தொல்காப்பியப் பூங்கா
பகுதி 80 · 82 / 102
மெய்ப்பாட்டியலில் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளை நோக்கும் போது கம்ப இராமாயணத்தில் மிதுலாபுரியில் அரண்மனை மாடத்தில் நின்று கொண்டிருந்த சீதையும் - அப்போது விசுவாமித்திர முனிவருடன் வீதியில் வந்து கொண்டிருந்த இராமனும் - கண்ணொடு கண்ணிணை நோக்கினர் என்ற கருத்தில் கம்பர் வர்ணித்திடும் காட்சிக்கும், அதன் தொடர்பான மெய்ப்பாடுகளுக்கும் கவிதை புனைந்திட கம்பருக்கு, தொல்காப்பிய மெய்ப்பாட்டியல், தூண்டுதலாகவும் துணையாகவும் இருந்திருக்கக் கூடுமெனத் தோன்றுகிறது. “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” இது கம்பர்!
“அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்; அதை முற்றும் துறந்த முனிவரும் நோக்கினார்” என்பது கம்பரின் கற்பனைக்கு நான் தந்த மெருகு! பொதுவாக எதிர்ப்பட்டனர் இருவர் எனில் போர்க்களத்தில் பகையிருவர் போர்த் தொடக்கத்திற்கு முன்பு ஒருவரையொருவர் எதிர்ப்பட்டனர் என்ற எண்ணம்தான் எழும்! போருக்கல்ல; புணர்வதற்கு; முன் தொடக்கமாக பூவார் குழலியொருத்தியும் புலிப்போத்தாம் ஒருவனும் வேறு எவரும் நடமாடாத வீதியிலோ சோலையிலோ - விழி கூறு மொழி புரிந்துகொள்ளும் வயதுடையோர் கண்கள் நான்கும் கரம் குலுக்கிக் கொண்டபோது கவிதைப் பெண்ணாள் நெற்றியிலே வியர்வை அரும்பு!
கொள்ளை நாணத்தால் குனிந்து கொண்டாள்; கோமகன் கிள்ளைக்கு மேலும் சில குறிப்பு உணர்த்தினான். அவன் எண்ணம் புரிந்து கொண்ட அழகரசி - உடன் அளவளாவி மகிழத்தான் துடித்தாள் - ஆனால் தொண்டைவரை வந்த வார்த்தை வெளிவராமல் - இரண்டு இதழ்க் கதவும் அடைத்தாள்! “நகு நய மறைத்தலு”க் கேற்ப நங்கை தன் வேட்கையை ஒளித்துக் கொண்டாள்! “சிதைவு பிறர்க்கின்மை” என்பதைச் செயலில் காட்ட இசைவு தனக்குண்டு என்பதையும் மறைத்துக் கொண்டாள்!
முந்தியால் முகம் சிறிதே மூடிக் கொண்டாள் எனினும் முந்திக் கொள்ளட்டுமே அவன்தானென்று அந்தி வானக் கன்னமிரண்டும் மேலும் சிவந்திட அவன் செயல் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் “புதுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல் நகுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க்கு இன்மையொடு தகுமுறை நான்கே ஒன்றென மொழிப.”
(பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 13) நுதல் = நெற்றி நகுநயம் = விருப்பம் சிதைவு பிறர்க்கின்மை = மனநிலையை மற்றவர்க்கு வெளியிடாமலிருத்தல்.
