உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 71
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 71 · 71 / 104

சாவிலே வீழ்ந்துவிட்டான் - ஆவிதான் போனபின்னும் உயிர்வாழும் ஆரணங்கு அச்சடித்த தமிழ்ப்பதுமை - கூவி அழுதாள் - கொத்தான மலர் இந்தக் குடும்பம்! அதைக் கொத்தாமல் கொத்திவிட்ட கொடும்சாவைப் பழித்தாள் - இழித்துரைத்தாள்! இனி என்ன மிச்சம்! என்றும், கனி அழுகிப் போனதென்றும் கதறி அழுதாள்!

பனிவெல்லும் விழிகாட்டி, பனைவெல்ல மொழி உரைத்து, பள்ளியறைக் கவிபாடும் நாளெல்லாம் மண்தானோ? இனிஇது தூங்காத கண்தானோ? என அழுதாள்! அத்தான் பிணம் கிடக்கும் களம்நோக்கித் தொழுதாள்!

*

சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள்காதில், வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டதுதான் தாமதம்! “கெட்டதுதான் கெட்டது என்குடி - முழுவதுமே பட்டொழிந்து போகட்டும்” என எழுந்தாள்! “மட்டில்லாப் புகழ்கொண்ட நாட்டுக்கே அன்றி வீட்டுக்கோ வாழ்வேன்” என்றாள் வட்டிலினால் நாழி பார்க்கும் விதங்கண்ட தமிழ்நாட்டு மாதரசு, தொட்டிலிலே இட்டுத் தான் வளர்த்த தூயசெல்வன் அட்டியின்றிக் கல்விகற்க, ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவு கொண்டாள்!

அங்கு சென்றாள். “அம்மா” எனப் பாய்ந்தான், அழகுமிழும் மழலைமொழி அன்புத் தங்கம்! “அப்பா, தாத்தா, ஊர் திரும்பினாரோ?” என்றான் “திரும்பி வந்து சாவூர் சென்று விட்டார் கரும்பே - நீயும் வா” என்றழைத்தாள். “என்ன வாங்கி வந்தார்?” என்றான்! “மானம்! மானம்! அழியாத மானம்” என்றாள் - “மகனே! அதைச் சுவைக்க நீயும் வருக!”

என்றாள் வந்துவிட்டான் - குலக்கொழுந்து! குடும்ப விளக்கு எரிந்து கொண்டே, கூறுகின்றாள்

“எதிரிகளின் படையெடுப்பால் - நம் குடும்பம் தழை உதிர்த்துவிட்ட மரமாகப் போனதடா தம்பீ! கவலையில்லை - களம் சென்றார்; மாண்டார்! ஆனாலும் இந்த, நிலம் உள்ளவரையில் ‘மானங்காத்தார்’ என்ற பெயர்பூண்டார்! என் மகனே! நீயும் தோளில் பலம் உள்ளவரையில் பகையைச் சாடு! பரணி பாடு! இது உன் தாய்த் திருநாடு! - உடனே ஓடு!”

எனத், தாவி அணைத்துத் தளிர்மகன் தன்னைச் சீவிமுடித்துச் சிங்காரித்து, ரத்தக் காவிபடிந்த வாள்கொடுத்துச் “சென்று வா மகனே, செருமுனை நோக்கி!” என வாழ்த்திவிட்ட திருவிடத்துக் காட்சிதனைப் - போற்றிப் பாடாதார் உண்டோ! திருமகளே! இந்தப் பூவுலகில்? ......

*

“கெடுக சிந்தை கடிதிவள் துணிவே முதின் மகளிர் ஆதல் தகுமே மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்ஐ யானை யெறிந்து களத்தொழிந் தனனே நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன் பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்தும் வெளிதுவிரித்துடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே.”

(புறநானூறு : பாடல் : 279 பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார்)

பொருள் விளக்கம் :

தன்ஐ = தந்தை. நெல் உற்ற செரு = நேற்று நடந்த போர். வெளிதுவிரித்து = வெள்ளாடை அணிவித்து. பாறுமயிர் = பரட்டை முடி.

*

புதுப் பாட்டுப் புலவன்!

சொத்து சுகம் வாழ்வுச் சுவையனைத்தும் தமக்கென்று சொல்வார்தமைச் சுயநலத்துப் பெருச்சாளியென்று கத்து கடல் போல முழங்குகின்ற பாட்டாளி வர்க்கத்தார்; களம் அமைத்து வளமனைத்தும் பொதுவென நிலைநாட்டக் கண்களிலே கனல் வழியக் கயமைதனைச் சுட்டெரித்துக் கரங்களிலே கொடிபிடித்துப் போர்முரசம் கொட்டுகின்றார் - அந்தக் குமுறும் எரிமலை மனிதரைக் கண்டு குளிருதடா நெஞ்சம்; குறுநகை உதட்டில் மின்ன திரும்பிப் பார்க்கின்றேன் கொஞ்சம்!

அடடா! வியக்கின்றேன்; மெய்சிலிர்க்கின்றேன், விழிவிரித்துப் புறநானூற்று இலக்கியத்தைப் படிக்கின்றேன்; பழைய நாள் தமிழகத்தில் நமைப்போலத் துடிக்கின்ற உளத்தோடு ஒரு புலவர்; தனியுடைமையாளர்களின் ஆதிக்கம் தகர்ப்பதற்கும் இனியொரு வாழ்வு தமக்குண்டோ என்றேங்கி; தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்து வீழ்ந்து போகின்ற தரித்திரர்கள் கூட்டத்தின் கொடும் வறுமைச் சரித்திரத்தை மாற்றி அமைப்பதற்கும்; சங்கப் பாடலொன்றைத் தந்துள்ளார்!

