உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 75 · 77 / 102

புதுமை எத்தனையோ தொலைவில் உள்ள எழில் நிலாவை அன்னையர் பாட்டிசைத்து அழைத்து; தன் குழந்தையிடம் வந்து கொஞ்சுமாறு இன்னமுங்கூட கோரிக்கை விடுத்துக் கொண்டுள்ளனர். அழைப்பையேற்று அந்த அழகு நிலா வந்ததில்லை. வராத நிலவை இந்த நிலவுப் பூமிக்கே வந்து காணுகிறோம் என்று, விஞ்ஞானப் புதுமை காரணமாக அமெரிக்க நாட்டு முயற்சியினால் ஆம்ஸ்ட்ராங் என்பவர் சந்திர மண்டலத்தில் காலடி வைத்து, கொடி நாட்டித் திரும்பினார்.

அங்குக் கிடைத்த ஒருவகைக் கற்களையும் கொண்டுவந்தார். இந்தப் “புதுமை” கண்டு மன்பதை “மருட்கை” எனும் வியப்புக்கு உள்ளாகியது. பெருமை ஒரு வழக்கறிஞராகத் தென் ஆப்பிரிக்கா நாட்டுக்குச் சென்ற காந்தியடிகள் அங்கு நிற வெறிக்கு எதிராகத் துணிந்து நின்று போராடி - “வார்தா முனிவர்” என்ற வட்டத்துக்குள்ளேயிருந்து தன்னுடைய அறிவு, ஆற்றல், தியாக மனப்பான்மை காரணமாக இந்திய நாட்டு அளவில் என்று மட்டுமல்லாமல் உலக நாடுகள் அளவில் செல்வாக்கும், மதிப்பும், மரியாதையும் பெற்று; பிடிவாதமாக இறுதிவரையில் பின்பற்றிய “அகிம்சைக் கொள்கையால் நாட்டு விடுதலையும் பெற்றுத் தந்த பெருமை, வியப்புக்குரியதன்றோ!

உலக அமைதிக்கு அவர் உயர்த்திய அன்பு வழிக் கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கிறதே! சிறுமை அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் எனப் புலவர் கூட்டம் புகழும்! ஆம்; அணு அவ்வளவு சிறியது! ஆனால் அந்த அணுவில் உருவாக்கப்பட்ட அணுகுண்டுதான் இரண்டாம் உலகப் போரை முடித்து வைத்ததுமல்லாமல் “இரோசிமா” உள்ளிட்ட பல பகுதிகளில் லட்சோப லட்சம் மக்களின் வாழ்வையும் முடித்து வைத்தது என்பதை எண்ணிடும்போது அத்துணை சிறிய அளவிலான அணுவின் பயங்கர பெரிய ஆற்றல்; வியப்பைத் தருகிறது அல்லவா!

ஆக்கம் நாட்டின் ஆதி மக்கள், நாதியற்றோர் போல நாற்புறமும் எதிர்ப்புக்கும் இழிவுக்கும் ஆளாகி, நலிந்து கிடந்த போது இந்திய நாட்டின் அளவில் அவர்களின் பாதுகாப்பு அரணாக இருந்து வலிமை மிக்க வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்து வாகை சூடி; இந்த நாட்டின் அரசியல் சட்டத்தையே உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கைக்கு வாய்த்த பரிணாம வளர்ச்சிக்கான சான்றுதானே நாட்டின் குடியரசுத் தலைவராகத் திருமிகு நாராயணன் அவர்கள் வீற்றிருந்த காட்சியாகும். அண்ணல் அம்பேத்கரின் ஆக்க பூர்வமான உணர்வுகள் அஞ்சா நெஞ்சத் துணையுடன் பெற்ற வெற்றிக்கு அடையாளம் அது!

இந்த நான்கையும்தான் வியப்பு தருபவை யென்று பின்வரும் நூற்பா கூறுகின்றது. “புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 7) மதிமை = அறிவின் தன்மை சாலா = நிரம்பாத மருட்கை = வியப்பு குறிப்பு :- புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்பனவற்றின் தன்மைகளை உள்ளவாறு உணரும் அறிவுடைய பெருமக்கள்; அப்பொருள்களின் பெற்றிமை (இயல்பு) என்னவென்று உணர்ந்திருப்பதால் அவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் வியப்புறுவார்கள் என்பதாலேயே “மதிமை சாலா மருட்கை” எனக்கூறப்பட்டது போலும்.

இவற்றால் அல்லது இவர்களால் இயலும் என்ற உறுதிப்பாடு அறிவுடையோர்க்கு உண்டு என்பதையும் இது உணர்த்துகிறது.