உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 97
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 97 · 97 / 104

நற்கண்ணை பாடி முடித்து நடுங்கினள் தாயைப் பார்த்து! “நாணிருக்க பயமேன் நங்காய்!” என்றுரைத்தவாறு பார்ப்புடைய புலவர்பிரான் அவையை நோக்கி; “கற்புடைய இக்குல விளக்கை உங்கள் முன்னே இளவரசன் நற்கிள்ளி பெற்ற வெற்றிக்குப் பரிசாக வழங்க பெருங்கோழிநாய்கன் வழங்கற்கு முன்வந்துள்ளார்! விருப்பம் பெண்ணுக்குண்டு நானறிவேன்! மறுப்பேதும் கூறாமல் ஒப்புக்கொண்டுள்ளார் தந்தை! தாய்க்கு மட்டும் இது நடக்குமா என்ற ஐயம்!

அதனால் இந்தத் தமிழ் மலரை கிள்ளியின் தடந்தோளில் சூட்டேற்குத் தடையாக யாருமில்லை” என்றார்!

“தடையுண்டு” எனத் தணல் மொழி பொழிந்தவாறு படைகொண்டு வென்று வந்த நற்கிள்ளி அதிர்ந்தெழுந்தான்! “போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்; பூவிதழை அல்ல! அல்ல! அல்லவே, அல்ல!” என்றான்! போய்விட்டான் அவையை விட்டு!

தாம்போட்ட கூச்சல் செவியைத் துளைத்திடுமுன் உலகம் இருண்டு சுற்றியதால் நற்கண்ணை; இதயம் உடைந்து நொறுங்கத் தரையில் சாய்ந்தாள்!

*

1.

* “அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்கு, என் தொடிகழித் திடுதல்யான் யாய் அஞ்சுவலே; அடுதோள் முயங்கல் அவை நாணுவலே...”

*

(புறநானூறு : பாடல் : 83 பாடியவர் : நற்கண்ணையார்)

*

2.

* “இம்படு அழியா வலம்படு வேட்டைத் வாள்வரி நடுங்கப் புகல்வந்து ஆளி உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி, வெண்கோடு புய்க்கும் தண்கமழ் சோலைப் பெருவரை அடுக்கத்து ஒருவேல் ஏந்தித் தனியன் வருதல் அவனும் அஞ்சான்; பனிவார் கண்ணேன் ஆகி, நோயட, எமியேன் இருந்தல யானும் ஆற்றேன், யாங்குச் செய்வாம் கொல் - தோழி!...”

*

(அகநானூறு : பாடல் : 252 பாடியவர் : நற்கண்ணையார்)

பொருள் விளக்கம் :

1. மை அணல் = மை போன்ற தாடி. தொடி = வளையல். கழித்திடுதல் = கைவிட்டுக் கழன்று விடுதல். யாய் = தாய். முயங்கல் = தழுவுதல்.

2. வலம்படு = வலிமையுள்ள. வாள்வரி = புலி. புகல்வந்து ஆளி = வெற்றி விருப்புடன் வந்த யாளி எனும் ஒருவகை மிருகம். ஒற்றி = அறைந்து கொன்று.

*

ஒருதலைக் காதல்

7

மெல்லக் கண்ணிமைகள் விரிந்து கருவிழிகள் மலர்ந்தபோது; இல்லத்துக் கட்டிலிலே நற்கண்ணை; தானிருப்பதுணர்ந்தாள்! மேகத்தின் சூழலுக்குள் மறைந்திருக்கும் கதிரொளிபோல் சோகத்தின் ஆழத்திலிருந்து கண்ணோளியைப் பாயவிட்டு, தன்னருகே குனிந்து நின்ற பொற்கொடியை உற்று நோக்கி, “தாய் தந்தை எங்குற்றார்?”

எனக் கேட்டாள்!

“தலைவெடித்து விட்டதுபோல் ‘தாம்தூம்’ எனக்குதித்து, தன்மானத்தை விலை கூறிவிட்டீரே” என்று; தந்தையைக் கடிந்துகொண்டு - இனித் தாமதித்தல் இவ்வூரில் ஒருக்கணமும் கூடாதென்று, பொங்குற்றே உன் தாயார் புறப்பட்டுப் பூம்புகார் நோக்கிப் போய்விட்டாள்!

இங்குற்ற அவமானத்தால் தலையிறக்கம் வந்ததென்று, இடிந்து போயிருந்த தந்தை; உன் தாயைத் தொடர்ந்து ஒடிந்து போன அவள் இதயத்தை ஒட்டவைக்கச் சென்று விட்டார்”

பொற்கொடியாள் சொன்ன தகவல் கேட்டு நற்கண்ணை; விற்புருவம் மேலுயர்த்தி, “வீணாக நான் மட்டும் ஏன் வாழவேண்டும்” என்றாள்! “உயிரினுமினிய தமிழ்மொழியை வாழவைக்க உனைப்போன்றோர் ஓராயிரம் ஆண்டு வாழத்தான் வேண்டும்!” என்ற குரல் கேட்டு ஏந்திழையாள் திடுக்கிட்டாள்! அந்தக் குரலுக்குரியோன் நற்கிள்ளி என்றபோது; எதிரே காணுகின்ற காட்சி மெய்தானா என்று - எழில் விழிகள் இரண்டின் இமைக்கதவு படபடக்க; “எந்த உலகில் இருக்கின்றேன் நான்?”

என்று சொந்தக் கண்களையே நம்பாமல் கேட்டுக்கொண்டாள்!

இந்த உலகில் இனி நமக்கென்ன வேலையென்று இருவரையும் தனிவிடுத்துத் தோழி மெதுவாக நகர்ந்துவிட்டாள்!

நற்கண்ணை நிலையோ இங்கு; நரம்புகளில் எல்லாம் இசையரங்கு!

“இரக்கம் பிறந்ததா என்மீது?” என்று எழுதிக்கேட்டன விழிகள்! “உருக்கம் சுரந்ததா என்பால்?” என்று துடித்துத் தவித்தன இதழ்கள்!

“மகுடமொன்றைத் தலைக்கு அணியும் மன்னவன் மகனே! - நான் மகுடமிரண்டை மார்பகத்தில் தாங்கி நின்றும்; முடிசூட மறுத்திடல் ஏனோ?” என்று கொடியிடையாள் கேட்கவில்லை! அஃது அவள்; முறுவலிலே ஒளிந்திருந்த மெளன வினா!

நிலைகுலைந்து நிற்கின்றாள் நேரிழையாள் எனக் கண்டும் அலைகடலின் கொந்தளிப்பை அடக்குதற்கு முனையாமல்; “நான் வந்திருக்கும் நோக்கம் புரிகிறதா?” என்றான்!

அவள்:-

“தேன் இனிக்கும்! தேளின் நஞ்சு கடுக்கும்! தேடி, இவையிரண்டில் எதை எனக்கு அளிக்கப் போகின்றீர்? வான் பார்த்து ஏங்குகின்ற உழவனுக்கு வறண்ட காற்றுத்தான் வெகுமானமா? அன்றி வளம் சேர்க்கும் மழையெனும் அமுதபானமா? கூன்பிறை வளர்ந்தொரு முழுமதியாகுமா? - அன்றிக் கும்மிருட்டே என் வாழ்வுக்கு வகுத்த விதியாகுமா?”