பக்குடுக்கை நன்கணியார் என்பது அவர் பெயராம் - பையொன்றை உடையாகப் பகுத்துடுத்தார் என்பதாலே பாராட்டிப் போற்றிப் பலரும் தந்த அடைமொழிதான் “பக்குடுக்கை” யெனப் பகன்றிடுவர் சான்றோர்! பையாம் அந்த உடுக்கையினையும்; அவர் பாங்குடனே நன்கு அணியார் என்ற காரணத்தால், பக்குடுக்கை நன்கணியார் என்று பார்த்தவர்கள் பட்டம் சூட்டியிருக்கவும் கூடும்!

எளிய உடை, எளிய தோற்றம், எளிய வாழ்வு:- இவற்றுடனே, ஏற்றத் தாழ்வற்ற நிலை இந்த மானிட சாதியிலே

என்றைக்கு மலருமென்ற கவலையுடன் - அவர் அன்றைக்கே பாடிவைத்தார் என்பதுதான் பெருஞ்சிறப்பு! மணமுழவு ஒலித்தது கேட்டார் ஒரு மனையில்; மற்றோர் இல்லில் மரணப்பறை ஓசையையும் கேட்டுவிட்டு, மனமொடிந்தார்!

மண்மீது வாழ்வதும் சாவதும் மனிதர்க்கு இயல்புதான் எனினும்; இவர்கண்ட நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் இருவேறு காரணங்கள் இருப்பதுணர்ந்தார்!

மணமுரசம் செவிபிளக்க மா, பலா, வாழையெல்லாம் மங்கல விழாப் பந்தலிலே நிறைந்திருக்க மணித்தேரில் மணமக்கள் பவனிவர மலைபோலப் புலால் உணவும் மதுக்குடமும் மாடமாளிகையில் விருந்தினர்க்கு எதிர் இருக்க எலும்பும் தோலுமன்றி எள்ளளவு சதையுமிலா ஏழையர்கள் கூட்டமொன்று வீதியிலே எச்சில் இலைகள் எல்லாம் மிச்சம் மீதியுடன் எப்போது வெளியில் வந்து விழுமென்று பசிக்களைப்பால் மெய் சோர்ந்து பாதிக் கண்மூடி தவமிருக்கும் காட்சிதனைப் பார்க்கின்றார், பக்குடுக்கை நன்கணியார்!

பனித்துளிகள் அவர் விழிப் பூவில் எட்டிப் பார்க்க பக்கத்தில் மற்றோர் பரிதாபக்கதை நடந்ததையும் கேள்வியுற்று அங்கு சென்றார்! பாவையொருத்தி; பொற்சிலைபோல் அழகுடைய பூங்கொடியாள் சாவை அழைப்பதல்லால் வேறு வழியின்றித் தன் சரித்திரத்தை முடித்துக் கொண்டாள்! இளமையிற் கொண்ட காதல் இனிது நிறைவேறாமல் அவளின் வறுமை நிலை வெறுத்துவிட்டுப் பெண் வேண்டாமென மணமகனைப் பெற்றவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டார் என்பதாலே; குற்றமிலாக் குலவிளக்கு, கொடுஞ்சாவின் மடிதனிலே வீழ்ந்து

விட்டாள்!

பூக்காட்டுப் பைங்கிளியின் வீட்டோரம்; புலவர்பிரான் சாக்காட்டுப் பறைகேட்டுப் புலம்பிவிட்டார்; அந்தப் புலம்பல்தான் புரட்சிக் கருத்தாக வெளிப்பட்டு புறநானூற்றுப் பாடலாக புத்தொளி காட்டுதிங்கே!

[Full-page illustration; no printed literary text.]

மலரணி பூண்டு மகிழ்ந்து புணர்ந்திடும் காதலர் ஒருபுறம்; மலைவீழ் அருவிக்கண்ணீர் உகுத்து மாண்டு மடிந்திடும் மகளிர்

ஒருபுறம் -

இன்ப வாழ்வனைத்தும் ஒரு சாரார்க்கென்றும் துன்பம் ஒரு பிரிவினர்க்குத் தொடர் நிழல் என்றும் - மனிதப் பண்பிலாதவர்கள் படைத்த இலக்கணம்; இந்த மண்ணுலகில் பெருங் கொடுமையன்றோ?

இதனை மாற்றியமைத்து இவ்வுலகைப் பொதுவாக்கி எல்லார்க்கும் எல்லாமென்ற குறிக்கோள் எய்திடவே இனிய பணிகள் இன்றே தொடங்கிட எழுக நல்லோர்; என்றார் புலவர்! நாம் நல்லோராயின் நன்கணியார் முன்னே “ஆம்” என்றுரைத்து அவர் சொல்லைச் செயலாக்கிடுவோம்!

நாடு சிறக்க இந்த நானிலம் சிறக்கத் தனியுடைமையெனும் கேடு களைவோம்; மேடு பள்ளமில்லா மேதினி சமைப்போம்!