உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 61 · 63 / 102

படைக்கலன்கள் உருவாக்கும் உலைக்களம் பாசறை வீரர் சிலர் பணியாற்றும் நிலைக்களம் பனையோலை கொண்டொரு இளம்பாவை ஓடோடிவந்தாள் வினைமேற் கொண்டிருந்த ‘வீரன்’ என்பான்; “நனையாமல் நரியைக் குளிப்பாட்டும் மங்கை நீ; நாளை வருவாய் என்றிருந்தேன்; இன்று வானைச் சீராக்கும் வேளையிலே - இந்தக் காளை மகிழ வந்து விட்டாய்! மல்விழியாள் என்ன மடல் கொடுத்தாள்? கொடு!”

என்று அவள் தாற்றனுக்கு அஞ்சாமல் பலர் அறிய வாங்கிக் கொண்டான். “நேற்று பகல் முழுதும் வருவீர் என்று பசியோடிருந்தேன் காற்றில் எழுதிய எழுத்துத்தான் போலுமெனக் கண்டுகொண்டேன். தோற்றுத்தான் போகுமடி உம்காதல் என்று தோழியொருத்தி சொன்னது பலித்து விடுமா?”

பகலில் வருவது உமக்குப் பயமாக இருப்பின் பதுங்கிப் பதுங்கி இரவில் வரலாமே கண்ணா! பாடும் நிலாவொளிக்காக அஞ்சுகிறீரா? மாலையில் வீழும் கதிரவன் மறைந்த பின்னர் வந்திடலாமே! வழியில் இடையூறு பலவுண்டு, வருவதற்குத் தடையாக! வாழ்க்கையெனில் இன்ப துன்பம் இரண்டுந்தான் உண்டு! வாடுகின்ற என் நெஞ்சுக்கு மருந்து நீர்தானே வைத்துள்ளீர்? நான் சூடுகின்ற மலர் கூட மணப்பதில்லை நீவீர் வராத நேரங்களில்! அல்லும் பகலும் ஊர்க்காவல் மிரட்டல் - அதை வெல்லும் திறனை வீரன் நீரேன் கற்றிடவில்லை?

கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழிதான் வரவேண்டும் கடினமான வழிதான்; நானறிவேன் நன்றாக! வரும் வழியின் நிலையறிந்து வராமலிருப்பதும் ஒருவகையில் நலம்தான்; என் விழியின் நீர் துடைப்பதற்கு வந்து போவதே எனக்கொரு சுகம்தான்! சந்திப்பதற்கு நாம் பல முறை திட்டம் தீட்டி - பின்னர் சிந்திக்கும்போது நமக்கே அது குத்தீட்டி! குழப்பமே மிஞ்சுகிறது; நம் குடும்பமோ மிக அஞ்சுகிறது! முந்திக் கொண்டு திருமணத்தை முடித்துக் கொள்வதொன்றே பந்திக்குக் காத்திராமல் பசியடக்கிக் கொள்ளும் வழியாகும்” காதலியின் பனையோலை மடல்படித்த வீரன்; தூது வந்தவளின் காதை மென்மையாகத் திருகியவாறு; “அப்போதே சொன்னேன் நரியை நனையாமல் குளிப்பாட்டுவாயென்று தப்பாது என் வார்த்தை இதை உன் தலைவியிடம் சொல்லிவிடு!

தை பிறந்தால் வழி பிறக்கு” மென்றான்; வந்தவளோ “பத்தா மாதம் தவறாமல் குழந்தையும் பிறக்கு” மென்று வாழ்த்திவிட்டு; “நரியை நனையாமல் குளிப்பாட்டுவதென்றால் என்ன? தெரியாமல் கேட்கிறேன்; தெரிவிப்பீர்” என்றாள்! “நரி நானேதான்; என்னை நனையாமல் குளிப்பாட்டத் தானே நங்கை நீ என் காதல் தலைவியிடம் நறுக்கோலை எழுதி வாங்கி வந்து எனை நனையாமல் குளிப்பாட்டி விட்டாய்” என்றான். “பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின் வழுவினாகிய குற்றங் காட்டலும், தன்னை அழிதலும், அவன் ஊறு அஞ்சலும், இரவினும் பகலினும் நீவா என்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த அன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள் என்ப” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 16) ஆறும் = வழியும் ஊறு = துன்பம் கிழத்தல் = கலங்குதல் புரை = பழுது