உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 91
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 91 · 91 / 104

*

“என்னைக்கு ஊர் இஃது அன்மையானும், என்னைக்கு நாடு இஃது அன்மையானும், ஆடு ஆடு என்ப ஒருசாரோரே; ஆடன்று என்ப ஒரு சாரோரே; நல்ல, பல்லோர் இருநன் மொழியே; அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், முழா அரைப் போந்தை பொருந்தி நின்று, யான் கண்டனன் அவன் ஆடாகுதலே”

*

(புறநானூறு : பாடல் : 85 பாடியவர் : நற்கண்ணையார் பாடப்பட்டோன் : சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளி)

“சுடுங்காதல் நெருப்பாலே சுவைப்பண்டம் சமைத்து

கடுந்தமிழ்ச் சொல்லாலே இப்பாடல் இயற்றியுள்ளேன். இனியவளே! என் தோழி பொற்கொடியே! இதன் கருத்தை எளிய நடையில் கூறுகின்றேன், கேள்!

உளங்கவர்ந்த என்னுயிர்த் தலைவனுக்கு ஊரும் இதுவல்ல; நாடும் இதுவல்ல - அதனாலே ஒரு சாரார் அவன் தோளில் வெற்றிக்கிளி தொத்துமென்றும், மறுசாரார் மல்லனுக்கே வெற்றி - இந்த மறவனுக்கு இல்லையென்றும், இரு கருத்தை உதிர்த்தார் எனினும் இருவருமே இவனைத்தான் நினைத்திருந்தார் என்பதிலே என் மனதுக்கோர் மகிழ்ச்சி தோன்றி அன்பனது வெற்றி உறுதி உறுதியென்று சிலம்பொலிக்க ஓடிச்சென்ற நான் உளம் சிலிர்க்கப் போர் முடிவை எதிர்நோக்கி - என் மனையின்கண் வளர்ந்துயர்ந்த பனைமரத்தின் மறைவில் நின்று நினைவனைத்தும் அவன்மீது பாயவிட்டு, எனைக்கவர்ந்தோன் இறுதியிலே வென்றுவிட்ட காட்சி கண்டேன்.”

இப்படிப் பாட்டும், பாட்டுக்குப் பொருளுமுரைத்து வாட்டும் காதல் நிறைவேற வழியொன்று சொல்லென்று வரம் கேட்டுத் தோழியிடம் தவமிருந்த நற்கண்ணைக் கரம் பிடித்துத் தோழி சொன்னாள்;

“செந்தாமரை மலரே! நீ தேடும் செங்கதிரோன்; செக்கர்வானத்தில் நெடுந்தொலைவில் இருப்பதாக எண்ணிடாதே! முந்தாநாள் முரட்டு மல்லனை வீழ்த்திய மழவன் முதுபுலவர் சாத்தந்தைப் பெருமானுடன் - இங்கிருந்து மூன்று வீடு தள்ளித்தான் இருக்கின்றான். வந்தால் நீ என்னோடு; காட்டுகின்றேன்” என்றாள்.

“தடாகம் நோக்கி வானம் தானாக வந்துவிட்டால் தாமரைக்குச் சூரியன் கைக்கெட்டும் தொலைவுதான் - எனினும், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனும் பெண்ணியல்பு எச்சரிக்கை செய்து என் கையைத் தடுக்குதடி! வலுவில் சென்று நான்; அவன் வலையில் விழுந்த கதை உளறிவிட்டால்

வாய்விட்டுச் சிரித்து அவன் வந்தவழிபோ என்று உரைப்பானேல், காய்க்காமல் கனியாமல் என் காதற்பூ; காலை அரும்பி அப்போதே காய்ந்த மலர் ஆகாதோ? கதிரை, நிலவைக் கண்டதுண்டு என் கண்கள் கடலை, வானை, மலையை, முகிலை, மயிலை, புறாவை, கிளியை, குயிலை, சிங்கம், புலியை, சிறுத்தையை, மானை, இயற்கையின் எழிலை, இன்பப் பொழிலை, செயற்கைச் சிலையை, சிறப்புறுகலையை கண்டன எனினும் என் கண்கள் கணத்தில் மீண்டு முகத்தில் அமைந்தன!

இன்றென் நிலைமை என்ன தெரியுமா? - அந்த இனியனைக் கண்ட கண்கள் இன்னும் என்னிடம் வந்து சேரவே இல்லை! உன்னிடம் சொன்னேன் இந்த உண்மையினை”

என்றுரைத்த, நற்கண்ணைக்கு வந்துள்ள நோயை எந்த நாட்டு மருத்துவரும் போக்க முடியாதென்று பொற்கொடியாம் அவள் தோழி - இச்செய்தியினைப் போட்டுடைக்க நினைத்தாள் பெருங்கோழிநாய்கனிடம்!

அப்போது, “மகளே; நற்கண்ணை!” என்றழைத்தவாறு மாநாய்கன் மனை புகுந்தான்! “மகிழ்வு தரும் தகவல் ஒன்று கேளம்மா! மல்லனை வென்றிட்ட பெருநற்கிள்ளியினை, நாளை பகல் விருந்துக்கு வருகவென்று நம் வீட்டுக்கு அழைத்துள்ளேன்! சாத்தந்தைப் புலவரது சம்மதம் பெற்று, அவனும் சரியென்று ஒப்புக் கொண்டான்” என்றுரைத்தார்.

