தொல்காப்பியப் பூங்கா
பகுதி 67 · 69 / 102
எந்தவொரு சைவத் திருநாளாயினும்; அன்று எப்படியோ எவராவது ஓர் அதிதியை அழைத்து விருந்தோம்பல் நடத்துவது அந்த சைவ அன்பரின் வழக்கம். அன்று மகா சிவராத்திரியென்பதைப் பஞ்சாங்கம் பார்க்காமலே அந்தச் சைவ மெய்யன்பர் அறிந்திருந்தார். எனவே அன்றைய விருந்தோம்பலுக்கு அதிதி ஒருவரைத் தேடி அலைந்தார். யாரும் கிடைத்தபாடில்லை. இறுதியாக அவர் பெருமூச்சு விட்டு ஆறுதல் பெறும் அளவுக்கு அந்த ஊர்ச்சாவடியில் ஒருவர் படுத்துறங்குவதைக் கண்டார்.
ஆனந்த மிகுதியால் அருகில் சென்று பார்த்தார். நெற்றியிலும் - நெஞ்சகத்திலும் - நீண்டு மடங்கியிருந்த கைகளிலும் முறையாக திருநீறு அணிந்தபடி கண்ணயர்ந்திருந்த சிவபக்தரை “அய்யா, பெரியவரே!” என்று சற்று ஒலியெழுப்பிக் கூப்பிட்டார். “யார் அது? பசியும் பட்டினியுமாகக் கண்ணயர்ந்து கிடக்கிறேன். என்னை ஏன் துன்புறுத்துகிறீர்?”
என்று கேட்டவாறு அந்த மெய்யன்பர் எழுந்தார். “தங்கள் பசி போக்க அல்ல; என் பாவத்தைப் போக்கிக் கொள்ளத்தான் தங்களை அழைக்கிறேன்; என் இல்லத்தில் அமுதுண்பதற்காக!” என்றார் வீட்டுக்காரர். “அப்படியா? அன்னமிடுகிறீரா? அழைப்பு எதற்கு? அடியேன் ஓடோடி வருகிறேன்; நீர் இப்போது கூப்பிட்டதே போதும்!”
எனக் கூறி எழுந்தார். இருவரும் வீடு நோக்கி வீதியில் நடந்தனர். நடக்கும்போதே விருந்துக்கு வருபவர் கேட்டார்; “சைவ உணவா?” “அசைவமா?” “அஃதென்ன அப்படிக் கேட்டு விட்டீர்; சிவனுக்குரிய நாள் இன்று - சிவராத்திரி - அன்பே சிவம் - இவை அனைத்தையும் மறந்துவிட்டு; சைவமா? அசைவமா? என்று கேட்கலாமா?”
“பரவாயில்லை! எதற்கும் முன்கூட்டியே அய்யம் தெளிவித்துக் கொள்வது நல்லது தானே! அதற்காகத்தான் கேட்டேன்!” “சரி, அய்யனே! தாங்கள் சந்தேகப்படவே தேவையில்லை! கத்தரி, முருங்கை, வாழைக்காய் போன்ற காய்கறி! நல்ல கிச்சிலிச் சம்பா அரிசி! அருந்தி விட்டுச் சொல்லுங்கள்!”
“அப்படியே ஆகட்டும்! அரகர சிவ சிவா! சம்போ மகா தேவா! அடியேன் திண்ணையிலேயே அமருகிறேன்; அமுது தயாரானதும் அழையுங்கள்” விருந்தாளி, திண்ணையிலே “சிவ சிவா” என்று முணுமுணுத்தவாறு அமர்ந்துவிட்டார். ஓரிரு நாழிகைகள் ஓடியிருக்கும்; ஓர் ஒலி வந்து விருந்தாளியின் காதில் விழுந்தது. “இறைச்சி! இறைச்சி!”
