உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 57 · 59 / 102

வாழ்க்கையின் இறுதிக் காலம் பற்றிக் காப்பியர் வரைவதை வற்றாத நதியொன்று கடலில் கலப்பதோடு ஒப்பிடலாம்! மலைகளில் தோன்றிக் காடுகள் கழனிகள் தாண்டி ஆழியை அடையுமுன்னர் ஆயிரம் நன்மைகள் புரியும். முடிவுரையை அலைகடலில் எழுதுவதால் நதி முழுதும் முற்றுப் பெற்றதாக நினைப்போரில்லை! வாழ்ந்து முடித்தோரின் வரலாற்று ஏடுகளும் - அவர் வழித் தோன்றல்களால் தொடர்ந்து வாழ்வதுண்டு! நதிக்கும் அந்த நிலைமைதான்; நல்லோர்க்கும் அந்தப் பெருமைதான்!

உதயத்தில் “சுள்” எனக் கதகதப்புடன் பிறந்து உச்சியேறிக் கடும் வெப்பம் பொழிந்து - மேற்கில் மறைவதற்கு முன்பு மந்தமாருதம் வீசி இந்த மன்பதைக்கே மகிழ்வு தரும் கதிரோன் போல இல்லற வாழ்வில் பயனெல்லாம் பெற்றும் தந்தும் இறுதிக் கட்டத்தில் இருக்கும் முதியோர் இனிய மக்கள் தம்மைச் சூழ்ந்து இருக்கவும் இதந்தரும் உற்றார் இணைந்து இருக்கவும்; அறவழியொன்றே இறைவழியென்று அமைதியிற் கழிப்பதே அரும்பெரும் பேறாம்! “காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 51) காமம் சான்ற = விரும்பிய நுகர்ச்சி கடைக்கோட் காலை = இறுதிக்காலம்