தொல்காப்பியப் பூங்கா
பகுதி 66 · 68 / 102
மண்ணெலாம் வீரம் துள்ளும் - மாதர் கண்ணெலாம் கற்பு சொல்லும்; விண்ணிலே ஏறுகின்ற கொடிநிழல் பகையை வெல்லும்; நாட்டுப் பண்ணெலாம் மானம் காட்டும் எண்ணிலாத் திறம் முழிக்கும் மறவர் கோட்டம் வெண்முகில் குடை பிடிக்கும் பொன் சுவர்க் கோட்டை மீது தண்ணென முத்தமிட்டுத் தடங்கடல் தவமிருக்கும் இன்னுயிர் பெரிதேயல்ல இங்குவாழ் மக்களுக்கு! மன்னுயிர் காப்பதுவே மாத்தமிழர் இலக்கணம் எனக் கூறும் தென்னிலங்கைப் பெருங்குடியின் வழிகாட்டி; தன்மானச் சுடர் விளக்கு - தமிழர் தலைவன்; எந்நாளும் புகழ்மேட்டில் வாழுகின்ற இராவணன்காண் அந்த இராவணனின் மான உணர்வையும் வீரத்தையும் பெரிதும் வியந்து பாராட்டுகின்ற ஒரு கட்டம் கம்ப இராமாயணத்தில் குறிப்பிடப் படுகிறது.
அதைச் சுட்டிக் காட்டுவதற்கு முன்பு தொல்காப்பியம் - பொருளியலில் ஊடலுக்கு வழங்கப்படும் பெருமையை அறிந்து கொள்ளலாம். என்னதான் பெருமிதமும் பேராண்மையும் கொண்ட ஆண்மகனாக இருந்தாலும்; கணவன் மனைவிக்கிடையே ஊடல் என்று ஏற்பட்டுவிட்டால் மனைவியின் ஊடலைத் தணிக்கக் கணவன்; மனைவியிடம் பணிந்து தான் ஆக வேண்டும் என்பதை “மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலை புலவியுள் உரிய” எனும் பொருளியல் நூற்பா சுட்டிக்காட்டுகிறது.
இதை மனத்தில் பதிய வைத்துக் கொண்டு இப்போது இராவணனின் மானமிகு உரையொன்றைக் கேட்போம். அவன் அவைக்களத்தில் உள்ள ஆன்றோர், சான்றோர், அறிஞர்கள் ஆகியோர்; இராவணனிடம் சென்று அவன் இராமனுடன் நடத்தும் போர் குறித்து முறையிடுகின்றனர். “தோற்பது உறுதி! எனவே அழிவைத் தேடிக் கொள்ளாமல் பணிந்து போவதே மேல்” என அறிவுரை கூறுகின்றனர். அப்போது இராவணன் சொல்கிறானாம்; பஞ்சணையில் ஊடல் வேளையிலும், பணிந்து போவது என்பது எனக்குக் கிடையாது என்று!
“பணிதல், ஊடல் நாளினும் உளவோ?” பணிந்து போவது என்ற நிலை இந்த இராவணனின் வாழ்க்கையில், ஊடல் நாளிலும் இருந்ததுண்டோ? இல்லை! கிடையாது! என்று பேசுகிறான். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய “தென்னவன் காதை”யில்; “இராவணனின் யாழோசை தோற்பதெல்லாம்; பத்தினியின் பள்ளியறைக் கனிமொழியின் முன்னேதான்” என்று எழுதியிருந்தேன்.
என் கருத்து; தொல்காப்பியப் பொருளியலைப் பின்பற்றியதாகும்! “மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலை புலவியுள் உரிய” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 33) புலவி = ஊடல் கிழவோன் = கணவன்
