உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 71 · 73 / 102

ஒருவரின் உள்ளுணர்வுகளுள், மற்றவர்கள் கண்டும் கேட்டும் அறிந்திட வெளியிற் காணும் உடற் குறிகள் வாயிலாகப் புலப்படுத்தப்படுபவையே மெய்ப்பாடு எனப்படும். மாந்தரின் நெஞ்சத்துத் தாக்கம் அல்லது பாதிப்பு அவர்தம் விழிகளில் தோன்றும் கலக்கம், கண்ணீர் அரும்பல், உரோமம் சிலிர்த்தல், வியர்வை, நடுக்கம் போன்ற காண்பவர்களுக்குப் புலனாகும் தன்மைதான் மெய்ப்பாட்டிற்கு மேலும் விளக்கமாகும். ஒரு மனிதனை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிட வாய் பிளந்து விரைந்திடும்போது, அவன் உள்ளம் நடுங்குவதும், எப்படித் தப்புவது என்று கலங்குவதும், அதனால் அவன் மேனியில் தோன்றும் வியர்வையும், இயல்பானவைகளாகும்.

அந்த நிலைக்கு அவனை உள்ளாக்கிய மலைப்பாம்பு அப்போது இலக்கணப்படி “சுவைப்படுபொருள்” ஆகிறது. பாம்பைக் கண்டவுடன் அவனுக்கு ஏற்பட்ட பயம் “சுவை” எனப்படுகிறது. அச்சம் காரணமாக ஏற்படும் கலக்கமும் தடுமாற்றமும் ‘குறிப்பு’ எனப்படுகிறது. வியர்த்தலும் நடுக்கமும் ‘விறல்’ எனப்படுகிறது. இவையனைத்தும் அவனது புறக்குறிகள் வாயிலாகக் காண்பவர்க்கு புலனாவதால்; அது மெய்ப்பாடு எனக் கூறப்படுகிறது. அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் ஆகிய உலகியல் வழக்கில் புலப்பட்டுத் தோன்றும் இந்த மெய்ப்பாடுகள் புனைந்துரை வகையாகிய நாடக வழக்கத்திற்கும், புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கிற்கும் தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் இலக்கண மரபாக இருந்து வருகிறது.

இதனையொட்டி வரும் நூற்பா மெய்ப்பாட்டியலின் முதல் நூற்பாவாக அமைகிறது. “பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா 1) விளக்கக் குறிப்பு :- இது, நாடகத் தமிழ்நூலார் மெய்ப்பாடு பற்றி வகுத்துக் கொண்ட கூறுபாட்டின் விரிவினையும் வகையினையும் எடுத்துரைக்கின்றது. உலக மக்கள் கண்டும் கேட்டும் இன்பம் நுகரும் விளையாட்டின் கண்ணே தோன்றிய முப்பத்திரண்டு பொருள்களையும் குறிப்பிட்டு அவற்றின் புறத்தே நிகழும் பொருள்கள் பதினாறென்றும் சொல்வர், நாடகத் தமிழ் நூலோர்!

பண்ணை என்பது விளையாட்டு என்ற பொருளில் வழங்கும் சொல்லாகும். “கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” என்பது தொல்காப்பியம். முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் நகை முதலிய சுவைகளுக்குக் காரணமாகிய சுவைப் படுபொருள்களும், நுகரும் நிலையில் உள்ள சுவையும், அச்சுவையினால் தோன்றும் மனக்குறிப்பும், அக்குறிப்பினைத் தொடர்ந்து மெய்யின்கண் வெளிப்படும் விறலும் ஆகிய நான்கும் நகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டிற்கும் உரிய வகையில் முப்பத்திரண்டாய் விரிந்து தோன்றுதலால் ‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்’ எனக் குறிப்பிடுகிறது இந்த நூற்பா!

“நாலிரண்டாகும் பாலு மாருண்டே” எனும் நூற்பாவின்படி மேலே சொல்லப்பட்ட “பதினாறு பொருளும் எட்டு என வரும்” என்று இளம்பூரணமும், “முப்பத்திரெண்டு மெய்ப்பாடும் பதினாறு ஆதலேயன்றி எட்டாதலும் உண்டு” என்று பேராசிரியமும் குறிப்பிடுகின்றன.