தொல்காப்பியப் பூங்கா
பகுதி 73 · 75 / 102
இளிவு = இழிவு கிரேக்க நாட்டு நீதி மன்றத்தில் சிந்தனைச் சிற்பி சாக்ரடீஸ் கூண்டில் நிறுத்தப்படுகிறார். நாட்டில் இளைஞர்களையெல்லாம் தூண்டிவிட்டு தன்னுடைய பேச்சின் மூலமாகக் கிளர்ச்சி செய்கிறார் என்பது அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. அந்தக் குற்றச் சாட்டுகளை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் நீதி மன்றத்திலே மூவர் முழங்குகிறார்கள். அந்த முழக்கம், அந்த சிந்தனைச் சிற்பியை இழிவுபடுத்தும் முழக்கமாகும்.
அந்த மூவர் அனிடஸ், லைகன், மெலிடஸ் என்ற பெயருடையவர்கள். அனிடஸ் :- குமுறும் எரிமலை! கொந்தளிக்கும் கடல்! இவைகளை விடப் பயங்கரமானவன் சாக்ரடீஸ்!...... அறிவாயுதமாம்....... அனைத்துலகும் அடி பணியும் அஸ்திரமாம்!...... அந்த ஆயுதம் கிரேக்கத்தில் தயாராகுமானால், நாம் தலைதூக்கவே முடியாது மெலிடஸ்! என்ன சொல்கிறாய், லைகன்? லைகன் :- நான் கல்லுக்குக் கடவுள் உருவம் தரும் சிற்பி!....ஒரு காலத்திலே இந்த சாக்ரடீசும் என்னைப் போலச் சிற்பிதான்!
இப்போதோ அவன் சிந்தனைச் சிற்பியாக மாறி விட்டான். பரவாயில்லை, கல்லைக் கடவுளாக்கும் நானும், கற்பனை மூட்டைகளுக்குத் தெய்வீக மெருகு தரும் கவிஞனாம் மெலிடசும், அரசியல் நிபுணனாம் நீயும் ஒன்று சேர்ந்துவிட்ட பிறகு ..... சாக்ரடீஸ் - சமுத்திரத்துத் துரும்புதானே; அனிடஸ்! மெலிடஸ் :- சபாஷ் லைகன், சபாஷ்! பொதுமக்கள் கழுதைகளாயிருந்தால்தான் நாம் தூக்கி வைக்கும் பொய் மூட்டைகளைச் சுமப்பார்கள்! குருடர்களாய் இருந்தால்தான் நாம் காட்டுகிற வழியிலே நடப்பார்கள்!
நாம் கீறிய கோட்டைத் தாண்டாத கிரேக்க மக்களுக்கு அந்தக் கிழவன் அறிவுக் கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்து விட வேண்டும்..... இவை ஈடு இணையற்ற ஒரு பெரியவரை, சிந்தனைப் புரட்சியாளரை இழிவுபடுத்திட வீசப்பட்ட வேல்களாகும். இதை ‘இளிவு’ என்று இயம்புகிறது மெய்ப்பாட்டியல்.
இழவு = இழப்பு இந்தியாவின் முதல் பிரதமர், 17 ஆண்டுக் காலம் பரிபாலனம் செய்தவர், பாமரர் முதல் பண்டிதர் வரையில் பாராட்டுகளைப் பெற்றவர், ஆசியச் சுடர், அமைதிக்கு வெண்புறா பறக்க விட்டவர் - அவர் மறைந்த போது அவருடைய உடையிலேயே எந்நேரமும் சூடியிருந்த ரோஜா மலர் கண்ணீர் சிந்துவது போல் ஒரு கவிதை! “கோமானே! கொள்கை வேந்தே! உன்னைக் கொள்ளையிட்ட கூற்றெங்கே? எனையெடுத்து முத்தமீந்து இதயத்தில் ஏற்றிக்கொண்டாய் இன்று; எனைவிடுத்து நீ மட்டும் நெடுந்தொலைவு போய்விட்டாய் - என்ன நியாயம்?
இதழுக்குத் தேன் தருவாய் - பதிலுக்கு நான் தருவேன் மறந்தா விட்டாய்? மகிழ்ச்சி வெள்ளம் கரை புரளும் மங்கையென்னைப் பிரிவதற்கு உன் மனம்தான் கல்லோ?” எனக் கதறும் ஒலி கேட்டு இனிய நறும் பூப்பெண்கள் அருகே சென்றார் மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் கொட்டி மயங்கி விழும் நிலைமையிலே ரோஜா நின்றாள் மல்லிகை முல்லை அருகே சென்று “என்னடி ரோஜா இன்னமும் அழுகை? நல்லவர் இருந்தார் நானிலம் வாழ வல்லவர் இருந்தார் வாரி அணைக்க போனது வருமோ?
புலம்பலை நிறுத்து! பூக்களின் ராணி! புன்னகை காட்டு!” ஆறுதல் கூறினார்; அழகு ரோஜா தேறுதல் பெறாமல் தேம்பியழுதாள்.” அசைவு = தளர்ச்சி எந்தப் பெரியாரால் தமிழன் தலைநிமிர்ந்து நின்றானோ, தன்மானம் பெற்றானோ - அந்தத் தந்தை பெரியார் மறைந்தபோது தரணி யெங்கும் வாழ்கின்ற தமிழன் எந்த அளவிற்கு தளர்ச்சியுற்றான் என்பதை இந்தக் கவிதை வரிகள் விளக்குகின்றன. “எரிமலையாய்ச் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடிஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய் இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய் இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய் எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய் ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய் எம்தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்.
இன்றைக்கோ இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார். இளவயதில் மறையவில்லை பெரியார் நிறைவயது வாழ்ந்துவிட்டே ஓய்வுகொண்டார் எனினும், தாஜ்மகால் திடுமெனத் தரைக்குள்ளே போய்விட்டால் அதைக் கட்டி; ஆண்டுகள் பலவாயிற்றே என்று ஆறுதல்தான் பெறுவோமா? தஞ்சைக் கோபுரம் சாய்ந்துவிட்டால் அதற்கு வயது அதிகமென்று சொல்லித் தாங்குதல்தான் எளிதாமோ? இவரோ, தஞ்சைக் கோபுரம்போல் உயர்ந்தவர் தாஜ்மகால்போல் சரிதம் படைத்தவர்.”
இது மெய்ப்பாட்டியலில் “தளர்ச்சி” எனும் பட்டியலில் வந்தாலும் தாங்க முடியாத வேதனையினால் அழவைக்கும் நிகழ்ச்சியாகும். வறுமை “வறுமை” காரணமாக அந்தக் காலத்து நல்லதங்காளிலிருந்து இந்தக் காலத்துத் தாய்மார்கள் வரையில் பெற்ற குழந்தைகளை விற்றுப் பிழைக்கவும்; அல்லால் ஆறு குளங்களில் தள்ளி அவற்றையும் அழித்துத் தாமும் அழிந்து போகும் நிலை கண்டு பெருக்கெடுக்கும் அழுகையும் மெய்ப்பாட்டியலில் சேரும்.
“இளிவே இழவே அசைவே வறுமை என விளிவில் கொள்கை அழுகை நான்கே” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 5) இளிவு = இழிவுபடுத்துதல் இழவே = இழப்பை உணர்தல் அசைவே = தளர்ச்சி அடைதல் கொள்கை = நிகழ்ச்சி இயல்பு
