தொல்காப்பியப் பூங்கா
பகுதி 65 · 67 / 102
நெருப்புக் கதிரவன் குளிரைப் பொழிந்தான்; நீ என்னருகில் இருந்த போதென்றும் குளிர் நிலா வெப்பம் கொட்டியது; நீ என்னைப் பிரிந்திருந்த போதென்றும் நீயும் நானும் நெஞ்சு திறந்து நிரம்ப எழுதினோம் பாயும் புலியெனச் சினந்து சீறாமல் தாயும் தந்தையும் என் நிலைக் கிரங்கியதை தலை சாய்த்து எண்ணிப்பார் அன்ப! நம் களவு ஒழுக்கம் நடப்பது அம்பலமானது நகர் முழுதும் அலர் தூற்றல் ஆரம்பமானது! உடன்போக்கு உன்னுடன் என்பதற்கும் தயார் என்றேன் ஊரறிய திருமணத்தை முடித்திடலாம் என்றாய்; ஒப்புக் கொண்டேன்.
கண்ணம் தடவி சின்னம் வரைவது பின்னர் ஆகட்டும்; என்ன பதில் எனக்கின்று தருகிறாய் சொல்! உடன் போக்கா? உடனடி மணவிழாவா? ஊமை நாடகம் எதற்காக நடத்துகிறாய்? உன் உதிராண்டும் ஒட்டித்தான் கிடக்குமா? என் வினாவுக்கு விடையளிக்க ஒரு நொடி நேரம் திருப்பதற்கும் மறுக்குமா? நான் இறப்பதற்குள் சொல்லிவிடு என்றாள்! “படிப்பதற்குத்தான் உனக்குத் தெரியுமே; பார் இதோ; பனை ஓலையில் மண ஓலை” என்றான். “ஒருதலை உரிமை வேண்டினும், மகடூஉப் பிரிதல் அச்சம் உண்மையானும், அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் போக்கும் வரவும் மனைவிக்கண் தோன்றும்.”
(பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 31) அம்பல் = புறங்கூறுதல் அலர் = செய்தி பரப்புதல்
