சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 73 · 73 / 104
“ஏனடி?” என்று ஏந்திழை தோழியின் தவடையைத்
தடவினாள்!
“தேனடி நான் சொல்லப்போகும் சேதி உனக்கு; கேளடி தலைவி; உனை மணக்கத் தலைவன்; ஏறிய தேரடி அதோ விரைந்து வருகின்ற” தென்றாள்!
*
“........ நாடு வறம்கூர, நாஞ்சில் துஞ்சக் கோடை நீடிய பைதுஅறு காலை குன்று கண்டன்ன கோட்ட, யாவையும் சென்று சேக்கல்லாப் புள்ள, உள்இவ் என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப் பெரும் பெயல் பொழிந்த ஏம் வைகறை, பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந் தற்றே - சேண்இடை ஓங்கித் தோன்றும் உயர்வரை வான்தோய் வெற்பன் வந்த மாறே!”
*
(அகநானூறு - பாடல் - 42 (களிற்றியானை நிரை) பாடியவர்: கபிலர்)
பொருள் விளக்கம் :
வறம் = பஞ்சம். நாஞ்சில் = ஏர்கலப்பை. பைது = பசுமைமிகு வளம். கோட்டம் = குளம். சேக்கல் = தங்குதல். வீசி = உதவிபுரிந்து. வந்தமாறு = மணம்புரிய வருகின்றார்.
*
பொய்யாகிப் போகாதோ?
வெற்றிகளை விளைத்திட்ட வேளிர் குலத் தலைவனவன் பற்றுக்கொண்ட பாவலர்க்குப் பரிசில்களை வழங்கிடுவோன் “எவ்வி” யெனும் பெயர்படைத்து எத்திக்கும் ஏற்றிப் போற்றுகின்ற புகழ் பெற்றான்!
கவ்வி உலகுதனைக் கறுப்பாக்கும் இரவின் கடுமை குறைந்து காலையிளம் பொழுது தொடங்குகின்ற வேளையிலே ஒருசெய்தி விடுபட்ட கணைபோல வந்து “வெள்ளெருக்கிலையார்” எனும் வித்தகப்புலவர் செவிதனில்
புகுந்ததம்மா!
என்ன செய்தியது? என்ன செய்தியது? நீடூர் ஆண்ட மன்னவனாம் “எவ்வி” மாண்டனன் போர்முனையில் என்ற, பொல்லாச் செய்தியது! பொல்லாச் செய்தியது! “அது பொய்யாகிப் போதல் கூடாதோ” எனப் புலம்புகின்ற புலவர் பிரான்; அந்தப் பொய்யும் எப்படிப் பொய்யாகப் போகவேண்டுமென்கின்றார்; புரிகிறதா?
களிறுகளைக் கவிஞர்கட்குப் பரிசாகத் தருகின்ற களமஞ்சா மாவீரன் “அகுதி” யென ஒருவனிருந்தான். ஒருவருமே அவனை வெல்ல உலகில் பிறக்கவில்லையென்றும் -
போர்க்
கருவியொன்று அவன் வசத்தே உண்டென்றும் - அதனைப் “பொன்புனைதிகிரி” யெனப் புகல்வர் என்றும்; பொருதிட வருவோர் எவரும் அதன்முன் புறமுதுகிடுவர் என்றும்; எங்கணும் ஒரு பேச்சு இருந்திட்ட காரணத்தால் சிங்கமும்; சுண்டெலிபோல் அடங்கிற்றாம் அவன் பேர் கேட்டு!
அவனைப் பகைப்பதற்குத் தயங்கிக்கொண்டு அயலார் அஞ்சி நடுங்கியிருந்த காலமும் மாறி; “அமர்க்களத்தில்,
[Full-page illustration; no printed literary text.]
அரிமாவாம் அகுதியெனும் படைத்தலைவன் போரிட்டு அழிந்துபட்டான்” என்ற உண்மை தெரிந்தவுடன்; “பொற்றிகிரி”யென்ற பொன்னாலான சக்கரப்படைக்கருவி
பற்றி
புனைந்திட்ட கருத்தெல்லாம் பொய்யாகப் போயிற்றென்பார்! அப்பொய்போல ஆகிவிடக் கூடாதோ - “எமது அன்புக்குரியோன் எவ்வி; புண்பட்டுப் போரில் மாண்டான்” என்ற செய்தி எனப் புலம்பிக்கேட்டு புலவர் ஏறு; கன்றொன்று பசுவிழந்த நிலைபெற்றுக் கலங்கி நின்றார்!
*
“பொய்யாகியரோ! பொய்யா கியரோ! பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச் சீர்கெழு நோன்றாள் அகுதை கண் தோன்றிய பொன்புனை திகிரியின் பொய்யாகியரோ! இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண் போர் அடுதானை, எவ்வி மார்பின் எஃகு உறு விழுப்புண் பல என வைகுறு விடியல், இயம்பிய குரலே.”
*
(புறநானூறு பாடல் - 233 பாடியவர்: வெள்ளெருக்கிலையார்)
*
பொருள் விளக்கம் :
