சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 96 · 96 / 104
பொருள் விளக்கம் :
முள்எயிற்றுவாவல் = முள்போன்ற பற்களையுடைய வௌவால். மாஅத்த ஓங்கல் அம்சினை = மாமரத்தின் உயர்ந்த அழகிய கிளை. தூங்குதுயில் = தொங்கிக் கொண்டு உறங்குதல்.
*
ஒருதலைக் காதல்
6
உறுபகையின் நெடுவாலை ஒட்ட அறுத்து, இருகிழமை நடந்த போரில் வெற்றிகுவித்து முக்காவல் நாட்டு மண்ணின் முரசதிர, எக்காள முழக்கம் எட்டுத்திசை ஒலிக்க, வருகின்றான் தித்தன் மகன் என்று வாழ்த்தி தருகின்றார் வரவேற்பு ஆமூர் மக்கள்!
மணலில்லை வீதிகளில்; மலர்களேதான்! முகிலில்லை விண்வெளியில்; கொடிகளேதான்! வீட்டுக்குள் இருந்திட்ட மாந்தரெல்லாம் நாட்டுக்கு வெற்றி தேடித்தந்தவனைக் காண்பதற்கு, காட்டுக்குள் பெய்திட்ட மழைநீராய் ஓடிவந்தார்! கூட்டுக்குள் கிடக்குமோ நற்கண்ணைக் கிளி மட்டும்?
“வெற்றி யாருக்கு?” என விரைந்தோடி வந்தவளை, “வேறு யாருக்குக் கிட்டும்?” எனத் தழுவிக் கொண்டு, சுற்றிச் சுழன்றாடுகின்றாள் பொற்கொடியாள்! அந்தச் சுந்தரியோ மகிழ்ச்சியெனும் சுமைதாங்க முடியாமல் தள்ளாடுகின்றாள்!
பேரிகையின் ஒலிக்கேற்பப் பீடுநடை போட்டு பெருமிதமாய் நிமிர்ந்துவரும் வெண்புரவிமீது தூரிகை கொண்டெழுதா வீர ஓவியமாய்ப் பெருநற்கிள்ளி அமர்ந்திருந்தான்!
களம் புகுந்து ஓய்வின்றிப் போர்புரிந்த காரணத்தால் முகம், மழிக்க நேரமில்லை போலும் - அதனாலே கருநிறமுடி கொஞ்சம் நாற்றுவிட்டுக் குறுந்தாடி போலத் தோற்றமளித்திடினும் - அதுவும் நற்கண்ணை நயனங்களில் புதிய போதையூட்டி நாடி நரம்பெல்லாம் காதல் இசை மீட்டியது!
ஆமூர் வீதிகளின் இருமருங்கும் வாயிலோரம் ஆடவர் பெண்டிர் அகலவிழித் திறந்துகொண்டு
[Full-page illustration; no printed body text.]
கச்சைகட்டிக் களம் சென்ற தம் வீட்டுச் செல்வங்களில் மிச்சம்மீதி, யார் வருவாரென எதிர்பார்த்து நின்றிருந்தார்!
வாள் ஓங்கிப் பிடித்தவாறு வரும் வீரன் - தாய்தந்தை தாள் வணங்கித் தன்னுயிர்ப் பேடைதனைத் தழுவிக்கொள்வான்! மற்றோர் போர்வீரன் களத்தில் மறைந்த செய்தியினை மாலையொன்றை வாளுக்கிட்டுத் தந்து, மறைமுகமாய் வீட்டார்க்கு உரைப்பர்; மகனையிழந்த தாய்தந்தை ஆயினும் மங்கலமிழந்த மனைவியே ஆயினும் மனப்புயல் அடக்கிக்கொண்டு மண்புகழ் ஓங்கிற்றென்பார் - அவர் கண்மட்டும் சோகம் காட்டும் - நெஞ்சம் புண்பட்டுப் போவான் கிள்ளி!
ஓரிடத்தில், தந்தை தனக்கென ஓடித்துவந்த யானையின் தந்தங்கள் கண்டு மழலைகள் குதிக்கும்! பிறிதோரிடத்தில், தந்தை ஏன் வரவில்லை அம்மா என்று தளிர்நடைப் பிள்ளைகள் கொதிக்கும்!
