சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 99 · 99 / 104
* “இறவுப்புறத்து அன்ன பிணர்படு தடவுமுதல் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பி னன்ன அரும்பு முதிர்பு நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப! இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் செலீஇய சேறிஆயின்; இவளே வருவை ஆகிய சில்நாள் வாழா ளாதல்நற்கு அறிந்தனை சென்மே!”
*
(நற்றிணை : பாடல் : 19 பாடியவர் : நற்கண்ணையார்)
பொருள் விளக்கம் :
இறவு = இறாமீன். சுறவு = சுறாமீன். பிணர் = சொரசொரப்பு. மருப்பு = யானைத்தந்தம். நன்மான்உழை = நல்ல பெண்மான். உரவுநீர் = கடல். செலீஇய சேறிஆயின் = செலுத்திடச் செல்வாயானால்.
*
ஒருதலைக் காதல்
8
களத்தில் வீசிய கைவேல் எனவே கடுகிப் பறந்தாள் நற்கண்ணை! அவ்வேல் களிறுடல் புகுந்து வந்தாற்போல களைத்துச் சோர்ந்து பூமியில் உதிர்ந்தாள்!
கண் விழித்துப் பார்த்தபோது; புலவர் காலடியில் தலையிருப்பதுணர்ந்தாள் - “மனப் புண்ணாற்ற மருந்திடுவீர் என நினைத்தேன்; தண்ணார்ப் பெருங்கடல் மூழ்கிடு கலத்தை மீட்க, எண்ணார் கிள்ளி என்பதை உணர்ந்தும் மண்ணாற் செய்த பாண்டமாய் எமது மதிப்பை அவை நடுவே போட்டுடைத்ததேனோ?”
என்று அழுதுகொண்டே அனல் கக்கும் சொல்லால் கேட்டாள்!
“அம்மா; நற்கண்ணை! அழுதென்னைக் கொல்லாதே! அவைக் களத்தில் நான் அவசரமுற்றேன் எனினும் உண்மையில் நடந்தது தெரியாது உனக்கு! உறையூரான் மகன் உள்ளத்தை அறிவதற்கு, போர்முனையின் ஓய்வற்ற பாசறையில், உனக்காக; ஓர் இரவு அவனோடு மனந்திறந்து உரையாடினேன்.
முடியட்டும் போர் பிறகு பேசலாம் - நாளைப் பொழுது விடியட்டும் வெற்றிச் செய்தியுடன்; எனக்கூறி, நற்கிள்ளி, புன்னகையைத் தவழவிட்டுப் போனவுடன், நம்பிவிட்டேன் நான் அவனை; நாணத்தால் நழுவிப் போகின்றான் என்று!
தென்றலுக்குத் தடை விதிக்கும் சோலையுண்டா? தேனருவித் தழுவுதலை ஏற்காத மலைதான் ஏது? - இந்தத் தென்னவனும் கன்னியுன்னை மணப்பான் என்றே மன்றலுக்கும் உன் தந்தையுடன் நாள் குறித்து மண்டபத்தில் அறிவித்து மனநிறைவு கொண்டுவிட்டேன்; மறுத்தான் கிள்ளியென்றவுடன் நான் மாண்டுவிட்டேன்!
இப்போது உயிரற்ற உடல்தானம்மா உன்னோடு பேசுவது! சாறற்ற சக்கைதானம்மா இந்தச் சாத்தந்தை! கயிறற்ற பம்பரங்கள் சுழல்வதில்லை; கவிகற்ற உன்நெஞ்சுக் கென்நிலை புரியுமம்மா!”
விழியாறு பெருகியோடித் தாடியின் வெள்ளிமுடி வெண்முத்துக்களைத் தாங்கிநிற்க, பழிவந்து சேர்ந்ததே எனப் பதைத்துப்போன புலவரிடம்; மொழியிலே அமைதி குழைத்து நற்கண்ணை, பேசலுற்றாள்!
“வேண்டாம் புலவரே; வேதனைக்கு விடையளிப்பீர். சாத்தந்தை என்றும் சாகாத்தந்தை; தமிழுக்கு! பொன்மணிக் குவியலும் வைர வைடூரிய முத்துக் குன்றமும், நன்மணிமாடக் கூடங்களும் கோட்டைக் கோபுரமும், தொழுதேத்திப் போற்றுகின்ற கொற்றக்குடை ஆட்சியும், தோத்திரத்தால் உயர்ந்துள்ளம் கொள்ளை கொள்ளும் காட்சியும், இன்றிருக்கும், நாளை இல்லாமற் போகக்கூடும்! என்றுமிருக்கும் பணியன்றோ தமிழுக்குச் செய்கின்ற பணி! எனவே தமிழ் உள்ளளவும் வாழ்வீர் நீவிர் - இந்தத் தரணி உள்ளளவும் தமிழும் வாழும்!”
