சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 77 · 77 / 104
‘மதுரைக் காஞ்சி’யெனும் தமிழர் மாண்புகூறும் நூலொன்றை மாங்குடி மருதனார் அவனுக்கென யாத்தளித்தார் என்றால்; அஃது - எட்டுத்திக்கும் அவன் வெற்றிமுரசுகொட்டி - மீனக்கொடி கட்டிவாழ்ந்தான் என்ற வரலாற்றின் எடுத்துக்காட்டன்றோ? புறமுதுகிட்டுப் பகைவரை ஓடச்செய்யும் போர்க்களம் புகுதலே புகழீட்டித் தருகின்ற வழியென்று; எப்போதும் வாள்தூக்கி எதிரிகளை மோதிக்கொன்று; தப்பாது வெற்றிமாலை குவித்துக் கொண்டு; ஒப்பாரும் மிக்காரும் இல்லையெனப் பாண்டி மன்னன் உயர்ந்து நின்றான் எனினும்; புலவர் பிரான் மருதனார்; மறத்துறையில் வேந்தன் பொழுதெலாம் கழிப்பதையே மாற்றி, அறத்துறையில் செயல்கள் பல தொய்வின்றி ஆற்றிட வேண்டுமென்று; மதுரைக் காஞ்சியினைப் பாடலுற்றார்; அந்தத் தேன் மதுரக் காஞ்சியிலே ஓர்உவமை இரு காட்சி ஆடவிட்டார்!
மதம் பிடித்த யானையொன்று கட்டுத்தறியொடித்துக் காலால் வதம் செய்தே பரிக்கோல்காரனைக் கொன்று; பாகனையும் வீசியெறிந்து;
கம்பத்தை விடுத்துக் கரிய பாறையொன்று, உருண்டு கண்மண் தெரியாமல் அனைத்தையுமே அழிப்பதுபோல் செயல்படுமாம்! மதயானையின் செய்கைக்கு உவமையாகப் பெரும்புலவர்; மாங்குடி மருதனார் காட்டுகின்ற மற்றுமொரு காட்சியினை இங்கு காண்போம்!
‘பனை’யெனும் ஒருவகைப் பெரிய மீனினமும், பல்வகைச் சங்கினமும் உலவி, மேயும் கடலினிலே; மரக்கலமொன்றில் கொடிய சூறைக்காற்று - திடுக்கெனத் தாக்கி வலிய கயிற்றினை அறுத்து; பாய்மரம் கிழித்து அதனை அடியுடன் முறித்து; பலமிகு நங்கூரக் கல்லையும் பெயர்த்து வீழ்த்தித்தனது பயங்கர மூச்சால் படுநாசம் விளைப்பதுபோல் பதைத்துக் குதிக்குமாம் பாகனை மீறி யானையின் மதமும்! சங்கின் ஒலிகள் முன்னும் பின்னும் முழங்கிடும்போது, பொங்கும் மதத்தால் சுழலும் யானையாய்ச் சீறுமாம், சூறையும்!
ஓர் உவமை இரு காட்சி என ஒப்பிட்டுக் கூறுகின்ற கற்பனையின் அருமை; ஓங்குபுகழ் மாங்குடி மருதனாரின் தமிழாய்ந்த திறமைக்கோர் பெருமை!
*
“பனை மீன் வழங்கும் வளைமேய் பரப்பின் வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக் கூம்புதல் முருங்க எற்றிக் காய்ந்துடன் கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரை இ நெஞ்சுழிப் பட்ட நாவாய் போல இருதலைப் பணில மார்ப்பஞ் சினஞ் சிறந்து கோலார்க் கொன்று மேலோர் வீசி மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக் கந்து நீத் துழிதருங் கடாஅ யானையும்.....”
*
(பத்துப்பாட்டு - மதுரைக்காஞ்சி) (375 முதல் 383 முடிய) (பாடியவர்: மாங்குடி மருதனார்)
*
[Full-page illustration; no printed body text.]