குதிரை மீதமர்ந்தவாறு கிள்ளி அவற்றை குமுறுகின்ற உள்ளமுடன் பார்ப்பான் - “நாட்டைக் கொலைக்காடாய் ஆக்குகின்ற போர் ஒன்று தேவைதானா?” என்று குற்றத்தால் குறுகுறுக்கும் தன் நெஞ்சத்தைக் கேட்பான்!
“மாற்றார்; அமைதியெனும் கொள்கையினைக் கோழைத்தனமெனக் கூறும்வரை மாற்றமுடியுமோ மானமிகு வீரர்களின் போர்க்குணத்தை? போர்வாளைப் பகையாளி ஓங்கும்போது - நாம்மட்டும் பூப்பறித்துக் கொண்டிருந்தால்; வீரமெனும் சுடுநெருப்பு; ஈரம்பட்ட கரிதானே?”
உறுத்துதலால் உருக்கிவிட்ட கிள்ளியின் நெஞ்சில் உடனடிக் கேள்விகளாய் இவை பிறக்கும்! “நிறுத்தலாமே போரை” என்ற நியாயவாதம் நில்லாமலே ஓர் நொடியில் பறக்கும்! “போர்வாளைத்தான் காதலிக்கின்றேன் - எனையீன்ற தமிழ்ப் பூமியைத்தான் நேசிக்கின்றேன் - எதிரியின் கூர்வாள் ஒன்று என் மார்பைக் கீறிக்
கொட்டுகின்ற ரத்தம்தான் மணம் வீசுகின்ற சந்தனமாம்! வீரர்களைக் களத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும் வீணனல்ல! வெங்கொடுமைச் சாக்காட்டுப் போர்க்களத்தை நான் விளையாடும் பூக்காடாய் ஆக்கிக் கொண்டேன்! சிங்கமெனச் செருமுனையில் சீறுகின்ற படையிலோர் அங்கம் நான்! அவர்களில் ஒருவன் நான்! களம்பட்டு மாண்ட வீரர்களைத் தொழுதிடுவேன் - அந்தக் கடமை வீரர் வகுத்தவழிதான் எனக்குமென்று, பகைவர் உடல் வாளால் உழுதிடுவேன்!”
இவ்வாறு, உள்ளத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு வெள்ளம் போல் திரண்ட மக்கள் வாழ்த்தொலிக்குக் கையசைத்து முக்காவல் நாடுபெற்ற வெற்றியினைக் கொண்டாடும் முத்துமண்டபத்துள் நுழைந்திட்டான்!
ஆமூர்த்தலைவன் அவனை ஆரத்தழுவி வரவேற்று “அஞ்சா நெஞ்சினனே! நீ பொற்காலம் படைப்பாய்ச் சோழநாட்டில்!” என்றான். சாத்தந்தைப்புலவர் அருகில் வந்து உச்சிமோந்து, “சரித்திரத்தின் வைர எழுத்தாய் ஒளிவிடுவாய்” என்றார்! பின்னர், சுற்றுமுற்றும் பார்த்த புலவர்; “இன்னும் எங்கே காணவில்லை நற்கண்ணையை?”
என்றார்! ஆயிரத்தில் ஒருத்தியாக அரங்கின் கோடியிலே அமர்ந்திருந்தாள் நற்கண்ணை, தன் தோழியுடன்!
“அவளை எதற்காகத் தேடுகின்றீர் புலவரய்யா? அதைக் கொஞ்சம் சொல்லுங்கள் முதலில்” என்றாள்; குவளை மலராம் நற்கண்ணைக்கு அன்னையென வாய்த்திட்ட பெருந்தேவி! “எதற்காகப் புலவர் அழைப்பார் என்று நானறிவேன் குதர்க்கமாய் நீ எதுவும் கேட்டுக் குழப்பாதே” என்று, பெருங்கோழிநாய்கன் குறுக்கிட்டுத் தடுத்து பெருந்தேவி நாச்சியாரைக் கையமர்த்தி வாயடைக்கச் செய்தான்!