மணிமலர்ப்பாத சின்னவிரல் சிலிர்க்கத் தொடங்கி மாங்கனிகள் இரண்டும் மென்மேலும் புடைத்தெழுந்து மங்கைநல்லாள் மேனியெலாம் புல்லரித்து மருதாணிச் சிவப்பாகக் கன்னங்கள் மாறித் தோன்ற மான்குட்டி தோற்கின்ற துள்ளலுடன் நற்கண்ணை; மயக்கம் வராமலே தோழியின் மடியில் சாய்ந்தாள்!

பொருள் விளக்கம் :

என்னைக்கு = என் தலைவருக்கு. அன்மையானும் = இல்லாவிடினும். ஆடு = வெற்றி. போந்தை = பனைமரம். குடமலை = மேற்குமலை. குணகடல் = கீழ்த்திசைக்கடல்.

*

ஒருதலைக் காதல்

3

தோழி பொற்கொடியைத் தூது விடுத்துக் காதல் தொடர்கதையைத் தொடர்கலாம் என்றிருந்த நற்கண்ணைக்குத் தேடிச்சென்ற செல்வம், அவளே நாடி வந்தது போல் நற்செய்தி வந்ததெனினும், தந்தை சொன்ன மற்றோர் செய்தி; அவள் சிந்தையில் பெருங் குழப்பத்தை மூட்டியது!

பகைநாட்டு வேந்தொருவன் ஆமூரைக் கைப்பற்ற முதலில் பசுமந்தை மடக்குதற்குப் படையோடு வருகின்றானென்றும், அப்படையை விரட்டுதற்கு ஆமூர்த் தலைவன்; ஆற்றலாளன் கிள்ளியினைத் தளபதியாய் அனுப்பிவைக்கத் திட்டமிட்டு வேண்டினன் என்றும், கால்நடையைக் கவர்கின்ற பகை எதிர்த்து நடத்துகின்ற களப்போராம் “கரந்தை” எனும் போருக்குக் கிள்ளி - நாளை மாலை முரசறைந்து புறப்படுவான் என்றும், நற்கண்ணை வீட்டுக்கு விருந்துண்ண அதற்கிடையே வருவானென்றும், பெருங்கோழிநாய்கன் முழுக்கதையும் முடித்தபின்தான் பெருமூச்சைப் புறந்தள்ளி உயிர்மூச்சு வரப்பெற்று; நாவை அசைக்காமல் பாவை நற்கண்ணை, நெஞ்சுக்குள் தந்தைக்கு வாழ்த்துச் சொன்னாள்!

*

தானுண்டு தன் வேலையுண்டு என இராப்பொழுதும் பகல் பொழுதும் தாரணியில் இயற்கையிட்ட கடமையினை இடையறாது செய்து வந்தபோதிலும் தங்கள் தங்கள் நிலைக்கேற்பக் காதலர்கள் இரவு பகல் இரண்டினையும் ஏசுவதும் ஏற்றிப் போற்றுவதும் இயல்பேயன்றோ! மேனியிரண்டும் ஒன்றுகி மேதினியை மறந்திருக்கும் போது ஏனிந்த இரவுக்கு அதற்குள்ளே முயலோட்டமென மிகச் சினந்து குதிப்பாரும் உண்டு!

[Full-page illustration; no printed body text.]

பகல் எல்லாம் உள்ளத்தை வதைக்கின்ற தாபத்தை படுக்கையிலே ஒரு கைபார்ப்போலெனச் துளைப்போர்; அந்திமாலை வந்தவுடன் அகம் குளிர்ந்து, மந்திப் பகல் தொலைந்ததென்னும் மகிழ்ச்சியிலே - காதல் சந்திப்புக்குத் தோதாக வருகின்ற இரவுக்கு வாழ்த்துரைப்பார்!

இங்கு நற்கண்ணை நாயகியின் நிலையே வேறு! துங்கு நிகர் நெடுங்கண்கள் விழித்தவாறு,

இரவெல்லாம் படுக்கையிலே உறக்கமின்றி நிமிர்ந்தும், சாய்ந்தும், புரண்டும், எழுந்தும் நினைவெல்லாம் கிள்ளியாக நிலைகுலைந்தாள்!

அதற்குள் இரவு முடிந்ததோ என்று அணைப்புக்குள் கிடப்பவர்கள் அதிர்வதுண்டு! ஆனால் இவளோ; ஏனிந்த “ஆமூர் இரவு” மட்டும் ஆமைபோல் நத்தை போல் நகர்கின்றதென அலட்டிக் கொண்டாள்!

“ஆருயிராம் என் கிள்ளியினை வரவேற்கும் வாய்ப்புதனே; அதிகாலைக் கதிர் விரைவில் எழுந்தாலன்றே பெறமுடியும்! இவ்வூர்ச் சேவலுக்கென்ன இருமலா? சளியா? காய்ச்சலா? இல்லையெனில் தொண்டையில்தான் அடைப்பேதும் உண்டா? இன்னும் ஏன் ஊர்ச்சேவல் விடியலுக்குக் கூவவில்லை? இச் சோம்பேறிகள் கூவாவிடில் வைகறைதான் விழித்திடாதோ? தோழி எங்கே போய்விட்டாள்? அவளிருந்தால் கோழி போலக் கூவச் சொல்லிச் சூரியனை எழுப்பலாமே!”