீலை தொடக்கத்தின் பாங்காம்! “கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடை பெயர்த்துடுத்தலொடு கெழீஇய நான்கே இரண்டென மொழிப” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 14) கூழை = கூந்தல் காதொன்று களைதல் = தோடு விழுந்துவிட்டதாகத் தேடுதல் ஊழணி தைவரல் = அணிகளைத் தடவிப் பார்த்தல்.