“நற்கண்ணை, நல்ல தமிழ்க் கவியரசி என்பதால் நற்கிள்ளி பெற்ற வெற்றியினைப் பாராட்டி அற்புதமாய்ப் பாடல் ஒன்று வழங்கிடுவாள் என்றே, - அன்பு தழைத்திட்ட உள்ளத்தால் - அவளை அழைத்திட்டேன்” என்றார் புலவர்!
“வெட்கம் இன்னும் எதற்காகப் பெண்ணே! கட்கம் ஏந்திய காளையின் முன்னே, கயல்விழியே; நீ நின்று புகழ்பாட்டு உரைத்திட்டால், காலத்தை வென்று நிற்கும் புறப்பாட்டாய் அது, அமையும் கண்ணே! தயங்காமல் சென்றிடுக, அவை நடுவே! உன் பாடல் கேட்டு; மயங்காமல் போகமாட்டான் உன் மனங்கவர்ந்தோன்” எனத் துணிவுரை தந்த தோழியின் செவியில் தோகை நற்கண்ணை உதிர்த்த சொற்கள் - அந்தப் பொற்கொடி புகன்றதுபோல் புறப்பாட்டாய் ஆனது உண்மை!
1. “கண்ணுக்கிடும் மை போன்ற கறுத்த குறுந்தாடியுடன் காலில் வீரக்கழல் அணிந்த இளங்காளையினைக் கண்டு கைவளைகள் தானே கழன்று எனைக் காட்டிக்கொடுக்குமென கன்னியெனைப் பெற்ற என் தாய்க்காக அஞ்சுகின்றேன்! கடும்பகை வெல்லும் கிள்ளியின் தோள் தழுவுதற்கு கனிமரம் கண்ட கிள்ளைபோல் தவிக்கின்றேன் - எனினும், கற்றறிந்தோர் குழுமியுள்ள அவையினை எண்ணினால், இந்த நற்கண்ணையினை நாணம் வந்து தடுக்குதடி!”
தோழி குறுக்கிட்டு, “ஆதியிலே இருந்திருக்க வேண்டுமிந்த அறிவெல்லாம்! - இப்போது பாதிப்பனை ஏறியபின் அஞ்சுவதால் என்ன பயன்? மீதிமரம் ஏறினால்தான் நுங்கெடுத்துச் சுவைக்கலாம்! பீதிகொண்டு இறங்காதே! பின்னர் பித்து கொண்டு திரியாதே!” தோழியின் சொற்கேட்டு நற்கண்ணைத் துணிவுடனே எழுந்து வந்து - அவையோரைத் தொழுது நின்றாள்!
ஆழியின் முத்துப் போல் தமிழ் எடுத்து ஆமூர்த் தலைவனுக்கு வணக்கம் சொல்லி, அறிஞர் பெருந்தகை சாத்தந்தையின் அடிதொட்டு வாழ்த்துப் பெற்று, அயலாரை வென்று வந்த உறையூர் இளவரசைக் கயலாடும் விழியாலே கண்டு களித்து; அவன் அஞ்சா நெஞ்சுக்கோர் எடுத்துக்காட்டை; அவள், அவனை நினைத்தேங்கும் அகத்துறைப்பாட்டை;
வெற்றி விழா காண வந்தோர் வியந்து போற்ற நெற்றியினைச் சுருக்கிக் கொண்டு, தாய் மட்டும் விழித்துப் பார்க்கப் பாடுகின்றாள்!
2. வலிய தன் பாதத்தால் தாக்குண்ட விலங்குகள், வலப்புறம் வீழ்வதல்லால் இடப்புறம் வீழ்ந்தறியா வேங்கைப்புலிகளையும் வேட்டையாடி வெல்லுகின்ற “யாளி” என்னும் மிருகங்கள் குன்றனைய யானைகளைக் கொன்று அதன் கொம்புகளை முறிக்கின்ற, குளிர்ச்சோலையடர் மலைத்தொடர்களிடையே கூர்வேல் ஒன்றை மட்டும் துணையாய்க் கொண்டு - எனது போர்த்தலைவன் தனியனாய் வருவதற்கு அஞ்சிடான்! அவனைப் பிரிந்திருக்கும் நானோ அந்தப் பிரிவென்னும் நோயினால் அவதியுறுகின்றேன்!
பனித்துளி பொழியும் என் கண்களைத் தேற்றி இனி ஆற்றுவதுதான் எவ்வாறு தோழி?”
