தொல்காப்பியப் பூங்கா
பகுதி 69 · 71 / 102
ஒத்த கருத்துடைய வாழ்க்கைத் துணைவர்கள் என்கிறோம். தந்தையைப் போல் அல்லது தாயைப் போல் பிள்ளையென்றோ பெண் என்றோ கூறுகிறோம். இது ஒப்பிட்டுச் சொல்லப்படுவதால் “ஒப்பு” எனப்படுகிறது. இந்த ஒப்புமை; மன உணர்வால் உணரவேயன்றி; பொருள் எனப் பகுப்படுத்திக் காட்டலாகாதவை எனும் தொகுப்பில் இடம் பெறுகின்றவற்றில் ஒன்றாகும். “ஒப்பு” என்பதைப் போலவே ‘உரு’ என்பதும் காணாத ஒன்றைக் கண்டதும் ஏற்படுகிற மன நிகழ்ச்சியாகும்.
இதனை மனத்தினால் மட்டுமே உணரலாம். “வெறுப்பு” என்பதற்கு “அருவருப்பு” என்ற பொருளேயன்றி ‘செறிவு’ என்றும் பொருள் கூறுகிறது அகராதி! செறிவு எனில் மிகுதி என்றும் அடக்கம் என்றும் பொருள் உண்டு. எப்பொருளில் வரினும் ‘வெறுப்பு’ என்பதும், மனத்தினால் மட்டுமே உணரக் கூடியதாகும். ‘கற்பு’ - இதுவும் மன உணர்வின் பாற்பட்டதேயாகும். கற்பு என்பது இப்படித் தானிருக்கும் என்று காட்சிப் பொருளாக்கிக் காட்டக் கூடியதல்ல.
‘ஏர்’ எனப்படும் பொலிவு ஆனாலும், ‘எழில்’ எனப்படும் அழகு ஆனாலும்; தனித்துப் பிரித்துக் காட்டப்பட இயலாமைக்குட்பட்டவைகளேயாம்! ‘நாண்’ எனப்படும் உள்ளமொடுங்கும் உணர்வு; ‘மடம்’ எனப்படும் மகளிர் இயல்பு, ‘நோய்’ எனப்படும் நிலை, விரும்பியதைப் பெற்றே ஆக வேண்டுமென்ற ‘வேட்கை’, ‘நுகர்வு’ ஆகிய இவைகளும், இவை போன்றே அன்பு, அழுக்காறு, பொறை, அறிவு என்பவையும்; உணரக் கூடியவைகளே என்றும் காட்ட இயலா வரிசையில் இடம் பெற்றவை என்றும் பொருளியல் நூற்பா எடுத்துக்காட்டுகிறது.
“ஒப்பும், உருவும், வெறுப்பும் என்றா கற்பும், ஏரும், எழிலும் என்றா, சாயலும், நாணும், மடனும் என்றா, நோயும், வேட்கையும், நுகர்வும் என்றாங்கு ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்” “நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்ப” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 53) ஏர் = பொலிவு ஆவயின் = அவ்விடத்தில் குறிப்பு :- உலக வழக்கில் மக்களால் மனத்திற்கொள்ளப்பட்டு நாட்டில் வழங்கப் பெற்று வருதலால் “நாட்டியல் மரபு” என்கிறது இளம்பூரணம். நிலைநாட்டப்பட்ட மரபு எனக் கொண்டு ‘நாட்டிய மரபு’ என்கிறது நச்சினார்க்கினியம்.
