உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 63 · 65 / 102

அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்கிறது குறள். அச்சம் என்பதற்கு அடக்கமென்றும், நாணம் என்றும் பொருட்கள் உண்டு. நாணம் என்பது அச்சம், அடக்கம், மதிப்பு, வெட்கம் என்றெல்லாம் பொருள் படுமென்று புலவர் குழு தயாரித்த அகராதி கூறுகிறது. நமது செயலால் நமக்குத் தலைக்குனிவு ஏற்படுமெனில் அப்போது அச்சத்தைத் துச்சமாய்த் தூக்கி எறிந்து விடுவேன் எனக் கூறுவது எக்காலத்துக்கும் ஏற்புடையதல்ல. அந்தத் தாழ்நிலை வராமலிருக்க வேண்டுமென்று அஞ்சித்தான் தீரவேண்டும்.

நாணம் என்பது; ஆடவரைக் கண்டதும் தலைகுனிவது என்பதல்ல! அந்த நாணத்தையும்; அறம், பொருள், இன்பம் ஆகிய பொருள்களை எடுத்துரைத்து விரித்துரைக்கும்போது இணைத்துக் கொள்ள வேண்டுமென்கிறது தொல்காப்பியம்! மக்களின் உயிர்ப் பண்பு நாணம் என்பதால் அதை நீங்காமல் பார்த்துக் கொண்டு, அகமும் புறமுமாகிய பொருள்களையும் சேர்த்துக் கொண்டு ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு’ என்பதால்; அந்த உயர்ந்தோர் அறம், பொருள், இன்பத்தை மட்டும் போதிப்பவரில்லை; அவற்றுக்கெல்லாம் உயிர்ப் பண்பாகத் திகழும் நாணத்தையும் போற்றுபவர் என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

உயர்ந்தோர் எனப் படுவோர், அறம், பொருள், இன்பம் குறித்த அறிவுரையாளர்களாக மட்டுமல்லாமல், அச்சமுற வேண்டியது எதற்கு; அடக்கம் காட்ட வேண்டியது எப்போது என்பதறிந்து, நாணத்தை, அது நீங்காமைக்குரிய நல்வழிக்கண் அமைத்திடுவர் என்பதில் அய்யமில்லை! இந்த நூற்பா, தலைவன் தலைவிக்கிடையே நிகழும் நாணம் குறித்து சொல்லப்படுவதாகக் கருதாமல்; எந்த நிலையில் நாணுறும்போது அந்த நாணத்திற்கு உயர்வு ஏற்படுகிறது எனக் கணிப்போருக்காகச் சொல்லப்படுகிறது என அறிந்து அதற்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதே நன்றாகும்!

“மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 25) மிக்க பொருள் = அறம் முதலாகிய பொருள்கள் பொருள்வகை = அகம் புறமெனும் கூறுபாடு நாண் = நாணம்