என்றாள் நற்கண்ணை!
“நல்லதம்மா; நான் இனி வாழும் காலமனைத்தும் மெல்லத் தமிழ் சாகாமல் காப்பதற்கே செலவிடுவேன்! வெல்லச் சொல் கவிபுனையும் பெண்பாவாய் - நீ மட்டும், செல்லத்தான் வேண்டுமோ கிள்ளியினைப் பின்தொடர்ந்து?”
இவ்வாறு கேள்வி கேட்ட புலவருக்கு எவ்வாறு விடையளிப்பதென்று நாணி; “உறையூர்க்கு என்ன வேலையாய்ச் சென்றுளார் கிள்ளி?” என்று உடனடியாய்ப் பேச்சுதனை மாற்றிவிட்டாள்!
“தித்தனுக்கும் கிள்ளிக்குமிடையே - ஒரு தத்துவப் போர் நடந்ததாலே மகன் தந்தை மனத்தாங்கல் விளைந்து - அதனால் மாற்றார்க்கு இடம் கொடுத்துப் போனதம்மா!
1. வெண்சங்கம் முழங்கிடவும் வெற்றி முரசு கொட்டிடவும் வேல்விழி மங்கையர் ஏற்றும் விளக்கொளி வரிசை காண்பதற்கும்
[Full-page illustration; no printed body text.]
விரைந்து வரும் மாலைப்பொழுதுக்குரிய வீரை வேண்மான் வெளியன் தித்தன் - என்று, முதுகூற்றனார் எனும் புலவர் - தமிழ் மதுவூறும் கவிமலரால் புகழ்ந்தார் தித்தனை!
அம்மட்டோ?
2. சீரும் சிறப்பும் செழிப்புறு நாடும், சிறிய கண்கொண்ட பெரிய யானைப்படையும் பெற்று, போருக்கிளையா தித்தனின் ஆற்றல் பூத்துக் குலுங்கிடும் உறையூர் - என்று; ஏறுநடைப் புலவர் நக்கீரப் பெருமான் ஏடு கொண்டெழுதியுள்ளார் தித்தன் பற்றி! அவனுக்கோர் மகளுண்டு ஐயை என்பாள் - உன் ஆருயிர்க் கிள்ளிக்கு அன்புத் தங்கை! அந்த ஐயையினை முன்னிறுத்தி அவள் தந்தை தித்தன் என்று பரணராம் பெரும் பாவாணர், பாராட்டிப் பாட்டெழுதியுள்ளார் எனில் - அந்தப் பாவையின் பெருமையைப் பகர்வதும் எளிதோ?
அதனையும் கேள்!
3. கலகலவெனப் பரல்கள் உருண்டொலிக்கும் காற்சிலம்பணிந்து ஆம்பல்மலர் மாலைசூடி அரமிட்டறுத்த பொன்வளையல்கள் பொலிவுற்று அழகிய முன்கை இரண்டும் அசைந்திட, முத்துப் பவளமொடு அணிகலன் பூண்டு மூங்கில் எனவே தோள்கள் பூரிப்புக் கொண்டு கற்பெனும் பொற்புடைக் கன்னியாம் கவின்மிகு ஐயையின் தந்தை; மழையெனக் கொடை வழங்கும் மாவெண் தித்தன் எனும் மன்னன்!
பரணர் புகழ்ந்த அந்தப் பாவையை மணந்திட பற்பல வேந்தர்கள் பகற்கனா கண்டனர்!
நற்கிள்ளிக்கும் அவன் தந்தைக்கும் நல்லுறவு இல்லையென்று கேள்வியுற்று நல்ல சமயம் இதுதான் என்றும் - இதனை நழுவ விடுதல் கூடாதென்றும், பவானியாற்றுப் பகுதி ஆண்ட சேரர் தலைவன்
“பல்வேற்கட்டி” எனும் பெயருடையான்; தித்தன் மகளாம் தித்திப்பு மாங்கனியை மணப்பதற்கு முத்திரை ஓலையொன்றுடன் தூதனை அனுப்பிவைத்தான்.
