உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 76
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 76 · 76 / 104

உற்றார் உறவினர் பெற்றோர் எனத் தூயதமிழ் கற்ற புலவருக்குச் சொந்தம் மிகவுண்டு! நெடுநாளாய் இதயத்தில் ஒரு சுமை; அவரைக் கடுமையாய் அழுத்தியதால் கவலை கொண்டார்!

“இன்பதுன்பம் மாறி மாறி வருகின்ற

இவ்வாழ்க்கையிலே

என்ன கண்டோம்? எதற்காக இந்த வாழ்வு? அதோ! தோலையுரித்து மேல் கீழாய்ப் போட்டதுபோல் அணுவளவு மாற்றமின்றிக் காட்சிதரும் களர்நிலத்தில் வேடன் கை அம்புக்குச் சிக்காமல் விரைந்தோடி

[Full-page illustration; no printed body text.]

வேகமாய் மறைந்து தப்பிவிட்ட தனியொரு மானைப்பார்த்தால் நானும் அதுபோலத் தனித்து வாழ்ந்து; வாழ்வின் நலிவு பொலிவு என இரண்டும் மோதி நசுங்காமல் தனிமரமாய்ச் சொந்தபந்தமின்றி விடுவித்துக்கொண்டால் இனிமையெனும் அமைதி சூழும்! இதயக்கனம் நீங்கும்!”

இவ்வாறு சிந்தித்து முடிவுக்கு வருவதற்குள் - புலவர் இமையிரண்டும் நீர்துளிர்க்க எண்ணிப்பார்த்தார்; “எனைநம்பி இருக்கின்றார் சுற்றத்தார் இல்லத்தார் அவரைத் தனிவிடுத்து நான் மட்டும் தப்பிவிடல் நியாயமல்ல! காலைப்பிணைத்து நிற்கும் உறவுடைய இக்கூட்டத்தை நூலைக் கத்தரித்தல் போல் அறுத்துவிடல் இயலாதென்று கூடிவாழ்வதே ஏற்புடைய கொள்கை” யெனத் தமிழில் பாடி மகிழ்ந்தார்; அதனைத் தேடியெடுத்துத் தொகுத்தோர் வாழ்க; வாழ்கவே!

*

“அதள் எறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவன் ஆட்டும் புல்வாய் போல, ஓடி உய்தலும் கூடும்மன்; ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.”

*

(புறநானூறு : பாடல் : 193 பாடியவர் : ஓரேருழவர்)

பொருள் விளக்கம் :

அதள் = தோல். எறிந்தன்ன = மேல் கீழாய்ப் புரட்டி வைத்தது போல. நெடுவெண் களர் = நெடிய வெளிய களர் நிலம். ஆட்டும் புல்வாய் = துரத்தப்படும் கலைமான். ஒக்கல் வாழ்க்கை = சுற்றத்தோடு கூடி வாழுதல். தட்கும் = பிணைத்துத் தடுக்கும்.

*

கண்கண்ட சாட்சி உண்டோ?

“மணக்க மணக்க மலருது முல்லை - என்னை மணந்ததாகச் சொன்னவர் இன்னும் வரவில்லை! மணற்பரப்பில் செடிகொடி மறைவில் அவரென்மடியில்; கணப்பொழுதும் அகலாதிரு கண்ணா என; நானவர் பிடியில்! அணைத்து மகிழ்ந்து அளவிலா அன்பினைப் பொழிந்து; ஈருடல் இணைத்துக் கிடந்து; இமையென அவரும் விழியென நானும்; விளக்கிட முடியா இன்ப விருந்தினை அருந்தி; விந்தைகள் ஆயிரம் புரிந்ததை மறந்து - வேதனைத் தீயில் எனைக் கருக்கிடும் தலைவன் - இனியும் சோதனை செய்தல் ஆகுமோ தோழி!

ஓருயிராய் நாங்களாகி உலகத்தை மறந்ததும் பொய்யா? ஆருயிரே; உனைமணந்தேன் என அவர் உறுதியளித்ததும் பொய்யா?

“உறுதி வழங்கியமைக்கு உண்டோ சாட்சியம்? உரைத்திடுக!” என நீ வினவுகின்றாய் தோழி - அங்கே எனை அணைத்திருந்த அவரேதான் சாட்சி; அவர் பனை வைரத்தோளில் நான் முகம் பதித்திருந்தபோது; தினைத்தாள்போல் கால் கொண்ட நாரையொன்று - தீனியாகக் கிடைக்காதோ ஆரைமீன் என்று; ஓடுகின்ற நீரை உற்றுப்பார்த்தபடி நின்றதடி! ஒருக்கால் அது எம்மைப் பார்த்திருந்தால் தவிர; களவு மணம்புரிந்த மாட்சிக்கு, இல்லையடி; கண்கண்ட மற்றோர் சாட்சி!”

[Full-page illustration; no printed body text.]

என அழுதாள் தலைவி; தோழியின் கரம்பிடித்து “என்னுயிரை விரைவில் அழைத்துவா!” எனத்தொழுதாள்.

*

“யாருமில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங்கால ஒழுகுநீ ராரல் பார்க்கும் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.”

*

(குறுந்தொகை : பாடல் : 25 பாடியவர் : கபிலர்)

பொருள் விளக்கம் :

ஒழுகுநீர் = ஓடும்நீர். ஆரல் = ஒருவகை மீன். தினைத்தாளன்ன சிறுபசுங் கால = தினையின் அடித் தண்டு போன்ற சிறிய பசுமையான கால் கொண்ட. குருகு = நாரை. மணந்த ஞான்றே = களவு மணம் புரிந்தபோது.

*

ஓர் உவமை; இரு காட்சி!

தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன், தலைவணங்கான் பகைவர்க்கு; தலைதருவான் தமிழுக்கு! வெற்றிபெற்றுப் போரில் வாகைசூடவில்லையெனில்; கற்றறிவாளர் மாங்குடிமருதன் தலைமையில் சூழ்ந்த; புலவர் பெருங்கூட்டம் பாடாதொழிக நான் ஆளுகின்ற நிலவரையென்றே சூளுரைத்த தமிழ்மகன்; வீரத்திருமகன்!