உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 79 · 81 / 102

மலையளவு இல்லாவிடினும் மன நிறைவளிக்கும் வண்ணம் கழனிப் பயனால் கிடைத்திடும் தேவையான செல்வமும், புலமையின் காரணமாக ஏற்பட்ட அறிவு முதிர்ச்சியும், உள்ளங்கள் ஒன்றுபட்டு இணைவதும், ஊரார் கூடி உற்சாகம் மேலிட ஆடிப் பாடுவதும்; பிறர் துன்பத்திலே காணும் “உவகை” என்றில்லாமல்; தங்கள் மன நிறைவினால் ஏற்படும் உவகையாகப் பெருகித் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலன்று உவகைத் திருநாளாக உணர்ச்சித் திருநாளாக தமிழர்கள் கொண்டாடுவதை இந்த இசைப்பாடல் சுட்டிக் காட்டுகிறது. பொங்கலோ பொங்கல் எங்கும் இன்பம் பொழிந்திடும் பொங்கல் பொங்கலோ பொங்கல்!

உழைக்கும் தெய்வங்களே உம்மால் பிழைப்பார் பல கோடி மனிதர்களே! உலகம் உங்கள் தலையில் கட்டிய முண்டாசு - நீங்கள் உறுமி எழுந்தால் இமயமே கால் தூசு! உழவர்கள் பெருமையைப் பேசுவோம் - அவர் உயரவே வாழ்த்திப் பாடுவோம்; பொங்குக பால் என்று முழங்கிடுவோம்; அது எங்கும் புகழ் வள்ளுவன் அருளிய பால் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அதற்கும் அப்பால் வேறென்ன பால் வேண்டும்! தூய்மையாக வீடு வாசல் மாடு கன்று புதுக்கி, தூசி தும்பு அழுக்குகளைப் போக்கிடுவோம் போக்கி!

அதுதான் போகி! மூட நம்பிக்கை முடைநாற்றம் நீக்கி, மூளை நிரம்பப் பகுத்தறிவைத் தேக்கி, கேடு களைய மீசைதனை முறுக்கி பாடுபடுவோம் பாவையர் உரிமைகளைப் பெருக்கி! மஞ்சளும் இஞ்சியும் வானுயர் கரும்பும் நஞ்சை குலுங்கும் மண்ணையே விரும்பும் வஞ்சியர் இதழ்களில் மல்லிகை அரும்பு வாலிபர்க்கு ஏறு தழுவுதல் அன்றோர் துரும்பு பொதுவாழ்வில் நேர்மை நாணயம் வேண்டும் - அந்தப் புதுவாழ்வு புகழ்வாழ்வு பூமியின் எல்லையைத் தாண்டும்.

(பொங்கலோ பொங்கல்) “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 11) புலன் = வயல், அறிவு