உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 64 · 66 / 102

இன்ப உணர்வு எல்லா உயிர்களுக்கும் பொது இயல்பு எனப்பட்டாலும்; ஆணும் பெண்ணுமாக இணைந்து நுகரப்படுகிற சிறப்பான இயல்பை உடையதாகுமெனப் பொருளியல் நூற்பா குறிப்பிடுகிறது. இதனை மேலும் விரிவாக விளக்கிடும் இளம்பூரணம்; அந்த இன்ப உணர்வு எனும் பொது இயல்பு கூட, மனம் பொருந்திய நிலை இருக்குமேயானால் பார்த்தயாரிடமும் சிறப்பாகக் காணக் கூடுமென்றும்; மனம் பொருந்தாத வழியெனிலோ, மனைவியிடம் கூட இன்பத்தைப் பெற முடியாதென்றும் சுட்டிக் காட்டுகிறது.

“எல்லா உயிர்க்கும்” என்பதை நச்சினார்க்கினியம் விளக்கும்போது, மக்களும், தேவரும், நாகரும், விலங்குகளும், பறவைகளும் முதலிய எல்லா உயிர்களுக்கும் - ஆணும் பெண்ணும் என நுகர்ச்சி நிகழும் எனத் “தெளிவு” படுத்துகிறது. “எல்லா உயிர்கள்” என்பதில் மேல் உலகவாசிகளான தேவர்களையும், கீழ் உலகவாசிகளான நாகர்களையும் நச்சினார்க்கினியம் சேர்த்துக் கூறும்போது; தேவர்களைப் பொருத்தமட்டில் அவர்களுக்கென எழுதப்பட்டுள்ள புராணங்களில் ஆணும் பெண்ணும் என இருபாலரும் இன்பம் நுகர்வது என்ற இயற்கைக்கு மாறாக - ஆண் தேவர்கள் பெண்ணுருக்கொண்டு இன்னொரு ஆணுடன் பொருந்திப் போகம் நுகர்ந்தமைக்கு எத்தனையோ கதைகள் உள்ளன.

எனவே பார்த்தயார் இன்பம், பரலோக தேவர்கள் இன்பம் என்பனவற்றைத் தவிர்த்துவிட்டு; பண்பாட்டுக்கு ஊறு விளையாத அளவு இந்த நூற்பாவுக்குப் பொருள் காணவேண்டுமேயானால் பின்வரும் பொருளே பொருந்துகிறது எனலாம். “அறம் பொருள் இன்பம் என்பதில்; இன்பம் எனப்படும் உணர்வு, ஒருவரையொருவர் அன்பினால் பொருந்தி, மனத்தினால் வெளிப்படத் தோன்றும் பொது இயல்பு உடையதாக இருப்பினும் ஆணும் பெண்ணுமாய் நுகரப்படும் சிறப்பியல்பை உடையதாகும்” “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 29) அமர்தல் = பொருந்துதல்; ஒன்றுதல் மேவற்று = ஆணும் பெண்ணும் பொருந்தி நுகர்தல்.