உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 89
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 89 · 89 / 104

(எடுப்பு)

பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால் அருளற்றுப் போனாரோ தோழி? இருள் மூடிப் போகாமல் வாழ்வில் இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?

*

“பழமழைக் கவித்த புதுப்புன வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை இருவிசேர் மருங்கில் பூத்த முல்லை, வெருகுசிரித் தன்ன, பசுவீ மென்பிணிக் குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்

[Full-page illustration; no printed body text.]

வண்டுசூழ் மாலையும் வாரார்; கண்டிசின் - தோழி! - பொருட்பிரிந் தோரே.”

*

(குறுந்தொகை : பாடல் : 220 பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார் (பெண்பாற் புலவர்))

பொருள் விளக்கம் :

பழமழைக் கவித்த = பெய்த மழையினால் தழைத்த. இரலை = ஆண்மான். இருவி = கதிர் கொய்த வரகின் தாள். வெருகு = காட்டுப் பூனை. பசுவீ மென்பிணிக் குறுமுகை = முல்லைப் பூவின் மெல்லிய மொட்டுக் கொண்ட சிறிய அரும்பு. புறவு = முல்லை நிலம். கண்டிசின் தோழி = தோழியே இதனைக் கருத்தில் பார்ப்பாயாக.

*

ஒருதலைக் காதல்

ஒருதலைக் காதல்

1

கற்கண்டுத் தமிழில் கவிதைகள் வடிக்கும் நற்கண்ணை என்றொரு பெண்பாற் புலவர், இகம், பரம் என்று பாடல் இயற்றிக் கொண்டிராமல் அகம், புறம், நற்றிணை எனும் சங்கத் தொகுப்பில் கனகமணிகளாய்ப் பதித்திட்ட பாடல்கள் ஆறு - அவை காதற்கனிகளைப் பிழிந்திட்டக் கவிதையின் சாறு!

அந்த ஆறு பாடலுடன், காவற்பெண்டு எனும் மறக்குலத் தாயொருத்தி களம் சென்ற மகனைப்பற்றி வினவிய கன்னியிடம், புலியிருந்த குகையிதோ எனப்பூரிப்பு பொங்கக்கூறி, புறப்பாட்டு ஒன்றைப் போர்ப்பாட்டாய் இசைத்ததையும், அந்தத்தாய்தான் பெருநற்கிள்ளி யெனும் சோழப்பெருமகனைச் சொந்தத்தாய்போல வளர்த்த செவிலித்தாய் என்பதையும், கிள்ளியின் அழகு, ஆற்றலில் மயங்கி - நற்கண்ணை; அவனை அள்ளிப் பருகுதல்போல் கனவுலகில் மிதந்ததையும், பெருநற்கிள்ளியின் பேராண்மையினை - கவிப் பெருமான் சாத்தந்தையார், பீடுநடைபோடும் புறப்பாட்டாய்த் தீட்டிப் புகழ்மாலை சூட்டியதையும் - சற்று ஆழமாய்ச் சென்று ஆய்ந்து நான் படித்ததாலே ஆலுக்கு விழுதெனவே ஒரு கற்பனை தோன்றிற்றெனக்கு!

நற்கண்ணைக்கு நற்கிள்ளிமீது தாவியெழுந்த காதல், கதையை, பொற்கிண்ணத்துப் பாலாய்ப் பொங்கித் தரையில் வழிந்த “ஒருதலைக் காதல்” எனும் சிறு தொடரோவியமாய்க் குறுங்காதல் காவியமாய்ப் படைக்கின்றேன்; படித்துச் சுவைத்திடுக!

*

பச்சைப் பட்டாடை உடுத்திக் கச்சையுடன் பரதமாடும் பருவமயில்போல - கழனியிலே பயிர்கள் ஆடும் வளமிகு சோழநாட்டின் பழங்காலத் தலைநகராம் உறையூரின்கண் வீரைவேண்மாண்வெளியன் தித்தன் என்பான் வெண்கொற்றக் குடையின்கீழ் வீற்றிருந்து

[Full-page illustration; no printed body text.]

