உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 90
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 90 · 90 / 104

நாட்டுடைத் தலைவன் அதுகேட்டுப் போர்நடை போட்டு முன்வந்து - அந்தக் காட்டெருமை மனிதனை மற்போரில் வீழ்த்தமுயன்று தோற்று விட்டான்!

“ஆமூர் இனிமேல் வெற்றிபெற்ற தனக்குத்தான் உரிமையென்று ஆகா! ஊகு!” என்று கத்திய மல்லன் முன்னே, விண்ணில் நட்சத்திரமொன்று வீழ்கின்ற வேகத்தில் மண்ணில் ஓங்கி உதைத்தவாறு குதித்து; “மல்லனே; நில்லடா!” என மார்தட்டிக்கொண்டு மறவர்குல மாவீரனொருவன் அந்த மனிதமிருகத்தின்மேல் பாய்ந்தான்!

யார் அது? யார் அது? என ஆமூர் அதிர்ந்தது! பார் அது; உறையூர் தித்தன் மகன் பெருநற்கிள்ளியென்று கையொலி செய்தது ஒரு கூட்டம்! என்ன ஆகுமோ என, கண்கலங்க நின்றது மற்றோர் கூட்டம்!

ஆமூர் தலைவனுக்கே கிட்டாத வெற்றி, அகவையிற் குறைந்த இளைஞனுக்குக் கிட்டுமோ என்று மூக்கின்மேல் விரல் வைத்து முக்காவல் நாட்டுமக்கள் திகைத்து நின்றார்!

“ஊதினால் துரும்பெனப் பறந்திடுவாய்; உனக்கு இத்தனை ஆணவமா?” என்று மோதினான் முரட்டு மல்லன் கிள்ளியின்மேல்!

சண்ட மாருதச் சுழற்சிபோல் நடந்திட்ட மற்போர் நிகழ்ச்சியை சாத்தந்தையார் வழங்கிய பாடலெனும் பலகணிமூலம் சற்றுத் தொலைவிருந்து காண்போம் நாம்!

மல்லன் மீது துள்ளிப்பாய்ந்த நற்கிள்ளி ஒரு காலை மார்புக்குமேல் மடித்து மற்றொரு காலால் மாற்றானின் தாக்குதல் தடுத்து, முரடனது முதுகின்கண் இறுகப் பிணைத்து; பசியால் மூங்கிலைத்தின்ன முயலும் யானை; அதனை வளைத்தும் முறித்தும் மிதிப்பது போல மல்லனின் தலையும் காலும் மோதியும் முறித்தும் மண்படத்தரையில் வீழ்த்தி மாண்டிடச் செய்த சோழமகனை “போரவைக் கோப்பெரு நற்கிள்ளி” எனப் புகழ் விருது வழங்கி வாழ்த்திய புலவர், புதல்வனது வீரத்தைக் காண்பதற்கு - உறையூர்ப் புவியாளும் தித்தன் வந்திலையே என மனமிக நொந்தார்.

நற்கிள்ளி போர் புரிந்த வேகத்தை சொற்சுவை நனி சொட்டச் சொட்ட உயர்தமிழ்க் கவிஞர் சாத்தந்தை, உவமைகூறி விளக்குகின்றார்; இதோ:-

*

“சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப் பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ; ஊர்கொளவந்த பொருநனொடு, ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!”

*

(புறநானூறு : பாடல் : 82 பாடியவர் : சாத்தந்தையார்)

இதற்கு உற்ற பொருள் நான் கற்ற தமிழில் அளிக்கின்றேன். இந்த உவமை நயத்தின் இனிமையை நீவிர் உணர்ந்திடுவீரே!

“கட்டில் பின்னும் கடைநிலைப் பாட்டாளியொருவன் - அதனை விற்றுப் பிழைக்கத் திருவிழா தொடங்குமுன் விரைந்தோடிட வேண்டும் - அவ்வேளையில் கட்டிய மனையாள் பேற்று வலியால் பெரிதும் துடிப்பதாய்ச் சேதி வந்து செவியினைத் துளைத்திட; தன்

செயல் முடித்துப் புறப்பட அவன் படபடக்க - வான வீதியில் கதிரோன் மேற்கே வீழ்ந்து கனமழைக்கான அறிகுறியும் கண்டிடவே கட்டில் பின்னும் அவன் கையூசி எத்தனைக் கடுமையாய் விரைந்து வாரைச் செலுத்துமோ - அந்த ஊசியினும் வேகமாய்ப் போரை முடித்து - எதிரியைத் தூசியென வீசிவிட்டான் வீரன் கிள்ளி!

