தொல்காப்பியப் பூங்கா
பகுதி 74 · 76 / 102
மூப்பு = முதுமை பத்து மாதம் சுமந்தவள், பாலூட்டி வளர்த்தவள், பள்ளிக்கு அனுப்பி வைத்துப் பின்னழகு கண்டு ரசித்தவள். மகனை மணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்தவள். இப்போது பேரன் பேத்தியும் எடுத்துவிட்டாள். நாடி தளர்ந்து, நரை விழுந்து, பல் விழுந்து, கூன் விழுந்து இல்லத்துச் செல்வங்களின் அரவணைப்பில் அன்பான பாதுகாப்பில் எஞ்சியுள்ள காலத்தைக் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தவளை; பெற்ற மகனே தூற்றுகிறான் “இன்னும் ஏன் உயிரோடு கிடந்து என் உயிரை வாங்குகிறாய்!
முதியோர் இல்லத்துக்குப் போய்த் தொலைந்திடு” என்கிறான். அந்தத் தாய்; தன் “முதுமை”யை எண்ணி வருந்துகிறாளே தவிர; அன்பில்லா மகனை எண்ணி வருந்தவில்லை. பிணி = நோய் ஓடியாடி உழைத்துச் சம்பாதித்துப் போட்டுக் கொண்டிருந்த வாலிபன்; திடீரென வலிப்பு நோய்க்கு ஆளானான். நாள்தோறும், மருந்து, மருத்துவம்! வாழ்க்கைத் துணையாக வந்தவளோ; வசந்தம் இருந்தவரையில் அவனது இன்பதுன்பங்களில் பங்கு பெற்றாள். சம்பாதித்திட வக்கற்று, நடமாடவும் வழியற்றுப் போன பிறகு; வாழ்க்கைத் துணைவிக்கு இல்லறம் கசந்து போயிற்று - அவன் அவளை அன்போடு அழைக்கும்போதெல்லாம்; “என்ன வேணும்?
சொல்லித் தொலை!” என்ற வார்த்தைகளைத்தான் சூடாக வறுத்துக் கொட்டுகிறாள்! அவன் அவளைத் திட்டமாட்டான்; தனக்கு இந்த நிலை வரக் காரணமான “நோய்” மீதுதான் அவனுக்கு ஆத்திரம் வரும்! நோயை இழித்துப் பேசிக் கடிந்து கொள்வான். வருத்தம் = துன்பம் அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைகளாக - துன்பம் வந்த நேரத்தில் வேறு குளம் தேடிக் கொள்கிற சுயநலமிகளையும் துரோகிகளையும் எண்ணி வருந்துகிறவர்கள்; அவர்கள் மீது கொள்கிற கோபத்தைவிட அதிகமாகத் தங்களைத் தொத்திக் கொண்ட துன்பத்தின்மீதுதான் கொள்வார்கள்.
“துன்பம்” தோழன் ஆன காரணத்தினால்தானே தன்னலம் நாடும் “துரோகத் தோழர்கள்” ஓடிவிடுகிறார்கள்! மென்மை = எளிமை வசதி படைத்தவர், ஆடம்பரமாக இருத்தலாகாது! அதற்காகக் கிழிந்த வேட்டி, கசங்கிய சட்டை, இவற்றுடனேயே காலங் கழித்தால் அதனை “எளிமை” என்று எவரும் போற்றிடமாட்டார்கள்; கஞ்சத்தனம் என்று கேலி புரிவார்கள்.
“எளிமை” என்ற சொல்லே இழுக்குப்பட்டு விடும். “மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 6) மூப்பு = முதுமை மென்மை = எளிமை யாப்புற வந்த = தொடர்ந்துவரும் இளிவரல் = மானக்குறைவு ஏற்படுதல்