பொருள் விளக்கம் :
பனைமீன் = ஒரு வகைப் பெரிய மீன். வளை = சங்கு. வீங்குபிணி = இறுகிய பிணைப்பு. நோன்கயிறு அரீஇ = வலிய கயிற்றை அறுத்து. கல்பொருது = நங்கூரக்கல்லுடன் மோதி. நாவாய் = மரக்கலம். பணிலம் = சங்கு. கோலோர் = பரிக்கோல்காரன். மேலோர் = யானைப்பாகர். வன்றொடர் = காலில் கட்டிய சங்கிலி. காழ் = கட்டுத்தறி. கந்துநீத்து = கம்பத்தை விட்டகன்று. உழிதரும் கடாஅ யானை = சுழலும் மதங்கொண்ட யானை.
*
உச்சிக்குச் சென்ற நொச்சி!
உற்றார் உறவினர் பெற்றோர் அறியாமல் விற்புருவ மங்கையாள் வேல்பிடித்த வீரனுடன்; பொற்றாமரைக் குளத்தருகே எழிற்பொழிலிடையே; கற்பாள் களவு இன்பம் களிப்போடு - பின்னர்; களம் காணச் சென்ற அந்த வீரன் இன்னும் - அக் காதலியைக் காணத் திரும்பி வரவில்லை என்பதாலே, கனவு பல கண்டு கண்ணீர் மிகப் பெருக்கிக்கொண்டு நினைவு சிதறி நிற்கும் நிலைபார்த்து நெஞ்சு நெகிழ்ந்து; வீணைமொழியாளை வெறிபிடித்து வாட்டுதென்று வெறியாட்டு நடத்திவைத்து முருகக் கடவுளையே வழிபடுவர்!
அறியாப்பெண் அவள் என்று பெற்றோர்கள்; அவள்மனம் அறியாத காரணத்தால் வெறியாட்டு நடத்துவதை; கவிச்சரமாய்த் தொகுத்தளித்த கவிப்பெருமாட்டி காமக்காணியாரை வெறிபாடிய காமக்காணியார் என அழைப்பர்!
களம்பட்ட காளையொருவனைப் புகழ்ந்தேத்தி அந்தக் காமக்காணியார் பாடிய புறப்பாடல் ஒன்றுண்டு! போருக்குச் சென்ற புலிப்போத்து நிகர் வீரன் - தன் மாருக்குள் புகுந்த ஈட்டியுடன் மாண்டு கிடந்தான். கச்சணிந்து, கவசம்பூண்டு, கட்கமேந்திச் சென்றபோது நொச்சிமாலைச் சின்னத்தையும் அணிந்து சென்றிருந்தான். அமர்க்களத்தில் அடுக்கடுக்காய் வீழ்ந்துள்ள பிணங்கள் தின்ன, அகன்ற வாய்ப் பருந்துகளும் வட்டமிட்டுச் சூழ்ந்தபோது; அவன் அணிந்திருந்த நொச்சிமாலை, குருதியில் நனைந்ததாலே; அதனையும் குடல் என்று கருதிப் பருந்து தூக்கிக்கொண்டு; ஆகாயத்தில் பறந்திட்ட காட்சியினைக் கண்டபோது; அஞ்சாநெஞ்சுடை வீரன் அணிந்திட்ட காரணத்தால் அன்றோ
[Full-page illustration; no printed body text.]
துச்சமென உயிரைக் கருதிப் போரில் வீழ்ந்தவனின் நொச்சி மாலைக்கும் இத்துணை உயர்வு கிடைத்ததென்று; மெச்சிப் புகழ்ந்து பாடி - அதைப்படிக்கும் நமக்கெல்லாம்; உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு வீர உணர்வை ஊட்டுகின்றார் கவிஞர்! இதனை; உள்ளத்தில் பதிய வைப்போம்! உலகறியப் போற்றி நிற்போம்!
*
“........................................ ............................ இனியே வெருவரு குருதியோடு மயங்கி, உருவு கரந்து, ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப் பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம் மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே;”
*
(புறநானூறு - பாடல் - 271 பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார்)
*
பொருள் விளக்கம் :
இனியே = இப்பொழுதோ. உருவுகரந்து = உருமாறி. ஒறு = சிதைந்த. தெரியல் = நொச்சிமாலை. ஊன்செத்து = ஊனென்று நினைத்து. உகப்ப = உயரக் கொண்டுபோக. மலைந்தமாறு = அணிந்திருந்ததால்.
*
பாறையில் உருகுது பசு வெண்ணெய்!