இவ்வாறு முத்தமிழ் வித்தகரின் பாமாலைக்கும் முக்காவல் நாட்டுமக்கள் பூமாலைக்கும் தலைவணங்கி நன்றியினை; நற்கிள்ளி தெரிவித்தபோது, கலைவண்ண மங்கையொருத்தி ஆங்கே - காதல் அலைபாயும் நெஞ்சுடனே தோழியிடம்; - அன்பால் அவனை விலைகொள்ள முடியுமோ என்று விழியால் கேட்டாள்! நிலைகொள்ள முடியாமல் தவித்திட்ட அம்மங்கை; மலைமுகடு ஏறியிறங்கப் பெருமூச்செறிந்திட்ட நற்கண்ணையெனும் நங்கை!

பொருள் விளக்கம் :

சாறு = விழா. தலைக்கொண்டன = தொடங்கி விட்டன. ஈற்று உற்றென = பிள்ளை பெறுங்காலம் உற்றனள். பட்டமாரி = மழை. ஞான்ற ஞாயிறு = கதிர் மறையும் வேளை. நிணக்கும் = பிணைக்கும். போழ்தூண்டு ஊசி = தோலால் ஆகிய வாரைக் கோக்கும் ஊசி.

*

ஒருதலைக் காதல்

2

பெருங்கோழிநாய்கன் எனும் பெருவணிகன் பெற்றெடுத்த தமிழ்க் கொடிதான் நற்கண்ணை வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் சோழ நாட்டார், கடல் கடந்தும் வாணிபம் பெருக்கியதால் காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் நீரின் வந்த நெடுவேக குதிரைகளும், காலின் வந்த கருமிளகு மூட்டைகளும், வடமலையில் பிறந்திட்ட மணிக்குலமும் மின்னும் பொன்னும், குடமலையில் பிறந்திட்ட நறுமணச் சந்தனமும் அரும்புகை அகிலும், தென்கடல் முத்தும், குணகடல் பவளமும், கங்கையின் விளைவும், காவிரியின் பயனும், ஈழநாட்டு உணவும், கடாரத்துப் பொருளும், இன்னபிறவும் இறக்குமதி, ஏற்றுமதியெனக் குவிந்து தென்னகச் சீர்மை உயர்த்துதல் கண்டு, கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் கரிகால் சோழனின் காலத்து வளமையெலாம் “பட்டினப்பாலை” யாம் பழந்தமிழ்ச் சுவடியில் பதியவைத்துப் பாரோர் போற்ற வைத்தார்!

- அந்தப் பெருமைசேர் வணிகர் வழிவழி வந்தவனாய் பெருங்கோழிநாய்கன் ஆமூரில் விளங்கினான், அன்று!

வணிகர் திலகம் வார்த்தெடுத்த வைரச்சிலை, வடிவழகி நற்கண்ணை கிளிமழலைப் பேச்சுக்காரி! ஒளியுமிழும் கண்களுக்கு உலகமே அடிமையாகும்! களிநடன மயிலசைவு; இடையில், நடையில்! அழகிருக்குமிடத்தில் அறிவொளியும் இணைந்துவிட்டால் அருவியிலாயிரம் தேன்குடம் உடைந்து கலந்ததுபோல்; அமிழ்தம்! அமிழ்தம்! அமிழ்தமன்றோ? - அவ்வாறே கமழ்ந்தாள் நற்கண்ணை; தமிழ் அமிழ்தக் கவியாக!

ஏடெடுத்து மலர்க்கரத்தில் எழுத்தாணி பிடித்து மாடெதிர்த்துக் கொம்புதனை முறித்தது போல்

[Full-page illustration; no printed body text.]

ஆமூர் மல்லனையே வெற்றிகண்டு வீழ்த்திவிட்ட ஆணழகன் நற்கிள்ளி வீரத்தைப் பாட்டாக எழுதி வைத்தாள்.

எழுதியதை, எடுத்தெடுத்துப் படித்துப் பார்த்தாள் ஏனோ; அவளே நாணமுற்றுப் பின்னர் எடுக்காமல் படுத்துப் பார்த்தாள் - தூக்கம் பிடிக்காமல் எழுந்தமர்ந்து; எழுதியதை மீண்டும் மார்பகத்தில் அணைத்துப் பார்த்தாள்!

“கடிக்காமல் இனிக்கின்ற கரும்பும் உண்டோ? - ஆனால் காணாமல் சுவைக்கின்ற காதல் உண்டே! அதற்குத் தேடாமல் கிடைக்கின்ற சான்றாக நானே இன்று மூடாத விழிகளுடன் புரள்கின்றேன்” என்று தன்னைத்தானே நொந்துகொண்டு தளிர்க்கொடியாள் தவித்தபோது; “பொன்னைத்தான் தொலைத்துவிட்ட வறியோன் போலத் துடிப்பது ஏன்?

உன்னைத்தான் கேட்கின்றேன் தோகையே” என்று உயிர்த்தோழி பொற்கொடி அருகில் வந்தாள்.

“துடிப்பது ஏனென்று புரியவில்லையா? நான் படிப்பதைக் கேள்” என்று எழுதிய ஏடெடுத்தாள். எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இருவிழியால் முத்தமிட்டு இதயத்தின் எதிரொலியைத் தோழிக்கு விளக்கிச் சொன்னாள்.