உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 60 · 62 / 102

பழம்பெரும் தமிழ் இலக்கியங்களாயினும் இலக்கணக் கருவூலமாம் தொல்காப்பியமாயினும் பெண்களை ஊமைகளாகவும் அடிமைகளாகவும் சித்தரிக்கின்றன எனக் குறை கூறுவோர் உண்டு. எழுச்சியுற்ற பெண்கள் என்றும் பெண்ணுரிமைப் போர் என்றும் முழக்கங்கள் மூலை முடுக்குகளில் எல்லாம் எழுந்துள்ள இந்தக் காலத்திலேயே இன்னமும் பெண்களின் சுதந்திரம் பல இடங்களில் கேள்விக்குறியாகவே இருப்பதை அன்றாடம் அறிய முடிகிறது! அறிவுடையவர்கள் பட்டியலில் ஆடவர் இடம் பெற்றிருப்பது போலவே பெண்டிரும் இடம் பெற்றுள்ளனர்.

இன்னும் சொல்லப் போனால் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளில் ஆண் மாணவர்களைக் காட்டிலும் பெண் மாணவர்களே எண்ணிக்கை அடிப்படையில் அதிக விழுக்காடு இருக்கிறார்கள் என்பது அதிகாரபூர்வமான ஆதாரமாகவும் அமைந்து வருகிறது ஆண்டுதோறும்! ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளிலும் அலுவல் பொறுப்புகளிலும் கூட அவர்கள் ஆடவர்களுடன் போட்டியிடுகிற அளவுக்குப் புகழ் பெற்று விளங்குவதையும் இக்காலத்தில் காண முடிகிறது.

இந்த அளவு முன்னேற்றத்துக்கிடையிலேயும் அங்கொன்றும் இங்கொன்றுமாகவும் சில பகுதிகளில் பரவலாகவும் ஆணாதிக்கத்தின் பிடியிலே பெண்கள் சிக்கிச் சீரழிவதும்; குருட்டு நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு வைதீகப் படுகுழிகளில் வீழ்வதும், மாயம் மந்திரமென்ற மயக்கத்துக்கு ஆளாகிப் பகுத்தறிவை இழப்பதுமான செயல்களில் ஆடவர் எண்ணிக்கையைப் பெண்டிர் எண்ணிக்கை மிஞ்சக்கூடியதாகவே இருக்கிறது. இந்தச் சூழலிலும் பெண்களின் முன்னேற்றம்; விஞ்ஞானம், கல்வி; ஏன் - பாதுகாப்பு போன்ற துறைகளில் கூட கணிசமான அளவுக்கு வளர்ந்து கொண்டேதானிருக்கிறது.

இந்தக் காலகட்டத்துப் பெண்களின் நிலையோடும் அவர்கள் அனுபவிக்கும் உரிமைகளோடும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்துப் பெண்களின் நிலை - ஆண்களின் நிலை ஆகியவற்றை பழம்பெரு வரலாறுகளிலோ இலக்கியங்களிலோ படித்துப் பார்த்துவிட்டு அவற்றைத் தவறாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட அக்கால நிலையை அறிந்துகொள்ளத் துணைபுரியும் சாதனங்களாக மட்டுமே அவற்றைப் பார்க்கவேண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதே அறிவுடையோர் செயலாகும். அக்கால நிலையைச் சுட்டிக் காட்டும் இலக்கியங்களை நாம் வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டும் என்பதில்லை.

அவை நமக்கு நல்லதாகவோ அல்லதாகவோ ஊட்டும் அடிப்படைக் கருத்து என்ன? முழுமையாகவோ, பாதி அளவோ, கால்பகுதியோ அவற்றில் நாம் எடுத்துக் கொண்டு அந்த அடிப்படையில் எந்தத் துறையானாலும் அந்தத் துறையில் முற்போக்கு வழியில் நடைபயில நினைக்கக் கூடாதா? அதுவே அடிப்படைத் தவறா? அடிப்படையையே தகர்த்துவிட்டு முற்றிலும் புதுமை காண வேண்டுமென்று வாதிட்டால் நம் இல்லத்தில் பாட்டன் பாட்டிகள் - தாய் தந்தையர் படங்களோ, பயன்படுத்திய பொருள்களோ கூடப் பழமையின் சின்னங்கள், பயன்படுத்த முடியாதவை அல்லது கூடாதவை என்று ஒதுக்கப்பட வேண்டியவைகள்தான்.

பழமை இலக்கியங்கள் நடக்க முடியாதவை நடந்ததாகக் கூறுபவைகளை நம்பாமல் விட்டுவிடலாம். ஆனால் இன்றுமின் சக்தியால் ஓடும் புகைவண்டிகளுக்கும் அதுபோல இயந்திர உதவியுடன் பறக்கும் விமானங்களுக்கும் இயக்கும் சக்கரங்கள் இருப்பது போல அமைப்பில் வடிவில் மாற்றமிருந்தாலும் அவற்றைப் போலத்தான் பழங்கால மன்னர்களின் தேர்களும் இருந்தன; இன்றைக்கும் சிற்றூர்களில் மாட்டுவண்டிச் சக்கரங்கள் இருக்கின்றன; சீருந்து பேருந்துகளுக்கும்கூட அப்படித்தான்!

அதுபோலத்தான் பண்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் மலைக்கத்தக்க மகத்தான மாற்றங்கள் ஏற்படினும் அனைத்துக்குமே அசைக்க முடியாத அளவுக்கு அடிப்படைகள் மாறாமல் இருக்கின்றன. தொல்காப்பியத்தில் அறுபது தொகுதிகள் எழுதிவிட்ட நிலையில் சற்று நின்று இளைப்பாறுமிடத்தில் “திரும்பிப் பார்த்து முன்னேறுதல்” எனும் அச்சுறுத்தல் உணர்வு தேவை என்பதற்காக இதனைக் குறிப்பிட வேண்டியதாகிறது. பொருளியலில் இடம்பெற்றுள்ள நூற்பா; அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையை வற்புறுத்தும் சொல்வன்மை, நல்லறிவு, பிறரிடம் காண இயலாத அருமை - இவை பெண்ணின் பண்புகள் என அறிவிக்கின்றதேயல்லாமல் பெண்ணுக்கிடப்படும் அறிவுரை ஆணைகள் எனக் குறிப்பிட்டுக் கூறவில்லை.

இவ்வாறு பெண்களுக்குச் சொல்லப்பட்டுள்ள இயல்புகள் போற்றத்தக்கவையே தவிர தூற்றத்தக்கவையல்ல என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் உணரலாம். “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலான” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 15)