தொல்காப்பியப் பூங்கா
பகுதி 70 · 72 / 102
இருபத்தி ஐந்து ஆண்டுக்கு முன்பு எழிலும் பொலிவும் இணைந்திட கலையும் கரையிலோர் நிலையம் சிறந்திட புதிய பூம்புகார் படைத்திட்ட போது நனிமிகு சிறப்புடன் நடத்திய விழாவில் கனிச்சுவைத் தமிழில் கவியரங்கொன்றில் தலைமை வகித்து நான் படித்த கவிதையில் தகுதியுள சில வரிகளைத் தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலுக்கு நல்லதோர் தோரண வாயிலாகத் தழைக்கும் தமிழால் அமைத்து வழங்குவேன்! “நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப” இலக்கணக் கிழவர் இயம்பிய வழியில் எட்டுச்சுவையை இனிதே நுகர்வோம் நகை, அழுகை, இழிவு, வியப்பு அச்சம், வீரம், வெகுளி, உவகை என மெய்ப்பாட்டியல் மெய்யாகவே நம் மெய் சிலிர்க்க வைத்திடு மென்பேன்!
அப்பிழைத்திருத்தியில் ‘நகை’ காட்டி அடையக் கூடும் “அச்சத்”தால் அடங்குகின்ற ஆளன் கிடைத்துவிட்டால்! “இழிவு” வந்தும் “வெகுளா”தார் நிலை கண்டு “வீர”க்கு நெஞ்சில் “வியப்பு”த் தோன்றும்! “உவகை”யும் “அழுகை”யும் ஒரு தாய் மக்கள் ஒருவரையொருவர் நிழல்போல் தொடர்வர்! இந்த, எட்டுச்சுவை பிடித்த தமிழ் கட்டித் தயிர் வட்டில் நிறை கொட்டித் தர பட்டுக்கொடி கொற்றக்குடை மூவேந்தர் அவை முத்தமிழ்ப் புலவர் போற்றிய காப்பியர் ஆற்றலைக் காண அடுத்துத் தொடர்வோம்.
“நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் - நூற்பா : 3) மருட்கை = மருட்சி, வியப்பு பெருமிதம் = வீரம் குறிப்பு :- இளிவரல் முதல் உவகை ஈறாக உள்ள மெய்ப்பாடுகளும்; அகத்தில் தோன்றும் சுவைப்பொருள்களுக்கேற்பப் புறத்தே நால்வகைப்பட்ட நிகழ்வென என்கிற நுட்பத்தை, அவற்றின் இயல்புரைக்கும் நூற்பாக்கள் புலப்படுத்துகின்றன என்பதை அறியலாம்.