தாரை வார்த்தபடியிருந்தான்; அரசின் பெருஞ்செல்வத்தைத் தபோதனர் நடத்துகின்ற வேள்விக்கும் யாகத்திற்கும்! “தமிழ்மரபுக்கு இது ஏற்றதல்ல,” என்று அவன் மகன் தடுத்து நின்று அதனைத் தொடர்ந்து எதிர்த்தும் வந்தான்.

சோழவேந்தன் தித்தனோ; தன்மகன் பெருநற்கிள்ளி சொல்லுகின்ற கருத்தையெல்லாம் புறக்கணித்து அறியாக்குழந்தை; நோய் போக்கும் கசப்பு மருந்தின் அருமை தெரியாமல் அதனை அருந்திட மறுத்துத் தட்டுதல்போல நற்கிள்ளியளித்த நல்லுரை எதனையும் ஏற்றிட மறுத்து, நாட்டின் செல்வம் வாரியே இறைத்தான்.

“அரசு கருவூலத்தை நிரப்புவது குடிமக்கள் வேலை! அவர் வாழ்வைத் தரிசு நிலமாக்கி இதயத்தில் சொருகுவதோ வேலை? கொற்றவர்க்கு அழகு குடிதழுவிக் கோலோச்சல்; கொள்கை அற்றவர் செயலோ நல்ல குறிக்கோளுக்குச் கொள்ளிவைத்தல்! பாலும் தேனும் பசுநெய்யும் குடம் குடமாய்த் தீயிலூற்றிப் பலியாக ஆடு, மாடு, குதிரையெலாம் வெட்டி வீழ்த்தி, அவிர்ப்பாகம் பெறுவதற்கு யாககுண்டங்கள் வளர்த்துத் தவமிருத்தல் ‘அன்பே கடவுள்’ எனும் தத்துவத்தின் அடிபீடம் ஆட்டுகின்ற செயல்மன்றோ?”

எனக் கேட்டுத் தடுத்தான் கிள்ளி!

“நாடாளும் மன்னன் நான் எனை எதிர்த்து என்மகன் நீயே நாத்தழும்பேறி நாத்திகம் பேசுவதோ? உன் நாவை அறுத்து நாய் நரிகளுக்கிடுமுன் நடந்திடுக நாட்டை விட்டு;” என ஆணையிட்டான் தித்தன்!

“இன்றே பிரிகின்றேன் எனைப்பெற்ற உறையூரை; ஆனால் மன்னா; ஒன்றே தெய்வமென்றும் அதற்கு உயிர்ப்பலி வேண்டாமென்றும் நான் கூறியதை நாத்திக மென்கின்றீர் - நீரோ; வான்மீது தொங்குவதாய்க் கூறுகின்ற சொர்க்கம் காண வையகத்தை நரகமாக்கி வதைக்கின்றீர் உயிர்களையே! பித்தனையும் தெளிவிக்கக் கூடும்; ஆனால் என் தந்தையாம் தித்தனை இனித் திருத்தல் இயலாதென்ற முடிவோடு போகின்றேன்” என்று பொற்கோவாம் பெருநற்கிள்ளி உறையூர்விட்டு

முக்காவல்நாட்டு ஆமூர் சென்றான்! அக்கணமே சொற்கோவாம் சாத்தந்தையெனும் புலவர் பிரானும் சோழன் முன் நிற்காமல் கிள்ளியினைப் பின்தொடர்ந்தார்.

அரசிளங்குமரனே கொண்ட கொள்கைக்காக அரியாசனம் துறந்த பின்னர், அவைப்புலவர் பதவியது அற்பமென எட்டித்தள்ளி, தமிழ்க்குலத்தின் மானம், வீரம், பண்பாடு, மரபு தாழாது காப்பதற்குச் சூளுரைத்துக் கிள்ளியின் அருகிருந்தார்.

முக்காவல் நாட்டு ஆமூரில் ஒருநாள் முரட்டு மல்லன் ஒருவன் தோள்தட்டி ஓடிவந்து, “என்னை வென்றிடுவார் யாருண்டு இவ்வூரில்?” என முழக்கி அறைகூவல் விடுத்ததோடு - தன்முன்னே நிற்கமுடியாமல் அவ்வூரார் தோற்றுவிட்டால் முக்காவல் நாடு முழுமையும் தனக்குரிமை ஆகு”மென்றான்!