உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 75
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 75 · 75 / 104

முல்லை மலர்ப்பெண்ணை மருமகளாய்க் கொள்வதற்கு; மூத்த தமிழ்க்குடிமக்கள் தருகின்ற தொகையைத்தான் -

பரிசப்பணம் என்பர்!

அக்கால வழக்கில் அதனை “முலைவிலை” எனப் புகன்றார்

எனில்;

இக்காலத் தமிழர்க்கு அது விரசமாய்த் தோன்றுந்தான்! மணப்பெண் இவள்தான் இவனுக்கென்று உறுதியாகத்

தேர்ந்தவுடன்,

பணமுடிப்புடன் பரிசம் போட்டு மணமகள் வீட்டாரிடம் -

பரிவுடன் வழங்கவேண்டும்!

கலித்தொகையில் முல்லைக்கலியில் ஒரு தகப்பன்; தன் கட்டழகுப் பூங்கொடியைப் பரிசப் பணமின்றித் தருவதற்குத் தயார் என்று தோள்தட்டி அறிவிக்கின்றானாம்; அதனைத் தமிழ்ப்புலவர் சோழன் நல்லுருத்திரனார் என்பார்; சுவைபடச் சொல்லுவதைப் படிக்கும்போழ்து - பலாச் சுளையினை வெல்லுகின்ற தித்திப்பை உணர்வோம் நாம்!

குத்திக் குடல் கிழித்துக் கொலை புரியும் கொடிய கொம்புடைய காளைதனை அடக்குதற்குக் காளையவன்; எத்தகைய உணர்வோடு ஈடுபட வேண்டுமென முத்தனைய பெண்ணைப்பெற்ற அத்தந்தை கூறுகின்றான் கேளீர்!

[Full-page illustration; no printed literary text.]

“கொஞ்சி மகிழும் குமரியின் கொங்கையினை அவள்

காதலன்;

வஞ்சியே என வாரித் தழுவுதல்போல் - சிறிதும் அஞ்சிடாமல் காளையின் கொம்பிடையே

தாவிடுவானேல்;

அட்டியில்லை அவனுக்கு என்பெண்ணைத் தருவதற்கு! பரிசப்பணமென்று ஒரு காசு, தூசும் தேவையில்லை; பரிசாக என்மகளை அடைவதற்கு அவனேதான்

தகுதியாவான்!”

கொம்பிரண்டைக் கண்டு குன்றாமல் குமையாமல்; - காதலியின் இரு கொங்கையிடைப் பாய்கின்ற இன்ப உணர்வுடனே - விளைப்பதுதான் வீரமென்பதற்குக் கல்லின்மேல் செதுக்கியுள்ள சான்றாக இன்றைக்கும் கலித்தொகையின் முல்லைக்கலிப் பாடல்; திகழ்கின்ற காட்சியினைக் காணுகின்றோம்! ஒரு தமிழனின் திண்தோள் பகைவர்முன் சற்றுச் சாய்ந்திடிலோ மிகமிக நாணுகின்றோம்!

*

“விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின்........”

*

(கலித்தொகை - (முல்லைக்கலி) பாடல்: 3 பாடியவர்: சோழன் நல்லுருத்திரனார்)

*

பொருள் விளக்கம் :

கொலையேறு = கொலைவெறிகொண்ட காளைமாடு. கோடு = கொம்பு.

*

உறவுடன் இணைந்து உயர்ந்து வாழ்க!

இயற்பெயர் தெரியாப்புலவர் எண்ணற்றோர் - சங்க இலக்கியத்தில் செய்யுள் வடிவத்தில் வாழுகின்றார்! இவர்களில் ஒருவர்க்கு “ஓரேர் உழவர்” எனப்பெயருண்டு! இனிய காதலியை அடைவதற்குத் தவித்தோடும் தலைவனது; இதயத்துடிப்பைக் குறுந்தொகைப் பாட்டொன்றில் இவர் உவமை காட்டிக் கூறும் விதம் மிக அருமை!

நன்செய் புன்செய் நிலம் நல்ல மழைபெய்து நிறைந்த சமயம் நாலைந்து ஏர்கொண்டு உழுது பயிர்நடுதற்கு இயலாமல் ஒரேர் மட்டுமே உடையதோர் உழவன், கைப்பிசைந்து உளம் துடித்துத் துவளுதல்போல்; சீரார் காதலியை உடன் காண முடியாமல் சிந்தை கலங்கி நின்றானாம் அத்தலைவன்! ஒரேர் உழவனை உவமைப்பொருளாக ஆக்கியதால், “ஓரேருழவர்” என்றே இப்புலவர் பெயர் பெற்றார்!