தொல்காப்பியப் பூங்கா
பகுதி 72 · 74 / 102
எள்ளல் எள்ளி நகையாடுதல் என்ற சொற்றொடர் நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. மெய்ப்பாட்டியலில் “எள்ளல்” எனும் மெய்ப்பாடு எப்போது தோன்றுமென்பதற்கு உரை கண்டோர் பலரும்; முடவர் நடந்து செல்வதைப் பார்க்கும்போதும் எள்ளல் காரணமாக நகைச்சுவை உணர்வு தோன்றுமெனக் கூறியுள்ளனர். மனித நேய உணர்வும், பிறரை அதிலும் ஊனமுற்றோரைப் புண்படுத்திப் பேசுவதும், நடப்பதும் கூடாது என்கின்ற சமூகப் பிரக்ஞை விரிவாகப் பரவி வரும் இக்காலத்தில், முடவர் நிலையும் செயலும் எள்ளி நகையாடுவதற்குரியதாகக் குறிப்பிடப்படலாகாது.
ஆயினும் செவி வழி கேட்ட செய்தியொன்று ஒரு குறுங்கதை நிகழ்ச்சியாக மனத்திற் பதிந்துள்ளதை நகைச்சுவை உணர்வுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதைக் குறிப்பிட விரும்புகிறேன். நாகரிகம்; உச்சாணிக் கொப்புக்கு உயர்ந்து, போக்குவரத்து வாகனங்கள், சாதனங்கள் மின்சாரமயமாகவும் இயந்திரமயமாகவும் இன்றைக்குப் பெருகியுள்ளன எனினும், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்ச்சி இது. தெருவில் மாட்டு வண்டிகளில் அல்லது குதிரை வண்டிகளில் ஏறி மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தச் சாலையோரத்தில் ஒரு கறிகாய் வணிகன் - அவனிடத்தில் தெருவில் வாழ்வோர் கறிகாய் வாங்குவது வாடிக்கை! வியாபாரத்தை கவனித்துக் கொண்டே அந்த வணிகன், தெருவில் போகும் வண்டிகளைப் பார்த்து, மிகுந்த ஆத்திரத்துடன் “டேய் குதிரை வண்டி! டேய் மாட்டு வண்டி! மெதுவாகச் செல்லுங்கடா! ஏண்டா போகிற வேகத்தில் புழுதி தூற்றிக் கொண்டு போகிறாய்! நான் எழுந்து வந்தால் நடப்பதே வேறு! சவுக்கால் வெளுத்துக் கட்டி விடுவேன்; எச்சரிக்கை!”
என்று கத்திக்கொண்டேயிருப்பான். எந்த வண்டிக்காரர்களும் அந்த வணிகனைப் பொருட்படுத்துவதில்லை. வணிகனோ, தன் வசை புராணத்தை நிறுத்தியதுமில்லை! ஒரு நாள் ஒரு குதிரை வண்டிக்காரனை, வணிகன் வழக்கம் போல் மிரட்டிக் கத்தினான். “வந்தால் என்ன செய்வேன் தெரியுமா? உன் வண்டியெல்லாம் உடைந்து நொறுங்கிவிடும்! என்னடா முறைக்கிறே! வந்தேன்னா தெரியுமா?”
என்று வணிகன் வசைபாடத் தொடங்கியதும்; குதிரை வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி விட்டு, “எங்கே; வா பார்க்கலாம்!” என்று வணிகனுக்கு அறைகூவல் விடுத்தான். வணிகன், வாயை மூடிக் கொண்டான்! காரணம்; அவனால் வர முடியாது! காலில்லா முடவன்! அதைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். “எள்ளல்” என்பது இப்படியொரு குறிப்பிட்ட நிகழ்வுக்குத்தான் பொருந்துகிறது! பொதுவில் ஊனமுற்றோர் அனைவருக்கும் பொருந்தாது! பொருத்தவும் கூடாது!
இளமை இளைஞன் என்பதற்காக நெடுஞ்செழியப் பாண்டியனை மன்னர்கள் எள்ளி நகையாடியதற்கும், அவர்களை எதிர்த்து அந்த இளைஞன் சூளுரைத்ததற்கும் இதோ என் கவிதை :- “கலகலவெனக் காலில் ஒலித்த சதங்கையைக் கழற்றி; வீரக் கழலினை அணிந்த இளங்கன்று அவன்! பின்னிச் சடையிட்ட நீள்குடுமி களைந்து மின்னிடும் வாளேந்தி நிற்கின்ற சிறுவன் அவன்! மெல்லிய கரங்களில் எழில் வளையல் நீக்கி வில்லினைத் தோளில் தாங்கிய இளைஞன் அவன்! ஐம்படைத் தாலியினை இன்னும் மார்பில் பூண்ட.
