உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 77 · 79 / 102

கல்வி புத்தகத்தில் உலகத்தைப் படிக்கின்ற கல்வியும் உண்டு. உலகத்தையே புத்தகமாகப் படிக்கின்ற கல்வியும் உண்டு. இந்த இரண்டு வகைக் கல்வியிலும் ஒருவகையில் உயர்ந்து நிற்கிற ஆற்றலாளர்கள் அறிவின் சிகரங்கள். எடுத்துக்காட்டாக அன்றைக்கும் சிலர் இருந்தார்கள். இன்றைக்கும் சிலர் இருக்கிறார்கள். அவர்தம் ஆற்றல் கண்டு அவனியே புகழும்போது அவர்களால் நாமும்; நம்மால் அவர்களும் பெருமிதம் கொள்ள முடிகிறது. தறுகண் உள்ளத்தில் உண்மை ஒளியும் - மாறாத உறுதியும் உள்ளவர்கள் எந்த அவையிலும் அஞ்சாமல் வாதாடுகின்ற “தறுகண்” படைத்தவர்களாயிருப்பார்கள்.

அந்தத் தறுகண்ணுடையோர்; பெருமிதம் கொள்வோர் பட்டியலில் தவறாமல் இடம் பெறுவார்கள். இசைமை ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ எனும் பொன்மொழியைக் குறிக்கோளாகக் கொண்டு; மக்கள் மத்தியில் புகழ் பெற்றுத் திகழ எந்தத் துறையில் இருப்போர்க்கும் விருப்பம் இருப்பது இயல்பு. புகழை விரும்பாதவர் பின்னால்தான் ‘புகழ்’, அவரை நிழல் போலத் தொடர்ந்து கொண்டே இருக்கும். கொடை “கரும்பெடுத்துத் தமிழ் பிழிந்து மலரில் சுரும்பெடுத்து வருகின்ற தேன் கலந்து அரும்பெடுத்துச் சிரிக்கின்ற மகளிர் கூட்டம் ‘எறும்பெடுத்துச் செல்கின்ற உணவு கூட எம்மன்னன் குமண வள்ளல் தந்த’ தென்று எழுச்சி நடை போடுகின்ற கொங்கு நாடு” அந்நாட்டு மன்னர் குமண வள்ளலின் பெயர்; கொடை என்ற சொல்லை உதிர்த்த இடத்தில் எல்லாம் உச்சரிக்கப்படுவதற்குக் காரணம்; அவர் கொற்றவனாக மட்டுமன்றிக் கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார் என்ற பெருமிதம்தானே!

“கல்வி தறுகண் இசைமை கொடை எனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 9) தறுகண் = அஞ்சாநெஞ்சம் இசைமை = புகழ்