உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 68 · 70 / 102

ஆறுவது சினம் என்று ஆன்றோர் அறிவுரை கூறுவர். சினம், உறவைக் கெடுக்கும்; ஒற்றுமையை சிதைக்கும்; நட்பைக் குலைக்கும். எனவே சினம் கொடிது. அதைத் தவிர்த்திடல் வேண்டும். சினத்தை ஏற்க இயலாது. ஆனால் சினம் என்ற சொல்லைச் சிறப்பாகக் கருதியும் பயன்படுத்துவதுண்டு. எடுத்துக்காட்டாக, எழுச்சிமிக்க இளைஞர்கள் பட்டாளமொன்று தமிழ் மொழி காத்திடத் தடந்தோள் தட்டிப் புறப்படும்போது; “இனமான முரசு கொட்டி சின வேங்கைக் கூட்டம் எழுந்தது பார்!”

என்று கவிதை முழக்கம் செய்கிறோம். சினம் எனும் பண்பு, ஏற்கக் கூடாதது எனினும் இப்போது அந்தச் சொல்; போய் ஏறிக் கொண்டிருக்கிற இடம் சிறப்பான இடம்! வேங்கைக் கூட்டமெனும் சொற்றொடருடன் இணைந்து “சினம்” பெருமை பெறுகிறது. ‘பேதைமை’ என்பதற்கு அறியாமை என்று பொருள். ‘பேதை’ என்கிறபோது இளம்பெண் என்றும் அகராதி கூறுகிறது. பேய் பிடித்து விட்டது என்று பெண்களைப் பூசாரிகளை விட்டு அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்க்கிறது பெண்கள் கூட்டம்.

அவர்களை அறிவற்றவர்கள், பேதைகள் என்று ஏசிடும்போது; பேதை என்ற சொல்லை நாம் பெருமைக்குரிய சொல்லாகக் கருதிப் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஓர் இளம் பெண்ணை ஒரு முதியவருக்கு மனைவியாக்கி அவர் ஆறு மாதத்தில் இறந்து விடவே; விதவையாக்கிவிட்ட அந்த யுவதியின் பரிதாப நிலையைப் பார்த்து “பாவம்; உலகமறியாத பேதை” என்கிறபோது, அந்தப் பெண்ணை ‘அறியாத பெண்’ என்ற பொருளில்தான் குறிப்பிடுகிறோமே தவிர, ‘அறிவற்ற முட்டாள்’ என்ற பொருளில் பேதை என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை.

எனவே பேதை என்ற சொல் இரக்கப்படுவதற்குரிய சிறப்புச் சொல்லாகிறது. பொறாமை கொண்டவன் என்றோ; பொறாமையால் காந்தாரி ஆகிவிட்டாள் என்றோ குறிப்பிடும்போது; பொறாமை என்ற சொல் வெறுக்கத்தக்க இடத்திலே அமைகிறது. ஆனால் நான் உரையாடல் தீட்டிய “பாராசக்தி” என்ற திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றுப் புகழ்க்கொடி நாட்டிய போது என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் என் இல்லம் வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு “உம்மைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறதய்யா!”

என்று உச்சியில் முத்தம் கொடுத்தார். ‘பொறாமை’ எனும் வெறுப்புக்குரிய பண்பை உணர்த்தும் சொல் ‘பாராட்டுதல்’ எனும் இடத்தைப் பற்றிக் கொண்டு சிறப்புப் பெற்று விட்டது அல்லவா? ‘வறுமை’ எனும் நிலையையும், ஏற்கத் தக்கதல்ல! வறுமையை ஒழிப்போம்! வறுமையே வெளியேறு! இது முற்போக்கு வாதிகளின் முழக்கம்! ஆட்சியாளர்களின் சூளுரைகூட! “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” இது வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்; வறுமையில் உழல்வோரைக் கண்டு கண்கலங்கிய நிலையில் கூறிய அருட்பா!

அதாவது ‘வறுமை’ என்ற சொல் “வாடிய பயிர்” என்று வள்ளலாரின் வாய்மொழியில் மாற்றம் பெற்றுச் சிறப்பு பெறுகிறது. சினம், பேதைமை, பொறாமை, வறுமை நான்கும் வேண்டத் தகாதவைகள் ஆனாலும்; அவை சிறப்பான சொல்லாகவும் இடத்துக்கேற்ப அமையப் பெறும். “சினனே, பேதைமை, நிம்பிரி, நல்குரவு அனைநால் வகையும் சிறப்பொடு வருமே” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 51) சினனே = சினம் நிம்பிரி = பொறாமை நல்குரவு = வறுமை