என்று பலமுறை கேட்டதே தவிர; அந்தச் சொல் இணைந்த சொற்றொடர் எதுவும் திண்ணையிலிருக்கும் அதிதிக்குத் தெளிவாகக் கேட்கவில்லை. என்ன இது? ஒரு மாதிரியான பேச்சு காதிலே விழுகிறது என ஐயுற்றார் விருந்தினர். மீண்டும் ‘இறைச்சி’ என்ற பேச்சொலி! அதிதியாக அழைக்கப்பட்டு வந்த சிவபக்தர் முகத்தில் வினாக்குறிகள் ருத்ர தாண்டவமாடின! திண்ணையிலிருந்தவாறே உள்ளே எட்டிப் பார்க்கிறார்; விருந்தினர்! மீண்டும் இறைச்சிப் பேச்சு தொடர்ந்து ஒலிக்கிறது - ஆனால் எதன் தொடர்பாக என்று விளங்கவில்லை.
உணவருந்தும் வேளை - உள்ளே கேட்பது இறைச்சி! இறைச்சி! இறைச்சி! எழுந்தார் வேகமாக அதிதி! சைவ உணவு என அழைத்து ஏமாற்றி விட்டானே! என ஆத்திரமுற்றார்! அதே வேகத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டார் - ஓடியே விட்டார்! ஆனால் உண்மையில் நடந்தது என்ன? வீட்டுக்கார மெய்யன்பர், அதிதியாக ஒரு மெய்யன்பரை விருந்துக்காகத் தேடியலைந்த காரணத்தால்; அன்றைய தொல்காப்பியப் பாடத்தைத் தன் மகனுக்குப் போதித்ததை அப்படியே அரைகுறையாக விட்டு விட்டு வந்துவிட்டார்.
அதிதியைத் திண்ணையில் அமர்த்தி விட்டு, உள்ளே நுழைந்ததும்; மகன் அய்யப்பாடுகளைக் கேட்கத் தொடங்கிவிட்டான். (1) இறைச்சி தானே பொருள் புறத்ததுவே (2) இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே திறத்தியல்மருங்கின் தெரியுமோர்க்கே (3) அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுதே. என பொருளியலில் வரும் 35, 36, 37 ஆகிய நூற்பாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘இறைச்சி’ பற்றித்தான், தந்தையும் மகனும் உள்ளே உரையாடினர்.
(1) இறைச்சி என்பது குறிப்புப் பொருளை உணர்த்தும். வெளிப்படக் கூறப்படும் கருப்பொருளின் புறத்தாகத் தோன்றும். (2) கருப்பொருளின் புறத்துப் பிறக்கும் இறைச்சியில் தனிப்பட்ட குறிப்புப் பொருள் தோன்றும். அது திறமையுடையோருக்குப் புலனாகும். (3) சோக மேலிட்டு வருந்தும் காலத்தில் அன்பு மிகுதியானதையும், பொறுமையை வற்புறுத்துவதையும் குறிப்பதே இறைச்சி எனப்படும். இப்படி இல்லத்திற்குள் தந்தை, தன்மகனுக்குத் தந்த ‘இறைச்சி’க்கான இலக்கண விளக்கமே; ஒரு சைவ மெய்யன்பரை விரட்டி அடித்துவிட்டது; அவர் இலக்கிய இலக்கணமறியாத மெய்யன்பர் என்பதால்!
“இறைச்சி தானே பொருள் புறத்ததுவே” “இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே திறத்தியல்மருங்கின் தெரியுமோர்க்கே” “அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுதே.” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 35, 36, 37) இறைச்சிப் பொருள் = புறத்துச் சொல்லும் குறிப்புப் பொருள். (குறிப்பு :- நாடு, ஊர், நீர்த்துறை போன்றவற்றிற்கு அடைமொழிகளாக அமையும் கருப்பொருளே (காரணப்பொருள்) ‘இறைச்சி’ எனப்படும்)
