உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 56 · 58 / 102

வினையொன்றை முடிப்பதற்கு வேற்றூர் சென்ற வேலன் விரைவில் திரும்பி வஞ்சியைச் சந்திக்கப் புரவியிலே புறப்பட்டான் வான் சிந்தும் கண்ணீர் உழவனுக்கு உவகை தரும்; மொழியில் தேன் சிந்தும் வஞ்சிக்கு வேலன் வருகைதான் உயிரே தரும்! பூ மொண்டு தருகின்ற மது அருந்த பொன்வண்டு வராவிடில் பூவொன்றும் வாடுவதில்லை. பூங்கொடியோ வேலனைச் சுமந்த அந்தப் புரவியும் விரைவில் வராவிடில் பூகம்பமாகும் உள்ளமென, புயல்போலச் சுவாசித்துப் புழுப் போலத் துடித்திடுவாள் புரவிக்கு அது புரிந்து ஓடவேண்டும் ஊர்நோக்கி; வேகமாக!

இடைவழியில் எந்தவொரு இடத்திலும் தங்கித் தாமதிக்காமல் தடையேது மின்றித் தட்டிவிட்டான் புரவியை தன்னூர்த் தடத்திலேயே! புலவர் பெருமான் சொல்லுகிறார்; புரவியின் வேகம்; ஒரு பறவையின் வேகமாம்! அந்தப் பறவையோ அவனுக்கு அவன் உள்ளம் போல் சொந்த ஊர் போகும் விரைவுக்கு உதவுவதாம்! ஆனால் பறவை வேகத்தில் குதிரை சென்றதாக அய்யன் காப்பியர் குறிப்பிடும்போது அய்யமொன்று தோன்றுவதை அகற்றிட முடியாது! ஆகாயப் பறவை வேகம் காட்டச் சிறகடித்துப் பறக்கவேண்டும் - ஆனால் பறவையானாலும் பறவையனையப் புரவியானாலும் பறந்தோ அல்லது பாய்ந்தோடியோ ஊர்ப் போய்ச் சேரக் குறைந்தது பத்து நாழிகையாகிலும் தேவைப்படும் - ஆனால் அவள் மீது காதல் பித்துக் கொண்ட மனமோ; நினைத்தவுடன் வஞ்சியிடம் போய்ச் சேரும்!

“வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை இடைச் சுர மருங்கில் தவிர்தல் இல்லை; உள்ளம் போல உற்றுழி உதவும் புள் இயல் கலிமா உடைமையான” (பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 53) வினை = தொழில், போர் தவிர்தல் = தங்குதல் புள் = பறவை கலிமா = குதிரை