சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 72 · 72 / 104
*
“ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப், புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! இன்னாது அம்ம, இவ்வுலகம்; இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.”
*
(புறநானூறு : பாடல் 194 பாடியவர் : பக்குடுக்கை நன்கணியார்)
பொருள் விளக்கம் :
பக்கு = பை. நெய்தல் = சாக்காட்டுப்பறை. கறங்க = ஒலிக்க. ஈர்ந்தண் முழவு = இனிய ஒலியுடைய முரசம். பாணி = ஒலி. பைதல் உண்கண் = துன்பத்தை வெளிப்படுத்தும் மையெழுதிய கண். பனிவார்பு உறைப்ப = நீர் பொழிந்து விளங்க.
குறிப்பு :
இப்புறநானூறுப் பாடலுக்கு விளக்கவுரை எழுதிய அறிஞர் பெருமகனார் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:
“பக்குடுக்கை நன்கணியார் காலத்தே நாட்டில் வாழ்ந்த வேந்தர்கட்கும் ஏனைச் செல்வர்கட்கும் உலக வாழ்வில் பெரு விருப்பந் தோன்றி, ‘மெய்வலி யுடையார்க்கே இவ்வுலகம் உரியது; உலகத்திற் பிறந்தாரனைவர்க்கும் பொதுவென்பது பொருந்தாது’ என்றும், ‘அவ்வலியைக் கெடாது பேணிக் கொள்ளற்குச் செல்வம் இன்றியமையாமையின், செல்வந் தேடுவது வலிவுடையார்க்கேற்ப’ தென்றும் கருதி, அவற்றிற் கேற்ப நாளும் போரும் பொருளீட்டமுமே நினைந்தொழுகப் பண்ணிற்று.
இதன் விளைவாக நாட்டில் இன்ப வாழ்வுக் கிடனில்லையாயிற்று. இதனைக் கண்டார் நம் பக்குடுக்கை நன்கணியார். ‘இவ்வுலகம் இனிதன்று; ஒரு மனையில் சாப் பறை முழங்க, ஒரு மனையில் மணப்பறை முழங்குகிறது. ஒருத்தி பூவணியாமற் பொற்புற்று விளங்க, ஒருத்தி கணவனைப் பிரிந்து கண்கலங்கி நிற்கிறாள். இவ்வாறமையுமாறு இவ்வுல கினைப் படைத்தவன் பண்பு அறிந்தொழுகும் பாடில்லாத வனேயாவான். இவ்வுலகின் இத்தன்மையை அறிந்தவன் இத னிடையே கிடந்து உழல வேண்டுமென்பதன்று.
இதனிற் சிறந்த இன்ப உலகத்து இன்ப வாழ்வு காண்டலை வேண்டி யவனாவான் என இப்பாட்டால் வற்புறுத்தலானார்.”
❀
மாமழை கண்ட மகிழ்ச்சி!
இளைப்பாறச் சிறுநிழலின்றி ஏங்கித்தவித்த தவளையொன்று எடுப்பாகப் படமெடுத்து வெயில் தாங்காமல் வாலூன்றி -
நின்றிருந்த
பாம்பின் நிழலுக்குக் கீழே; அது தன் பகையின் நிழலென்றே
அறியாமல்;
பதுங்கிக்கொண்டு மூச்சுவிட்ட பயங்கரக் கோடையென; வடமொழிப்புலவன் காளிதாசன் வர்ணித்தானே - அத்தகு வறட்சிப்புயலின் கொடுமை வீசிய கோடையது!
இன்நிழல் இல்லாது வருந்திய தன் பெண்மானுக்குத் தன்நிழலையே தந்து, தான் மட்டும் வெயிலில் நின்றது -
ஆண்மான் என;
கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில் பெருங்கடுங்கோ; கடும் பாலை வெப்பத்தைப் பாடினானே அந்தக் கோடையது!
ஆடிக்களித்த கண்ணாளனின் பிரிவுத்துயரால்; கண்மணியாள் வாடி வடித்த கண்ணீரும் வற்றிப்போய் விழியிரண்டும் -
வறண்டதுபோல்;
கூடிக்குவிந்து முகில் கொட்டுகின்ற மழையின்றிக் காய்ந்து; குன்றம்போல் உயர்ந்த கரைகொண்ட குளங்கள் எல்லாம்
வெறுந்தரையாகும்!
தேடிவந்து இரைதேடி மகிழ்ந்திருந்த பறவையினம்; -
இனிவேறிடத்தை
நாடிச் சிறகடித்துப் பறப்பதுதான் நலமாம் என்று; திட்டமிட்டுப் புறப்பட்டுத் திசைமாறிச் சுழன்று, வட்டமிட்டு வளமுள்ள குளமெங்கே என்றலையும்!
நீர்தேங்கிக் கழனிமண்ணும் பண்படாத காரணத்தால் ஏர்தூங்கும்; உழுவதற்கும் பயிரிடுவதற்கும் பயன்படாமல்! பார் முழுதும் பஞ்சமோபஞ்சம் என்ற சொல், கூர் அம்பாக நெஞ்சில் குத்துகின்ற வேளையிலே;
[Full-page illustration; no printed literary text.]
வானம், திடுமெனக் கறுத்து, வந்தது மழையெனில்; வந்த மழையும் வானமே கிழிந்தது போல் பொழிந்ததெனில்; வயல் காய்ந்த காரணத்தால் வாடிய உழவனுக்கும், வளம் அழிந்த காரணத்தால் வருந்தியழுத மக்களுக்கும்; கயல் துள்ளும் இனிமேலே குளங்களிலே என்று களிப்புற்றுக் குடமெடுத்து நீர் எடுக்கப் போகின்ற மகளிருக்கும்; எத்துணை மகிழ்ச்சி ஏற்படுமோ என் தலைவி; அத்துணை மகிழ்ச்சியுனக்கு ஏற்படப் போகுதென்றாள் தோழி!