அறியாப் பருவத்தினன் அவன்! வயதில் இளையோன் பாண்டியன் என்று, வலியோர் ஐந்து வேளிர் துணையுடன்; சேர சோழ முடி மன்னர் இருவர், போரில் குதித்து ஓலை அனுப்பினர்! வேளிர் வேந்தர் ஐவர் படையும் வில், புலி பொறித்த கொடியுடை மன்னர் இருவர் படையும் இணைந்து மோதிட, எழுவரை எதிர்க்க இயலுமோ என்று இளைஞன் பாண்டியன் கலங்கவே இல்லை! “ஒடுங்கி அடங்கிடுக! அல்லால்; உயிர் ஒழிந்து போக நேரிடும்!”
என்ற ஓலை கண்டு உரக்கச் சிரித்தான்! ஒளிந்திடும் மரபல்ல போருக்கென்றான்! பாண்டியத்துப் பெருமண்ணில், வெறும் ஆண்டிகளோ வாழ்கின்றார்? இல்லை! இல்லை! குலமாதா பாண்டித்தாய்; கோழைகளைக் குழந்தைகளாய்ப் பெற்றெடுக்கவில்லை! இந்த நிலமகளின் பெருமைக்கு மேலும் பெருமை, நெடுஞ்செழிய இளைஞனவன் சேர்ப்பான் என்று நம்பிடுவீர்! நாட்டோரே! நல்லோரே! என முழக்கி; ‘நகுதக் கனரே நாடு மீக்கூறுநர்’ எனும் நரம்பெலாம் வீரம் மீட்டும் புறப்பாட்டை நாடாளும் இளமன்னன் இயற்றலானான்!”
பாண்டியனின் இளமையைக் கண்டு எதிரிகள் அலட்சியமாகச் சிரித்தனர். எதிரிகளின் ஆணவம் கண்டு இளைஞன் நெடுஞ்செழியப் பாண்டியன் சிரித்தான் - இறுதியில் இளைஞனின் சிரிப்பே வென்றது. பேதைமையும், மடனும்! தவலை திருட்டுப் போய்விட்டது என்று காவல் நிலையத்துக்கு எழுத்தில் புகார் கொடுத்தான் ஒருவன். காவல் அதிகாரி படித்துப் பார்த்து விட்டு “உனக்குத் தலைதான் இருக்கிறதே” என்று சிரித்தார்.
“தவலை” என்று எழுதியிருக்க வேண்டியதை பேதைமை காரணமாக ‘வ’ எனும் எழுத்தை விட்டு விட்டுத் “தலை” என்று புகாரில் எழுதிவிட்டான். அதிகாரி சொன்னதும் அவனும் சேர்ந்து சிரித்து விட்டு, புகாரை வாங்கி, திருத்தம் செய்து வேறு தாளில் எழுதிக் கொடுத்தான். அதிகாரி மீண்டும் சிரித்துக் கொண்டு கேட்டார்; “எந்தக் கிணற்றிலிருந்து தவளை காணாமற் போனது?”
என்று! அதாவது ‘ல’கரம் எழுதுவதற்கு பதில் ‘ள’ கரம் எழுதிவிட்டான். பேதைமை காரணமாக “தவலை” தலையென்று ஆயிற்று! சுட்டிக் காட்டப்பட்ட பிறகு, அதனை அறிந்தும் அறியாத “மடன்” காரணமாக “தவலை”யை “தவளை” என்று எழுதிவிட்டான். இங்கெல்லாம் “நகைச்சுவை” தோன்றாமல் இருக்குமா? எனவே; “எள்ளல்”, “இளமை”, யிடத்தும், “பேதைமை” எனும் அறிவின்மையிடத்தும், ஓர் இழையளவே அதனின்றும் வேறுபாடுடைய “மடன்” எனும் உன்மத்தமுடையாரிடத்தும் நிகழ்வனவற்றில் நகைச்சுவை தோன்றும்.
“எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகைநான் கென்ப” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 4)
