உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 88
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 88 · 88 / 104

(முடிப்பு)

காதலுக்குத் தடை சொல்லக் கூடாதென்று - ஒரு கட்டழகுப் பெட்டகத்தைத் துணை சேர்க்க; அவன் கருத்துக்கு ஏற்பதொரு கன்னியின்மான தனம் கொண்டு திருமணிப்புடன் மனமுடிக்கக் காத்திருந்தேன்; அவனே களிறுகளைப் பந்தாடிப் புரவிகளைப் பஞ்சாக்கிக் கயவர்களின் வாள்முனையை நெஞ்சில் தாங்கிக் காதலியைத் தவிக்கவிட்டு காலத்தை நகர்த்துகின்ற இந்தக் கிழவியையும் கண்ணீரில் மிதக்க விட்டு கடமையினை முடித்து விட்டான்! களிப்பொரு பக்கம் - கண்ணில் நீர் ஒரு பக்கம் காட்டும் பெற்ற மகனை வாழ்த்துகின்றேன்!

கருவில் சுமந்த தாயல்லவோ; அதனால் வாழ்கின்றேன்!

(எடுப்பு)

என் இருவிழி மழைதனைக் காணுதீர்; என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!

*

“மீனுண் கொக்கின் தூவி அன்ன வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர் நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.”

*

(புறநானூறு : பாடல் : 277 பாடியவர் : பூங்கண் உத்திரையார்)

பொருள் விளக்கம் :

வால்நரை = வெண்மையாக நரைத்த. நோன்கழை = வலிய மூங்கில். துயல் = அசைவும். வெதிரம் = மூங்கில் மரம் நிறைந்த ஒரு மலை. தூங்கிய சிதர் = தேங்கிய மழைத்துளி.

*

இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ?

(இசைப்பாடல்) இராகம் : சண்முகப்பிரியா தாளம் : ஆதி

(எடுப்பு)

பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால் அருளற்றுப் போனாரோ தோழி? இருள் மூடிப் போகாமல் வாழ்வில் இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?

(தொடுப்பு 1)

கார் காலம் தலைகாட்டத் தொடங்கு முன்னர் நேரிழையே நான் வருவேன் என்று நெற்றியிலே முத்தமிட்டு நெருங்கிப் பின்னர் தேர் ஏறிச் சென்றவர் ஏன் இன்னும் வரவில்லை?

(எடுப்பு)

பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால் அருளற்றுப் போனாரோ தோழி? இருள் மூடிப் போகாமல் வாழ்வில் இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?

(தொடுப்பு 2)

வளமை கொழிக்க வாழ்வதற்குப் பொருள் தேவையென்று வாணிபத்தை நடத்துதற்கு ஏனப் பிரிந்து போனவர்க்கு இளமை துடிக்க இங்கொருத்தி ஏங்குகின்ற நிலைமை - அவர் இதயத்தில் இரக்கத்தை ஏற்படுத்தாமை; என்ன புதுமை! என்ன புதுமை!

(எடுப்பு)

பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால் அருளற்றுப் போனாரோ தோழி? இருள் மூடிப் போகாமல் வாழ்வில் இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?

(தொடுப்பு 3)

பசலை நிறம் படர்ந்து விடும் என் உடல் முழுதும் எனச்சொல்லி பசுஞ் சோலைப் பூமித்தை மீது அவர் கரம் பிடித்து நான் அழுதும் பயனில்லை என்பதனை உணரும்போது; தீயிட்ட பஞ்சாகப் போகுதடி நெஞ்சம்! பரிவு காட்டும் இயல்பு மட்டும் இருந்தாலே கொஞ்சம்; பிரிவுத் துயரால் தகித்திடுமோ இந்த மலர் மஞ்சம்?

(எடுப்பு)

பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால் அருளற்றுப் போனாரோ தோழி? இருள் மூடிப் போகாமல் வாழ்வில் இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?

(முடிப்பு)

வாடை நோக்கி வளர்கின்ற வரகின் கதிரை - ஆண் மானின் கூட்டம் மேய்கின்ற அழகைப் பார் தோழி; அருகில் பூனை சிரிப்பது போல் முல்லை அரும்பின் கூட்டம் பூவை ஏன மாயக்குழி அவர் வரவில்லையெனும் வாட்டம்! பூத்திட்ட முல்லையிலே அமர்ந்து தேன் மொண்டு, சுத்திட்டுக் களிக்குது பார் அழகான வண்டு! காத்திருப்பாள் மகரந்தப் பூங்கொடி என்று கவலை தீர்க்க அவர் ஓடி வருவாரோ இன்று?