உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 76 · 78 / 102

அணங்கு இனி இலக்கண இலக்கியத் தமிழிலேயே பேசுவது என முடிவு செய்து கொண்ட ஓர் இளைஞன், தன்னுடைய ஊர்ப் பெரியவரான தமிழாற்றல் கொண்ட ஒருவரிடம் தனக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டிருப்பதைக் கூறினான். அவர் அவனைப் பார்த்து “உன் வாழ்க்கைக்கு ஏற்றவாறு ஓர் அணங்கு அமையட்டும்” என வாழ்த்தினார். இளைஞன் அன்றைக்குத்தான் அகராதியில் “அணங்கு” என்றால் பேய் எனவும் பொருள் என்று படித்திருந்தான். அவன் திடுக்கிட்டுப் போய் “அய்யா!

பேயை என் தலையில் கட்டச் சொல்கிறீர்களே!” என அலறினான். அணங்கு என்பதற்கு “பெண்” என்றும் “பேய்” என்றும் “மோகினி” என்றும் அகராதியில் பொருள் இருப்பதை அறிய மாட்டாயா என்று பெரியவர் விளக்கினார். பேய், பிசாசு, காத்து, கறுப்பு என எதுவுமில்லாமலே மூட நம்பிக்கையாளர்களின் கற்பனைப் பொய் கேட்டு அச்சம் கொள்வோர் இன்னமும் இந்த விஞ்ஞான உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே மெய்ப்பாட்டியலில் “அச்சம்” உண்டாக்கக் கூடியவற்றில் ஒன்றாக ‘அணங்கு’ என்பதும் கூறப்படுகிறது.

விலங்கு சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகளை நெருங்கி நின்று எதிர்க்கும் வலிமையும், துணிவும் இல்லாமையால்தான்; “அச்சத்”தைப் போக்கிக் கொள்ள வேறு வழியின்றி; தொலைவிலிருந்து ஆதி மனிதன் அம்பு, ஈட்டிகளாலும்; தற்கால மனிதன் துப்பாக்கி கொண்டும் அவற்றை வேட்டையாடுகிறான். கள்வர் திருடர்கள், தேட்டை போடும் கள்வர் கும்பல், கொள்ளைக்காரர்கள், வழிப்பறிக் கூட்டம் - அப்பாவி மக்களானாலும், அறிவார்ந்த மக்களானாலும் இவர்களைக் கண்டும், இவர்களைப் பற்றிக் கேட்டும் அச்சத்திற்கு ஆளாவது இயற்கை!

இறை அச்சம் ஏற்படுத்தும் இந்த வரிசையில் இறையும் சேர்க்கப்பட்டுள்ளது. இறை என்பது அரசைக் குறிப்பிடுவதாகப் பல உரையாசிரியர்கள் கூறுகின்றனர். “இறை” எனத் தனித்துப் பொருள் கொள்ளாமல் “தம் இறை” என்று இருப்பதை “தம்மிறை” எனப் பொருள் கொண்டால் தாம் செய்த பெருங்குற்றம் என்றாகும்.

பெருங்குற்றம் புரிந்தோர் தண்டனையை எண்ணி “அச்சம்” கொள்வது நாட்டு நடப்புத்தானே! “தம் இறை” என்றும், “தம்மிறை” என்றும் தொல்காப்பியம் இரட்டுற மொழிவதை வெள்ளைவாரணனார் சுட்டிக்காட்டுகிறார். “அணங்கே விலங்கே கள்வர்தம் இறை எனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 8) பிணங்கல் சாலா = மாறுபாடு இல்லாத