சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 98 · 98 / 104
அவன்:-
“மாம்பழச்சாறு நிகர் தமிழைத்தான் மங்கையுன்பால் நான் கேட்டு மகிழக்கூடும்! மாம்பழ மேனியின்பால் எனக்கு நாட்டமில்லை! உன் மாத்தமிழ்த் திறன் போற்றும் மனமுண்டு எனக்கு!”
அவள்:-
“திறனைப் புகழ்ந்தமைக்கு மிக நன்றி; அந்தத் திறனிருக்கும் ஆரணங்கின் காதலுக்குத் தீவைத்தல் நன்றா?”
அவன்:-
“இருதரப்பின் இதயப் பரிமாறலே காதலுக்கு இலக்கணமாம்!”
அவள்:-
“ஒருதரப்பின் ஆசைக்கும் அதுதான் இலக்கணமா?”
[Full-page illustration; no printed body text.]
அவள்:-
“படர்கின்ற முல்லைக்குப் பரிவு காட்டாமல் இடர்தந்து புறக்கணித்தல் பாபமன்றோ?”
அவன்:-
“பாரி மன்னன் தேர்; முல்லைக் கொடியொன்று படரத்தான் பயன்பட்டதேயன்றி; பரவிடும் மலரின் மணத்தை - அந்த மரத்தேர் நுகர்ந்து மகிழ்ந்ததும் உண்டோ? பாவை நீ என்மீது படர்வதென்றால் - நான் பாரியின் மரத்தேராய் இருந்தென்ன பயன்?”
அவள்:-
“நாடாளும் மன்னரின் மைந்தர்தானே - காடாளும் மாமுனிவர் அல்லவே நீர்!”
அவன்:-
“மாமுனிகளும் மாதர் மடி வீழ்வதுண்டு - மறைமுகமாய் மதனன் கலை பயில்வதுண்டு! மன்னர்மகன் நான்; உண்மைதான்! மண் வளைக்கக் கொண்ட ஆசை; பெண்ணின் இடை வளைக்கக் கொண்டேனில்லை!”
அவள்:-
“வாளுறையுடன்தான் உறங்குவேன் எனும், தலைவ! சூளுரையொன்றுரைப்பேன் அறிக! வாழ்ந்தால் உமை மணந்து வாழ்வேன்! அன்றி வீழ்ந்தால் உமது வாள்முனையால் வீழ்வேன்!”
அவன்:-
“கார்கால இடியைப்போல் முழங்குகின்ற கவிப்பாவாய்; நீ சொன்ன இரண்டுமே நடக்காது! போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன் பூவிதழை அல்ல! அல்ல! இதுவும் உறுதி! அஃதேபோல் அவ்வாளால் உன்உயிரை அழிக்கமாட்டேன் அதுவும் உறுதி! வருகின்றேன்; என்னை மன்னித்து வழியனுப்பி வைத்திடுக!”
இவ்வாறு கூறிவிட்டு, விழியழகி நற்கண்ணை விடையளிப்பதற்குக் காத்திராமல் விரைந்து வந்து வீட்டோரம் நின்றிருந்த தேர் ஏறி அமர்ந்து கொண்டான்.
தொடர்ந்து வந்த துடியிடையாள் - தேரின் தூண் ஒன்றைப் பற்றிக்கொண்டு - “உமைப் படர்ந்து தழுவத் தாவுகின்ற - இளம் பருவக்கொடிதான் வதங்குவதோ” என்றழுதாள்!
“உறையூர்க்கு அவசரமாய்ப் போகின்றேன் இன்று! ஓரிருகிழமைக்குள் திரும்புகின்றேன் இங்கு! உன்னோடு உரையாட நேரமில்லை இப்போது; உளம் திறந்து முழுமையாகப் பேசலாம் அப்போது!” என்றான்.
தட்டிக் கழிக்கின்றான் எனத் தெரிந்துகொண்டு - தேரில் முட்டிக் கொண்டழுதவாறு நற்கண்ணை; “தலைவனே! உமக்காகத் தவமிருக்கும் என்னுள்ளத்தில் அலைபாய்ந்து ஒலிக்கின்ற பாட்டைக் கேள்” என்றாள்; - பாடினாள்!
* “இறாமீனின் உடல்போன்றுச் சொரசொரப்புக் கொண்ட சுறாமீனின் முகத்தில் நீண்ட கொம்புகள் போல் முட்கள் குத்தும் இலைகள் நிறை தாழை மரங்கள் முதுயானைத் தந்தம்போல் அரும்பு முதிர்ந்து மான்களிலே பெண்ணினம்போல் தலைசாய்த்து மணங்கமழச் செய்கின்ற மகிழ்ச்சி குலுங்கும் விழாக்களங்கள் அமைந்துள்ள கடற்பரப்பிலும், வெற்றிக்கொடி நாட்டுகின்ற வீரர்குலத்தலைவா! மணிகள் அசைந்தாடும் உன் நெடுந்தேரை; உன்பால் பணிபுரியும் தேர்ப்பாகன் விரைந்து செலுத்திட; நீயோ ஒருசில நாள் கழித்து வருவேனென்று ஓதுகிறாய் எனக்கு!
உனைப்பிரிந்து ஒருநாளும் இனி உயிர்வாழமாட்டாள் இவள் என உணர்க!”
நற்கண்ணையின் சோக இசையினூடே; வீட்டோரம், நகர்ந்து கொண்டிருந்த அந்தத்தேர்; நற்கிள்ளி ஆணை கேட்டு நாலுகால் பாய்ச்சலில் நடுவீதியிற் பறந்து மறைந்தது ஓர் நொடியில்! புரவிகள் எழுப்பிய புழுதித்துகளைப் பொருட்படுத்தாது பின்தொடர்ந்தவளைப் பொற்கொடி வந்து தடுத்தும் பயனிலை! அவளோ புலம்பிடும் சிலம்புடன் ஓடுகின்றாள்!
*
