தொல்காப்பியப் பூங்கா
பகுதி 59 · 61 / 102
கொஞ்சம் கொஞ்சமாக உடம்பும் இளைத்து உயிரும் களைத்து வருவதை நெஞ்சம் உணர்கிறது மஞ்சம் கண்டு மணவாளனைப் பல நாளாயிற்று அதனால் எஞ்சிய உயிர் இருப்பதை மட்டும் உணர்கிறாள். நெஞ்சம் அறியாவண்ணம் தனக்குள்ளே கேட்கிறாள் தவித்து; “என் உடலுக்கு என்ன ஆயிற்று? உயிருக்குத்தான் என்ன ஆபத்து?”
கேள்வியுடன் நிறுத்திவிட்டு உறுதியை ஒரு வேள்வியாக நடத்துகிறாள் - “காண்பதில்லை அவனை” என்பதே அந்த வேள்வி! “உடம்பும் உயிரும் வாடியக் காலும் என் உற்றன கொல் இவை எனின் அல்லது கிழவோன் சேர்தல் கிழத்திக்கு இல்லை” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 9) அவனைப் போய்க் காண்பதில்லை என்று அறுதியிட்டுக் கூறி வேள்வி நடத்தும் வேல்விழியாள் அவள் நெஞ்சத்தைக் கேட்கிறாள்; தனது முடிவும் உறுதியும் சரிதானே என்று!
“இல்லையடி பெண்ணே; ஊருக்காக நீ உடலைப் பற்றியும் உயிரைப் பற்றியும் கவலைப்படாது போலக் காட்டிக் கொண்டாலும் கணத்தில் போய் அவனைக் காண வேண்டுமென்றே துடிக்கிறேன்” என்று அவள் நெஞ்சு புலம்பியது! “ஒரு சிறை நெஞ்சோடு உசாவுங்காலை உரியதாகலும் உண்டென மொழிப” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 10)
