தொல்காப்பியப் பூங்கா
பகுதி 58 · 60 / 102
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலர்ந்தது காம நோய் எனும் காதல் நோய்! மலர்ந்த நோய் மங்கை யொருத்திக்கா, அல்லது அலைந்து மலர் தேடும் ஆண் எனும் வண்டுக்கா? யாருக்கென்று பிரிவினைப் பேச்சு வேண்டாம் யாரானாலும் அவர்தம் நெஞ்சொடு கிளத்தல் கேட்போம்! இன்பமும் துன்பமும் என இருவகை நிலையும் அன்புடை நெஞ்சினை ஆட்டிப் படைத்திடும்போது இயல்பா யெழுந்திடும் எட்டு வகை மெய்ப்பாடு எட்டு வகை உறுப்புடன் விளங்குதல் போலவும் அவை உயிருடன் உணர்வும் உடையது போலவும் ஒரு மொழிக்கு உடனே மறுமொழி புகல்வது போலவும் வாய் பேச இயலாத விலங்குகள் பறவைகள் தமக்காக வாதாட வந்துற்றது போலவும் “தூது நீ சென்று வாராய்” என்று தூய வெள்ளை அன்னத்தை அனுப்புவது போலவும் பஞ்ச வண்ணக் கிளி உருவில், பச்சைப் புறா உருவில் தன் நெஞ்சத்துக்கோர் ஆறுதல் கூறுவது போலவும் பிறர் எவர்க்கோ பிணியெனில் - அது பிறர்க்கல்ல; தனக்குற்ற காமப்பிணிதான் என்றும் அறிவையே கூட வேறுபடத் தனியே நிறுத்தி - எதையும் அறிவதற்கு வாயிலாக அரிதாய்க் கிடைத்த பொறி புலன்களையும் போ என ஒதுக்கி பூப்போல மனம் என்ற உவமைப் பெயரையும் பூவும் மனமும் என்ற உவமிக்கும் பெயர்களையும் பொருள் மூவகையாம் தொழிலுக்கும் பண்புக்கும், பயனுக்கும் பொருந்துகின்ற உவமம் கூறுதலும் பூவெனும் தலைவிக்கும் வண்டெனும் ஆணுக்கும் உரிய கூற்றாம் - ஒருபாற் கூற்றாம்!
“நோயும் இன்பமும் இருவகை நிலையில் காமங் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க, ஒட்டிய உறுப்புடையது போல், உணர்வுடையது போல், மறுத்துரைப்பது போல், நெஞ்சொடு புணர்ந்தும் சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும், அவரவர் உறுபிணி தம்போற் சேர்த்தியும், அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரியவாக உவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத்து இருவர்க்கும் உரியபால் கிளவி” (பொருளதிகாரம் - பொருளியல் - நூற்பா : 2)
