உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 62 · 64 / 102

“இலக்கியம்” என்பது தமிழா? வட சொல்லா? என்று ஒரு பெரும் விவாதம்! ஏறத்தாழ ஒரு பட்டி மன்றமே நடந்து விட்டது. 1949 ஆம் ஆண்டு மே திங்களில் கோவை மாநகரில் நடைபெற்ற இரண்டு நாள் முத்தமிழ் மாநாடுதான் அப்படியொரு பட்டி மன்றமாக வடிவெடுத்தது. பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் மாநாடு. அறிஞர் அண்ணா, ஒளவை துரைசாமிப் பிள்ளை, பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், பெரும்புலவர் வெள்ளைவாரணனார் இன்னும் பல புலவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் நானும் மேடையில் இருந்தேன்.

இரண்டு நாட்கள் மாநாட்டிலும், தமிழின் வளர்ச்சி, தமிழரின் எழுச்சி குறித்து உரை நிகழ்த்தியது மிகக் குறைவு! ‘இலக்கியம்’ தமிழா அல்லவா என்பது பற்றியே பெரிய பட்டி மன்றம்; பத்தாயிரம் மக்கள் கூடியிருந்த மாநாட்டுப் பந்தலில்! இரண்டாம் நாள் நான் பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டேன். “பத்தாயிரம் மக்களைக் கூட்டி வைத்துப் பல ஆயிரம் ரூபாய்கள் செலவிட்டு மாநாடு நடத்திப் பெரும் புலவர்கள் பேரிளஞர்களையெல்லாம் அழைத்து ஒரே ஒரு பிரச்சினைக்காக; அதாவது ‘இலக்கியம்’ தமிழா அல்லவா என்று முடிவு செய்வதற்கு நேரத்தையும் நினைப்பையும் இருநாட்கள் வீணாக்கியிருக்கிறார்கள்.

இதற்குப் பதிலாக இந்தப் புலவர்களெல்லாம் பத்துப் பேரோ எட்டுப்பேரோ ஒரு தனி இடத்தில் கூடி; இந்த ஆராய்ச்சியை நடத்தி முடித்து; இலக்கியம் தமிழா அல்லவா என்பதை உங்கள் சார்பில் ஒருவரே வந்து எங்களுக்குக் கூறியிருக்கலாம்” இந்த என் கருத்து மாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னமும் இலக்கியம் என்ற சொல் ‘இலட்சியம்’ என்ற சொல்லில் இருந்து தோன்றியதா; ‘இலங்குதல்’ எனும் சொல்லில் இருந்து தோன்றியதா என்ற விவாதம் தொடர்கிறது என்பதற்காகவே அந்த “முத்தமிழ் மாநாடு” நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன்.

அதே போல தொல்காப்பியத்திலும் ஒரு சொற்போர்! “உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே” என்பது பொருளியலில் வரும் நூற்பா! “உயர்ந்தோராக இருந்து வார்த்தம் கூறு வழக்கு வழிப்படுதலின், அவ்வாறு வழக்குப்படுதல் செய்யுட்குக் கடன்” என்பது இளம்பூரணம். ஆனால் நச்சினார்க்கினியமோ; “உயர்ந்தோர் கிளவி” என்பதை “உயர்ந்தோர் கிளவியும்” என்று வசதியாக “உம்”ஐயும் சேர்த்துக் கொண்டு; அந்த உயர்ந்தோர் கூறும் “வேத நெறி”யோடு கூடுவதால், வழக்கின் நெறியிலே நடத்தல் செய்யுளுக்கு முறைமை என்று கூறுகிறது.

வழக்கு என்பதற்கு இங்கே பொருள்; நீதி மன்றங்களில் தொடரப்படும் வழக்கு என்பதல்ல! நம் தாய்மொழி தமிழில் வழங்கப்படும் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் வழக்கெனக் கூறப்படுகின்றன! ‘உயர்ந்தோர் கிளவி’ மட்டுமே அச்சிறப்பைப் பெற முடியும் என்கிறது இளம்பூரணம்! “உயர்ந்தோர் கிளவியும்” என்று குறித்ததின் வாயிலாக; “இழிந்தோர் கிளவி” மட்டுமின்றி “உயர்ந்தோர் கிளவியும்” எனக் கருத நேரிட்டு; இழிந்தோர் கிளவிக்கும் வழக்கில் இடம் கொடுத்ததாகி விடுகிறது.

தொல்காப்பியம் மரபியலில் வரும்; “வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே” எனும் மரபியல் நூற்பாவை பெரும்புலவர் வெள்ளைவாரணனார்; தனது தொல்காப்பிய உரை நூலில் மேற்கோள் காட்டி; “உயர்ந்தோர் கிளவியும்” என்பது, உயர்ந்தோரல்லாத இழிந்தோர் கிளவியும் என உணர்த்துவதைக் சுட்டிக்காட்டி; மேலும் ‘வழக்கு’ என்பது மொழி வழக்கேயல்லாமல்; ‘வேத நெறி’ என நச்சினார்க்கினியம் கூறுவதும் பொருந்தாது என்கிறார். ‘வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே; என்னை?

உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமையின்” என்று பேராசிரியம் தெளிவுபடுத்துகிறது. “என்னடா பார்க்கிறே?” “என்னம்மா மொறைக்கிறே?” போன்ற இழிந்த சொற்கள் வழக்கு எனும் இலக்கணத்தில் ஏறிட முடியுமா? எக்காலத்திலும் முடியாது! “உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 23)